ஆடையொன்றின் மீதான தடையானது அநாகரீகமானது, அவசியமற்றது. என்பதுவே பொதுவான நிலைப்பாடு.

  • April 29, 2019
  • 238
  • Aroos Samsudeen
ஆடையொன்றின் மீதான தடையானது அநாகரீகமானது, அவசியமற்றது. என்பதுவே பொதுவான நிலைப்பாடு.

“பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிரான இலங்கை முஸ்லிம்களின் கடுமையான நிலைப்பாடுகள் உலக அளவில் வியப்போடு பார்க்கப்படுகின்றது” என இந்திய பாதுகாப்புசார் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்திருப்பது இலங்கை முஸ்லிம்களின் துணிச்சலான முன்னகர்வுகளுக்கு கிடைத்த உலக அவதானம் எனக் கொள்ளமுடியும். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இலங்கை அரசு புர்கா மீதான தடையை அறிவித்திருக்கின்றது.

புர்கா மீதான தடை எப்படிப் புரிந்துகொள்ளப்படப் போகின்றது?

“பாதுகாப்புக் காரணங்களுக்காக புர்கா (முகங்களை மூடிஅணியும் ஆடைகளை) இலங்கை அரசு தடைசெய்வதாக அறிவித்திருக்கின்றது. இது அவசரகாலச் சட்டத்தின் கீழான தற்காலிக நடைமுறையாகும் என்று ஒரு சில சட்டவாளர்கள் விளக்கம் கொடுத்திருக்கின்றார்கள். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இவ்வாறான ஒரு தடை அவசியப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆடையொன்றின் மீதான தடையானது அநாகரீகமானது, அவசியமற்றது. என்பதுவே பொதுவான நிலைப்பாடு.

ஒரு சில முஸ்லிம்களும் இதனை வரவேற்கும் மனோநிலையில் இருக்கின்றார்கள்.
இது தனிமனித ஆடைசார் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலேயன்றி வேறில்லை; உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது ஆடை எத்தகையதாக அமையவேண்டும் என்று தீர்மானிக்கும் உரித்து இருக்கின்றது. இது ஒரு விரிவான விவாதத்திற்கான பகுதியாகும். ஆனாலும் இப்போது இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள புர்கா மீதான தடையானது குறிப்பாக பாமர மக்களினால் அனைத்துவிதமான இஸ்லாமிய ஆடைகளுக்குமான தடையாகவே நோக்கப்படவும், பிரச்சாரம் செய்யப்படவும் போகின்றது. இதுவே மிக ஆபத்தானதாகவும் இருக்கும்.

புர்கா, நிகாப், பர்தா, ஹிஜாப், ஹபாயா, ஸ்காப், ஷோல் எனப் பல்வகைப்பட்டு நிற்கின்ற முஸ்லிம் பெண்கள் அணிகின்ற எல்லாவிதமான ஆடைகளையும் தடைசெய்திருக்கின்றார்கள் என்ற கருத்து சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை அவதானிக்கின்றோம். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களோடு இதனைத் தொடர்புபடுத்தியிருப்பதும், பாதுகாப்புக் காரணங்களோடு தொடர்புபடுத்தப்பட்டிருப்பதும் இதனுடைய நடைமுறைகள் அல்லது இதனை மக்கள் எதிர்நோக்கக்கூடிய விதம் குறித்து பல்வேறு மயக்கங்களை உருவாக்கியுள்ளது. “மக்கள் இஸ்லாமிய உடைகளுடன் கூடிய முஸ்லிம் பெண்களை ஆபத்தானவர்கள்” என்றே நோக்கப்போகின்றார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் எம்முன்னால் ஒரு சில பொறுப்புக்கள் இருக்கின்றன.

புர்கா, நிகாப் அணிந்துகொண்டு மேற்கொள்ளப்படப் போகின்ற குற்றச் செயல்களைவிடவும் இத்தடைச் சட்டமூலத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படப்போகின்ற முஸ்லிம் பெண்களுக்கெதிரான அத்துமீறல்கள், முஸ்லிம் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மனித உரிமை மீறல்களே, எங்களுடைய சிந்தையின் அவதானத்தை ஈர்த்திருக்கின்றன.

இத்தடைச் சட்டமூலத்தைத் துஷ்பிரயோகம் செய்வோருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் அரசு தன்னுடைய தெளிவுபடுத்தல்களை முன்வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றது. இத்தடைச் சட்டமூலம் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு ஏதேனும் ஒரு பொறிமுறையொன்றினை இலங்கை அரசு அறிமுகம் செய்வதையும் நாம் உறுதிசெய்யவேண்டியுள்ளது.

முன்வைக்கப்பட்டிருக்கின்ற தடைச் சட்டத்தினை “முகத்தை மறைப்பதற்கு எதிரான தடைச்சட்டம்” என்கின்ற சரியான வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்தல், குறிப்பாக சிங்கள மொழியில் இதனுடைய விளக்கங்களை முன்வைத்தல். அதற்கான விளம்பர உதவிகளை, சமூக ஊடக உதவிகளை, ஊடக உதவிகளை ஏற்பாடு செய்தல்.
முஸ்லிம் பெண்களை நோக்கி ஆடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள் என்று கூறுவதிலே எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது, ஆனாலும் அவதானமாக இருப்பது சிறப்பானது என்ற அளவில் நிறுத்திக்கொள்ளவே விரும்புகின்றேன். இதன்மூலம் எமது பெண்களின் நடமாடும் சுதந்திரம் பாதிக்கப்படும்.

பொது இடங்களில், வைத்தியசாலை, பஸ்கள், புகையிரதப் பயணங்களின் போது, அரச அலுவலகங்கள், வங்கிகள் போன்ற இடங்களில் முகம் தெரியும்படியான ஆடைகள் விடயத்தில் முஸ்லிம் பெண்கள் கரிசனை காட்டுதல் வேண்டும்.
முகத்தை மூடுதலுக்கு எதிரான தடைச் சட்டங்களானது, பிரான்ஸ், பெல்ஜியம், மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் முழுமையாகவும், துருக்கி, ஸ்பெயின், நெதர்லான்ட், சுவிஸ்லாந்து, இத்தாலி, நைகர், கொங்கோ, கமரூன், ஷாட் ஆகிய நாடுகளில் பகுதியளவாகவும் நடைமுறையில் இருக்கின்ற என்பதையும். அந்த நாடுகளிலுள்ள இலங்கை முஸ்லிம் பெண்களின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதும் தெரிந்துகொள்வதும் பயனுள்ளதாக அமையும்.

அ.அஸ்மின் 29-04-2019

Tags :
comments