உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து

  • May 31, 2019
  • 179
  • Aroos Samsudeen
உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியினை இங்கிலாந்து அணி 104 ஓட்டங்களால் தோற்கடித்திருக்கின்றது.

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் 12 ஆவது முறையாக இன்று (30) இங்கிலாந்தில் ஆரம்பமாகியது. பத்து அணிகள் பங்குபெறும் இந்த உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் தொடரை நடாத்தும் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்க அணியும் மோதின.

லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமான உலகக் கிண்ணத் தொடரின் இந்த போட்டி உலக கிண்ணத் தொடரின் முதல் லீக் ஆட்டமாக அமைந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இங்கிலாந்து அணிக்கு வழங்கினார்.

தென்னாபிரிக்க அணி இப்போட்டியில் அவர்களின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்னை காயம் காரணமாக இழந்ததோடு, துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லரிற்கும் ஓய்வு வழங்கியிருந்தது.

தென்னாபிரிக்க அணி – ஹஷிம் அம்லா, குயின்டன் டி கொக், எய்டன் மார்க்ரம், பாப் டு பிளேசிஸ் (அணித்தலைவர்), ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன், JP. டூமினி, அன்டைல் பெஹ்லூக்வேயோ, ட்வைன் ப்ரெடோரியஸ், ககிஸோ றபாடா, லுங்கி ன்கிடி, இம்ரான் தாஹிர்

மறுமுனையில் இங்கிலாந்து அணியினர் வேகப்பந்து சகலதுறை வீரரான ஜொப்ரா ஆர்ச்சருக்கு அவரின் நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலேயே உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தினை வழங்கியிருந்தனர்.

இங்கிலாந்து அணி – ஜேசன் ரோய், ஜொனி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (அணித்தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, கிரிஸ் வோக்ஸ், லியம் ப்ளன்கட், ஜொப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத்

பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தினை ஜேசன் ரோய் மற்றும் ஜொனி பெயர்ஸ்டோவ் ஆகியோர் ஆரம்பம் செய்தனர்.

இங்கிலாந்து அணி அவர்களது துடுப்பாட்டத்தை ஆரம்பித்து, போட்டியின் இரண்டாவது பந்து இம்ரான் தாஹிரினால் வீசப்பட்ட நிலையில் முதல் விக்கெட் பறிபோனது. இங்கிலாந்தின் முதல் விக்கெட்டாக பெயர்ஸ்டோவ் விக்கெட்காப்பாளர் குயின்டன் டி கொக்கிடம் பிடிகொடுத்து ஓட்டம் ஏதுமின்றி மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

தொடக்கத்திலேயே கிடைத்த இவ்விக்கெட் மூலம் தென்னாபிரிக்க அணி அட்டகாசமான ஆரம்பத்தை பெற்ற போதிலும், இங்கிலாந்து அணிக்காக ஜோடி சேர்ந்த ஜேசன் ரோய் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இரண்டாம் விக்கெட்டுக்காக சிறப்பான இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கினர்.

மொத்தமாக 106 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டத்திற்குள் இரண்டு வீரர்களும் தத்ததமது அரைச்சதங்களையும் பூர்த்தி செய்தனர். இதில் ஒருநாள் போட்டிகளில் தனது 15ஆவது அரைச்சதத்தினை பூர்த்தி செய்த ஜேசன் ரோய் இங்கிலாந்தின் இரண்டாம் விக்கெட்டாக வெளியேறினார். அன்டைல் பெஹ்லுக்வோயோவின் வேகத்திற்கு வீழ்ந்த ஜேசன் ரோய் 8 பெளண்டரிகள் அடங்கலாக 53 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

ரோயின் விக்கெட்டை அடுத்து சிறிது நேரத்தில் ஜோ ரூட்டின் விக்கெட் ககிஸோ றபாடாவின் பந்துவீச்சில் பறிபோனது. ரூட் ஒருநாள் போட்டிகளில் தனது 30ஆவது அரைச்சதத்தினை பூர்த்தி செய்து 51 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு நடந்தார்.

இதனை அடுத்து இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தமது தரப்பினை கட்டியெழுப்பினர்.

மோர்கன் – பென் ஸ்டோக்ஸ் ஜோடி இங்கிலாந்து அணியின் நான்காம் விக்கெட்டுக்காக 106 ஓட்டங்களை பகிர்ந்தது. பின்னர், இங்கிலாந்து அணியின் நான்காம் விக்கெட்டாக ஓய்வறை நடந்த இயன் மோர்கன் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 46ஆவது அரைச்சதத்தோடு 60 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை குவித்திருந்தார்.

மோர்கனின் விக்கெட்டினை அடுத்து இங்கிலாந்து அணி, தமது விக்கெட்டுக்களை குறுகிய ஓட்ட இடைவெளிகளில் பறிகொடுத்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடியான துடுப்பாட்டம் மூலம் பெறுமதி சேர்த்தார்.

ஸ்டோக்ஸின் துடுப்பாட்ட உதவியோடு இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 311 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து அணிக்கு தனது அதிரடி துடுப்பாட்டம் மூலம் உதவியாக இருந்த பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 15ஆவது அரைச்சதத்துடன் 9 பெளண்டரிகள் அடங்கலாக 79 பந்துகளில் 89 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

மறுமுனையில் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக அதன் வேகப் பந்துவீச்சாளரான லுங்கி ன்கிடி 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற, இம்ரான் தாஹிர் மற்றும் ககிஸோ றபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 312 ஓட்டங்களை அடைய தென்னாபிரிக்க அணி பதிலுக்கு துடுப்பாடிய தொடங்கியது. தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸினை குயின்டன் டி கொக் மற்றும் ஹஷிம் அம்லா ஆகியோர் ஆரம்பித்தனர்.

அம்லா தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பெளன்சர் பந்து ஒன்று தலையில் தாக்கிய காரணத்தினால் மைதானத்தினை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட இன்னிங்லை குயின்டன் டி கொக் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் முன்னெடுத்தனர்.

தொடர்ந்து தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட்டாக மார்க்ரம், ஜொப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட்டிடம் பிடிகொடுத்த மார்க்ரம் வெறும் 11 ஓட்டங்களை மட்டும் பெற்று ஏமாற்றம் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்க்ரமை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் உம் நிலைக்கவில்லை. டு பிளேசிஸ் வெறும் 5 ஓட்டங்களை குவித்த நிலையில் ஜொப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் புதிய துடுப்பாட்ட வீரராக ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் உடன் இணைந்து குயின்டன் டி கொக் தென்னாபிரிக்க அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக நல்ல இணைப்பாட்டம் (85) ஒன்றை உருவாக்கினார். எனினும் டி கொக்கின் விக்கெட்டோடு இந்த இணைப்பாட்டம் நிறைவுக்கு வந்தது. டி கொக், ஒருநாள் போட்டிகளில் பெற்ற தனது 15ஆவது அரைச்சதத்துடன் 74 பந்துகளில் 68 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

டி கொக்கின் விக்கெட்டினை அடுத்து தென்னாபிரிக்க அணியின் சரிவு ஆரம்பித்தது. தென்னாபிரிக்க அணியின் மத்திய வரிசையில் வந்த JP. டுமினி, ட்வைன் ப்ரெடோரியஸ் ஆகியோர் பத்து ஓட்டங்களையேனும் பெறாமல் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இவர்களோடு மீண்டும் துடுப்பாட வந்த ஹஷிம் அம்லாவும் 13 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஓய்வறை திரும்பினார்.

தொடர்ந்தும் சரிவிலிருந்து மீளாத தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் 39.5 ஓவர்களுக்கு பறிகொடுத்து 207 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் குயின்டன் டி கொக் தவிர்த்து ரஸ்ஸி வன் டர் டஸ்ஸேன் மாத்திரம் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 5ஆவது அரைச்சதத்துடன் 50 ஓட்டங்களை குவித்து ஆறுதல் தந்திருந்தார்.

இதேநேரம் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஜொப்ரா ஆர்ச்சர் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்தும் ஏற்கனவே துடுப்பாட்டதில் ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் லியம் ப்ளன்கெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணிக்காக சகலதுறைகளிலும் ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் தெரிவாகினார்.

உலகக் கிண்ணத் தொடரினை தென்னாபிரிக்க அணியுடனான வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் இங்கிலாந்து அணி தமது அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியினை ஜூன் மாதம் 03ஆம் திகதி எதிர்கொள்கின்றது. மறுமுனையில் தென்னாபிரிக்க அணி தமது அடுத்த போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் ஜூன் மாதம் 02ஆம் திகதி மோதுகின்றது.

Tags :
comments