தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ள இலங்கை

  • February 23, 2019
  • 172
  • Aroos Samsudeen
தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ள இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையே இன்று நிறைவடைந்திருக்கும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தென்னாபிரிக்க வீரர்களை 8 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது.

மேலும் இந்த வெற்றியுடன் தென்னாபிரிக்க அணியை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என வைட்வொஷ் செய்திருக்கும் இலங்கை அணி, தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றை வெற்றி கொண்ட முதல் ஆசிய அணியாகவும் வரலாறு படைத்திருக்கின்றது.

ஆசிய அணியாக வரலாறு படைத்தது ஒருபுறமிருக்க தென்னாபிரிக்கா கிரிக்கெட் போட்டிகளுக்கு மீள் பிரவேசம் மேற்கொண்ட பின்னர் அவர்களை அவர்களது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடர் ஒன்றில் வைத்து தோற்கடித்த மூன்றாவது அணியாகவும் இலங்கை மாறியிருக்கின்றது.

கடந்த வியாழக்கிழமை (21) ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்றவாறு தென்னாபிரிக்க அணியினரை எதிர்கொண்டிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணியினர் 222 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸில் குவித்தனர். இதேநேரம் பதிலுக்கு துடுப்பாடியிருந்த இலங்கை வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸில் 154 ஓட்டங்களையே பெற்றனர்.

இதனை அடுத்து 68 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி இலங்கை அணியின் அபார பந்துவீச்சு காரணமாக 128 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

தென்னாபிரிக்காவை இரண்டாம் இன்னிங்ஸில் கலங்கடித்த இலங்கை பந்துவீச்சில் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும், தனன்ஞய டி சில்வா 3 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவின் மோசமான இரண்டாம் இன்னிங்ஸினால் போட்டியின் வெற்றி இலக்காக 197 ஓட்டங்கள் இலங்கை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றி இலக்கை அடைவதற்காக பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தமது வெற்றி இலக்கை எட்டும் பயணத்தில் உறுதியாக இருந்தது

களத்தில் ஒசத பெர்னாந்து 17 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களுடனும் நின்றவாறு இலங்கை அணிக்கு நம்பிக்கை தந்திருந்தனர்.

இன்று (23) போட்டியில் வெற்றி பெற இன்னும் 137 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணிக்கு களத்தில் நின்ற குசல் மெண்டிஸ் மற்றும் ஒசத பெர்னாந்து ஆகியோர் அட்டகாசமான துவக்கத்தை வழங்கியிருந்தனர்.

இதில் நீண்ட காலமாக இலங்கை அணிக்காக ஜொலிக்க தவறியிருந்த குசல் மெண்டிஸ் தனது 9ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்ய, இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் சர்வதேசத்திற்கு அறிமுகமாயிருந்த ஒசத பெர்னாந்துவும் தனது கன்னி டெஸ்ட் அரைச் சதத்தினை பூர்த்தி செய்தார்.

இந்த இரண்டு வீரர்களின் அரைச்சதங்களோடு இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக 163 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது.

மிகவும் வலுவான இந்த இணைப்பாட்டத்துடன் போட்டியின் வெற்றி இலக்கான 197 ஓட்டங்களை இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டத்தின் மதிய போசண இடைவேளைக்கு முன்னரே 45.4 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்து அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் வெற்றிக்கு உதவியாக இருந்த குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 13 பெளண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களை குவிக்க, ஒசத பெர்னாந்து 10 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 75 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் டூஆன்னே ஒலிவியர் மற்றும் ககிஸோ றபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு சிறிது நெருக்கடி தந்த போதிலும் அவர்களது பந்துவீச்சு வீணாக மாறியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகன் விருதை இப்போட்டியில் அபார அரைச்சதம் ஒன்றை கடந்த குசல் மெண்டிஸ் பெற்றுக்கொள்ள, தொடர் நாயகன் விருது இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்திய குசல் பெரேராவிற்கு வழங்கப்பட்டது.

தமது தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தை வரலாற்று வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி, அடுத்ததாக தென்னாபிரிக்க வீரர்களை ஐந்து போட்டிகள் ஒரு நாள் தொடரில் எதிர்கொள்கின்றது. இந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 03ஆம் திகதி ஜொஹன்னஸ்பேர்கில் ஆரம்பமாகின்றது.

Tags :
comments