இலங்கை கிரிக்கெட் அணியில் ஐந்தாவது முஸ்லிம் வீரராக முகம்மட் சிராஸ்

  • February 7, 2019
  • 228
  • Aroos Samsudeen
இலங்கை கிரிக்கெட் அணியில் ஐந்தாவது முஸ்லிம் வீரராக முகம்மட் சிராஸ்

(எஸ்.எம்.அறூஸ்)

ஐந்தாவது முஸ்லிம் வீரராக முகம்மட் சிராஸ்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடிய முஸ்லிம் வீரா்களுடன் ஐந்தாவது வீரராக வரலாற்றில் பதியப்படவுள்ளவர் கண்டியின் மடவள நகரின் முகம்மட் சிராஸ் ஆகும்.

மடவள மதீனா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான முகம்மட் சிராஸ் தனது விடாமுயற்சியினால் இன்று இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாடுகின்ற ஒவ்வொரு வீரரினதும் மிகப்பெரிய கனவாக இருப்பது தனது நாட்டுத் தேசிய அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்பதுதான். அந்தக்கனவு நமது சமூகத்தின் மார்க்கப்பற்றுள்ள வீரரான முகம்மட் சிராஸூக்கு நனவாகியிருக்கின்றது.

அந்த வகையில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இதுவரை காலத்திற்குள் நான்கு வீரா்கள் இலங்கை அணியில் விளையாடியிருக்கின்றனர். உவைசுல் கர்ணைன், நவீட் நவாஸ், ஜெஹான் முபாரக், பர்வீஸ் மஹ்றூப் ஆகியோராகும்.

இவர்களுடன் இன்று வாய்ப்புப் பெற்றிருக்கும் முகம்மட் சிராஸ் தென்ஆபிரிக்க அணியுடனான போட்டியில் களமிறங்கினால் ஐந்தாவது முஸ்லிம் வீரராக வரலாற்றில் பதியப்படுவார்.

இதில் உவைசுல் கர்னைண் ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார்.

இனவாதம்,மதவாதம், பிரதேசவாதம் கடந்து நம்மவர்களுக்கான தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு அபுர்வமானது.

நவீட் நவாஸ் குமார் சங்கக்கார போன்று சர்வதேச அளவில் பிரகாசிக்கக் கூடிய நிலை இருந்தும் அது இல்லாமலாக்கப்பட்டது நம்மைவிட நாட்டுக்கே பெரும் இழப்பாகும்.

பர்வீஸ் மஹ்றூப் உச்சம் தொட முடியாமல் கவிழ்க்கப்பட்டார். ஜெஹான் முபாரக் ஒருநாள் அரங்கிலும், இருபதுக்கு 20 இலும் திறமைகளை வெளிப்படுத்தினார்.

1984ம் ஆண்டு மொரட்டுவ டிரோன் பெர்னாண்டோ மைதானத்தில் இடம்பெற்ற நியுஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக இடம்பெற்ற உவைசுல் கர்னைண் துடுப்பாட்டத்தில் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களையும், துடுப்பாட்டத்தில் 28 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.

அத்தோடு இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவாகினார். அறிமுகப் போட்டியில் சிறப்பாட்டக்காரர் விருது பெற்ற முதலாவது இலங்கை வீரா் என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்காரரானார்.

1990 வரை விளையாடிய உவைசுல் கர்னைண் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து சுயமாகவே விலகிக் கொண்டார்.

முஸ்லிம் வீரா்களில் கூடுதலான காலம் இலங்கை அணிக்கு விளையாடியவர் என்றால் அது பர்வீஸ் மஹ்றூப் மாத்திரம்தான். இவர் 109 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி 135 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

22டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். துடுப்பாட்டத்தில் ஒருநாள் போட்டிகளில் 1113 ஓட்டங்களையும், டெஸ்ட்டில் 566 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இலங்கை அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய பங்களிப்பினை செய்த மஹ்றூப் சிறப்பாட்டக்காரர் விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.

அது மட்டுமல்ல இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் நம்பிக்கைக்குரிய வீரராகவும் மஹ்றூப் இருந்து வந்தார்.

அத்தோடு இந்தியாவின் டெல்லி டெயாவல்ஸ் ஐ.பி.எல்.அணிக்காகவும் பர்வீஸ் மஹ்றூப் விளையாடினார்.

நவீட் நவாஸ் ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடி 99 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். முதல் இன்னிங்ஸில் 21 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னஸிங்ஸில் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் பெற்றிருக்கின்றார். மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் ஒரு போட்டியில் ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இலங்கையின் முதல்தரப் போட்டிளில் மிகச்சிறப்பான துடுப்பாட்டத்துடன் பல சாதனைகளைக் கொண்டுள்ள நவாஸூக்கு தேசிய அணியில் போதிய வாய்ப்புக்களைக் கொடுக்காது புறக்கணிக்கப்பட்டார் என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

அடுத்தவர் ஜெஹான் முபாரக் 40 ஒருநாள் போட்டிளில் விளையாடி 704 ஓட்டங்களையும், 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 385 ஓட்டங்களையும் பெற்றிருக்கின்றார். இருபதுக்கு 20 போட்டிகளில் 238 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் சூழல் பந்தில் சில விக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

மிகச்சிறந்த அதிரடித்துடுப்பாட்ட வீரராக களம் கண்டாலும், சில போட்டிகளின் சறுக்கல்கள் காரணமாக அணியிலிருந்து கழற்றப்பட்டார். இருந்த போதும் உள்ளுர் போட்டிகளில் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

அந்த வகையில் இலங்கை அணிக்கு ஐந்தாவது வீரராக தெரிவாகியுள்ள முகம்மட் சிராஸ் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து நீண்டகாலம் இலங்கை அணிக்கு விளையாடி பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

Image 1 of இலங்கை கிரிக்கெட் அணியில் ஐந்தாவது முஸ்லிம் வீரராக முகம்மட் சிராஸ்Image 2 of இலங்கை கிரிக்கெட் அணியில் ஐந்தாவது முஸ்லிம் வீரராக முகம்மட் சிராஸ்Image 3 of இலங்கை கிரிக்கெட் அணியில் ஐந்தாவது முஸ்லிம் வீரராக முகம்மட் சிராஸ்
Tags :
comments