நாட்டில் இடம்பெற்ற துன்பவியல் நிகழ்வை வஞ்சம் தீர்க்கும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி வருகின்றமை கவலையளிகின்றது- அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹாறூன்

  • April 29, 2019
  • 265
  • Aroos Samsudeen
நாட்டில் இடம்பெற்ற துன்பவியல் நிகழ்வை வஞ்சம் தீர்க்கும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி வருகின்றமை கவலையளிகின்றது- அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹாறூன்

இஸ்லாமிய கொள்கை முரண்பாட்டாளர்களும் எதிர்கால அரசியல் நகர்வாளர்களும் வஞ்சம் தீர்க்கும் சந்தர்ப்பமாக நாட்டில் இடம்பெற்ற துன்பவியல் நிகழ்வைப் பயன்படுத்தி வருகின்றமை கவலையளிப்பதாக கல்குடா அல் கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹாறூன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எம் இலங்கைத் திருநாட்டில் அண்மையில் இடம்பெற்ற கொடூரத்தற்கொலைத்தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசும் பாதுகாப்புத்தரப்பினரும் குற்றவாளிகளை இனங்கண்டுள்ள நிலையில், ஒரு சில இஸ்லாமிய கொள்கை முரண்பாட்டாளர்களும் எதிர்கால அரசியல் நகர்வாளர்களும் வஞ்சம் தீர்க்கும் சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடரில் ஒரு சில சமூகவலைத்தளங்களும் செய்தி ஊடகங்களும் எனது பக்கமும் விரல் நீட்டியிருப்பது கவலையளிக்கிறது.

நான் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தி, “தேசத்தால் இலங்கையர்கள்: இனத்தால் மனிதர்கள்” என்ற உணர்வுடன் அனைத்தின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்ற நோக்கோடு பல மனிதாபிமான உதவிகளைச் செய்து வருபவன்.

இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி, இந்து, கிறிஸ்தவ குடும்பங்களுக்கும் குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளமை, இன, மத பாகுபாடின்றி இறந்தவர்களின் உடல்களை எமது நிறுவன அம்பியூலன்ஸ் வண்டியில் சுமந்து செல்பவை, திடீர் அனர்த்தங்களால் பாதிப்படையும் மக்களுக்கு மத, இன வேறுபாடின்றி உதவி வருபவை இவற்றுக்குப் போதுமான உதாரணங்களாகும்.

குறிப்பாக, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய இந்துக்குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட அனைத்து கிராம வீடுகளுக்கும் எமது நிறுவனமே குடிநீர் வசதியைச் செய்து கொடுத்துள்ளது.

மேலும், எமது நாட்டின் அமைதிக்கும் இறைமைக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் அண்மையில் மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலீஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாம் எமது பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றையும் நடாத்தியுள்ளோம்.

இவையனைத்தையும் நன்கறிந்திருந்தும் இம்மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான இஸ்லாமிய அடிப்படைக்குப் புறம்பான செயற்பாட்டாளர்களுடன் என்னையும் தொடர்புபடுத்தி, நான் உம்றாக்கடமைக்காக புனித பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தலைமறைவாகியுள்ளதாக வதந்திகளைப் பரப்புவது ஆரோக்கியமற்ற அயோக்கியத்தனமான செயலாகும்.

இலங்கையைச்சேர்ந்த பலர் வெளிநாடுகளிலிருந்து கொண்டு, சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். பொய்யான வதந்திகளைப் பரப்புவதன் மூலம் தங்களது காழ்ப்புணர்வுகளுக்கு தீனி போட எத்தனிக்கின்றனர். இது விடயத்தில் எமது அரசு கூடிய கவனஞ்செலுத்தல் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

இஸ்லாமிய முலாம் பூசிக்கொண்ட ஒரு சிலரின் கேவலமான தாக்குதலால், இழந்த உயிர்களுக்கு இழப்பீடு செய்ய இயலாமல் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் இழிவுபட்டு நிற்கும் இச்சந்தர்ப்பத்தில், இயக்க முரண்பாட்டால் மற்றவர்களை வஞ்சம் தீர்க்க முனைவதை முற்றாகத் தவிர்த்து, உண்மையான குற்றவாளிகளையும் தீவிரவாதிகளையும் கண்டறிய பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என கல்குடா அல் கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹாறூன் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags :
comments