குன்று குன்றி குந்தும் மரக் குற்றியானது – பசீர் சேகுதாவுத்

  • April 29, 2019
  • 340
  • Aroos Samsudeen
குன்று குன்றி குந்தும் மரக் குற்றியானது – பசீர் சேகுதாவுத்

கடந்த வாரம் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளும் அதனைத் தொடர்ந்த அழிவுகளும், இவை தொடர்பாக முஸ்லிம் தலைவர்கள் மீதான குற்றம் சுமத்தல்களும், மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் பலரின் கைதுகளும் முஸ்லிம் அரசியலிலும் வாழ்விலும் ஒரு குறுகிய அமுக்க வடிவை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் அடையாள அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை புறந்தள்ளி அவர்களதும் அவர்களது குடும்பத்தினரதும் பாதுகாப்பை மட்டும் முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டிய கட்டாயத்தை தற்போதைய சூழல் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதுவே அந்தக் குறுகிய வடிவமாகும்.

கடந்த மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போர் காலத்தில் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் தமது பாதுகாப்பையும்,சமூகப் பாதுகாப்பையும் தமக்கான வாக்கு வங்கியின் பாதுகாப்பையும் விரிவான வடிவத்தில் ஒரு சேரப்பார்த்தார்கள் என்பதை வரலாறு குறித்து வைத்துள்ளது.

முஸ்லிம் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் செய்து அப்பாவி மக்களைக் கொல்வதும் ,தாக்குதல் வியூகம் பிழைக்கையில் தமது குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் வயோதிபர் மற்றும் பெண்களையும் வலிந்தோ அல்லது தப்பிக்கலாம் என்று கூறி ஏமாற்றியோ இழுத்துக்கொண்டு போய் தம்மோடு சேர்த்து கூட்டுக் கொலை செய்வதும் நடக்கிற இக்காலத்தில் அப்பாவி முஸ்லிம் மக்களின் சாதாரண வாழ்வு உரலுக்குள் அகப்பட்ட பொருளாக இடிபட்டபடி நசுங்கத் தொடங்கியிருக்கிறது. இவ்வாழ்வு எவ்வளவு காலம் தொடருமோ?

உரலில் அகப்பட்ட வாழ்வு மாவாகி உருமாறுமோ இல்லை மாபெரும் போராகுமோ? காலம்தான் பதில் தரவேண்டும்.

சஹ்றானின் மனைவி தனது மகளையும் தன்னையும் தந்திரமாக தற்காத்தது ஒரு சிறு ஒளிக் கீற்றைத் தருகிறது.இது பாதையைக் காட்டப் போதுமானதாக இல்லாவிட்டாலும் பாதிப்பைக் குறைக்க வழிகோலப் போதுமானதாகும்.

Tags :
comments