இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லிவிஸ் (Jonathan Lewis) நியமிக்கப்பட்டுள்ளார்.

  • December 13, 2018
  • 242
  • Aroos Samsudeen
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லிவிஸ் (Jonathan Lewis) நியமிக்கப்பட்டுள்ளார்.

(எஸ்.எம்.அறூஸ்)

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து டர்ஹம் (Durham) பிராந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஜொனதன் லிவிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜொனதன் லிவிஸியின் பயிற்றுவிப்பின் கீழ் டர்ஹம் பிராந்திய கிரிக்கெட் அணி 2013ம் ஆண்டு கவுண்டி சம்பியன் கிண்ணத்தையும், 2014ம் அண்டு ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணத்தையும், 2016ம் ஆண்டு நெட்வெஸ்ட் இருபதுக்கு 20 ரன்னர்அப் கிண்ணத்தையும் பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் அணிகளில் மிகச்சிறப்பாக விளையாடியுள்ள ஜொனதன் லிவிஸ் எஸ்ஸக்ஸ் Essex பிராந்திய அணியில் 1990 -1996 வரை விளையாடியுள்ளார். இதில் 1995ம் ஆண்டு அணித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

பின்னர் டர்ஹம் (Durham) அணியில் இணைந்து கொண்ட ஜொனதன் லிவிஸ் 1997 -2006 வரை விளையாடியுள்ளார். இதில் 2001 -2004 வரை அணித்தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

வலது கைத்துடுப்பாட்ட வீரராகவும், மிதவேகப் பந்துவீச்சாளராகவும் உள்ள ஜொனதன் லிவிஸ் 205 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 10,281 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 16 சதங்களையும், 66 அரைச்சதங்களயும் பெற்றுள்ளார். கூடிய ஓட்டமாக 210 ஓட்டங்களை அடித்துள்ளார்.

டர்ஹம் (Durham) பிராந்திய அணியின் இரண்டாவது பயிற்றுவிப்பாளராக 2013ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜொனதன் லிவிஸ் அப்போது டர்ஹம் (Durham) தலைமைப்பயிற்றுவிப்பாளராக் கடமையாற்றிய குக் மாரடைப்பினால் காலமானதைத் தொடர்ந்து இதே வருடம் தலைமைப்பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஜொனதன் லிவிஸ் டர்ஹம் அணியை மிகச்சிறப்பான முறையில் வழிநாடத்திச் சென்றுள்ளார்.

இங்கிலாந்தின் மிடில்லிக்ஸ் பிராந்தியத்தில் 1970ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி பிறந்த ஜொனதன் ஜேம்ஸ் பெஞ்சமின் லிவிஸ் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் தற்போதைய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நியுஸிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் போட்டிகளில் ஜொனதன் லிவிஸ் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

comments