ஜனநாயகத்தின் அச்சாணிக்கு வைக்கும் பொறி!

  • May 18, 2019
  • 142
  • Aroos Samsudeen
ஜனநாயகத்தின் அச்சாணிக்கு வைக்கும் பொறி!

2015ல் கூட்டாக நிறுவிக்கொண்ட நல்லாட்சியியை 2018ல் கலைத்துவிட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னெடுத்த நடவடிக்கைக்கெல்லாம் முட்டுக்கட்டையாக ஜனநாயகத்தின் அச்சாணியாக நின்றவர் அமைச்சர் றிசாட் பதியுதீன்.

முஸ்லிம்கள் தொப்பி புரட்டிகள் அவர்கள் ஆட்சிமாற்றத்தின் பங்காளியாக மாறுவார்கள் என இலகுவாக காரியமாற்றவிளைந்தவர்கள் முகங்களில் காறியுமிழ்ந்தது போலான நிகழ்வு ஆட்சி மாற்றத்தின் 52 நாட்களிலும் நடந்தேறியது. அரியணை ஆசையில் மிதந்த கூட்டு எதிரணியினர் ஈற்றில் தங்கள் முகங்களிலே கரியை பூசிக்கொண்டதே வரலாறு. இவை அத்தனைக்கும் அவர்கள் காரணம் கற்பிக்கும் ஒரேயொருவர் றிசாட் பதியுதீன் மாத்திரமே.

அடிபட்ட வேங்கைகள் பலி தீர்க்கக் காத்திருப்பது போல் கூட்டு எதிரணியினர் சமயம் பார்த்துக் காத்திருக்கவே, கடந்த மாதம் 21 ம் திகதி இலங்கை முஸ்லிம்கள் மாத்திரமன்றி எவருமே எதிர்பார்த்திராத வரலாற்று சோக நிகழ்வு அரங்கேறியது. எவனோ ஒரு ஏவல் தீவிரவாதி செய்த குற்றத்திற்காக எய்தவனை நோவதை விடுத்து, அரசியல் தலைமைகள் எனும் அம்புகளை நோவினை செய்ய கூட்டு எதிரணிக்கு வசதியாய் போனது.

“வேண்டாப் பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” எனும் நிலைப்பாட்டில் கூட்டு எதிரணியினர் அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது பழிச்சொற்களை அள்ளி வீசினார்கள். இதற்கு ஏற்றால்போல் சில இனவாத ஊடகங்களும் சாமரை வீசி நின்றன. ஈற்றில், இனவாத ஊடகங்களின் எதிர்பார்ப்புக்களுக்கு குறையேதும் இல்லாமல், வடமேல் மாகாண முஸ்லிம்களுக்காக நடத்திமுடித்த தீயாட்டத்தின் தணல்கள் புகைவிட்டு முடிவதற்கு முன்னால் மீண்டும் றிசாட்டினை முன்னிறுத்தி அவசர அவசரமாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க வெளிக்கிட்டது கூட்டு எதிரணி.

ஒரு சிறுபான்மை இனத்தின் தலைவர் தங்களின் அரியணையேறும் இச்சைகளுக்கு இணங்கவில்லை என்பதற்காக கூட்டு எதிரணியினர் அரங்கேற்றவிளையும் சதியின் வீச்சு அவர்கள் அரங்கேற்ற முன்பதாகவே ஆண்டிலும் திகதியிலும் பிழைவிட்டு கிழிந்து தொங்குகின்றது.

மீறியும் அவர்கள் சமர்ப்பிக்க அல்லது பொறியை வைக்க முனையலாம். அவ்வாறு முனைந்தால், ஜனநாயகத்துக்கு விரோதமான 52 நாள் ஆட்சிமாற்றத்தின் சதியை தகர்த்தெறிந்துவிட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் அலறிமாழிகை திரும்பியபோது எழுந்து நின்று கரகோசம் செய்து வரவேற்ற அதே கரங்கள் நம்பிக்கையில்லாத்தீர்மானத்தை தோற்கடிக்க கைகொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஷிபான் BM மருதமுனை.

Tags :
comments