வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கை வசம்

  • December 16, 2018
  • 168
  • Aroos Samsudeen
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கை வசம்

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவை 3 ஓட்டங்களால் தோற்கடித்து அதிரடியாக வெற்றி பெற்றுள்ள இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி இரண்டாவது தடவையாக சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.

ஆசியக் கிரிக்கெட் சம்மேளனம் (ACC) மூன்றாவது தடவையாக ஒழுங்கு செய்திருந்த இந்த கிரிக்கெட் தொடரில் நடப்புச் சம்பியன் இலங்கை உட்பட, மொத்தமாக ஆசியாவின் எட்டு நாடுகளினது வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றியிருந்தன.

தொடரின் குழுநிலைப் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் இடம்பெற்றிருந்ததோடு குழுநிலைப் போட்டிகளின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இலங்கை மற்றும் இந்தியா ஆகியவற்றின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகள் அரையிறுதிப் போட்டிகளில் முறையே பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவற்றின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இன்று (15) ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைவர் சம்மு அஷான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த ஹாசித பொயகொட அரைச்சதம் ஒன்றுடன் பெறுமதி சேர்த்தார். சிறப்பாக ஆடிய பொயகொட 62 பந்துகளுக்கு 8 பெளண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்திருந்தார்.

ஹாசித பொயகொடவினை அடுத்து ஷெஹான் ஜயசூரிய மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினை பலப்படுத்தினர். ஷெஹான் ஜயசூரிய 46 ஓட்டங்களை குவிக்க, இந்த கிரிக்கெட் தொடரில் நான்காவது அரைச்சதம் பூர்த்தி செய்த கமிந்து மெண்டிஸ் 55 பந்துகளுக்கு 3 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 61 ஓட்டங்களை விளாசினார்.

பின்னர் ஷெஹான் ஜயசூரிய – கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் பின்வரிசையில் ஆடிய வனிந்து ஹஸரங்க 26 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுக்க, இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் அங்கித் ராஜ்பூட் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 271 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி சிறந்த ஆரம்பத்தினை காட்டிய போதிலும் இலங்கை வீரர்களின் திறமையான பந்துவீச்சு காரணமாக அடுத்தடுத்து தமது துடுப்பாட்ட வீரர்களை இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 126 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்த அவ்வணி பெரிய தடுமாற்றம் ஒன்றினை எதிர்கொண்டது.

எனினும் இத்தருணத்தில் ஜோடி சேர்ந்த இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணித்தலைவர் ஜயந்த் யாதவ் மற்றும் ஷம்ஸ் முலானி ஆகியோர் பொறுமையான ஒரு இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். அந்த வகையில் இரண்டு வீரர்களினாலும் இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் 7ஆம் விக்கெட்டுக்காக 107 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தது.

இந்த இணைப்பாட்டத்தின் காரணமாக இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை நெருங்கியது. எனினும், தேசிய கிரிக்கெட் அணி வீரரான அசேல குணரத்ன தனது வியூகமான பந்துவீச்சினால் இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணித்தலைவர் ஜயந்த் யாதவின் விக்கெட்டினை வீழ்த்தினார். தனது அணிக்காக போராடிய ஜயந்த் யாதவ் அரைச்சதம் ஒன்றுடன் 71 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

சிறிது நேரத்தில் யாதவின் ஜோடியாக இருந்த ஷம்ஸ் முலானியின் விக்கெட்டும் ரன் அவுட் ஒன்றின் காரணமாக 46 ஓட்டங்களுடன் வீழ்த்தப்பட்டது. இதனை அடுத்து இன்னுமொரு விக்கெட்டினை கைப்பற்றிய அசேல குணரத்ன இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பக்கம் போட்டியினை திருப்பினார். இப்படியாக, ஆட்டம் இலங்கை வீரர்களின் பக்கம் திரும்பிய நிலையில் இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கு போட்டியில் வெற்றி பெற இறுதி ஓவரில் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது.

தொடர்ந்து இறுதி ஓவரின் முதல் நான்கு பந்துகளுக்குள் பின்வரிசை துடுப்பாட்ட வீரராக வந்த அடிட் சேத் மூலம் 2 சிக்ஸர்கள் விளாசப்பட போட்டி விறுவிறுப்பான கட்டத்தினை எட்டியது. இதனால், ஆட்டத்தின் இறுதி இரண்டு பந்துகளுக்கும் 8 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டிருந்தது.

எனினும், இறுதி ஓவரினை வீசிய கமிந்து மெண்டிஸ் சமார்த்தியமான முறையில் செயற்பட்டு 4 ஓட்டங்களை மட்டுமே விட்டுத்தந்தார்.

இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்த இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 267 ஓட்டங்களை மட்டுமே பெற்று விறுவிறுப்பான போட்டியில் 3 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.

இந்திய வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் ஆட்டத்தினை த்ரில்லரான கட்டம் ஒன்றுக்கு எடுத்து சென்ற அடிட் சேத் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 15 பந்துகளில் 28 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

இதேநேரம் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக அசேல குணரத்ன 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஷெஹான் ஜயசூரிய மற்றும் லசித் அம்புல்தெனிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதினையும், தொடர் நாயகன் விருதினையும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் கமிந்து மெண்டிஸ் பெற்றுக் கொண்டார்.

Tags :
comments