பெருந்தேசியத்துக்குள் – புதைக்கப்படும் சிறுபான்மைக்குரல்கள்!

  • June 14, 2019
  • 173
  • Aroos Samsudeen
பெருந்தேசியத்துக்குள் – புதைக்கப்படும்  சிறுபான்மைக்குரல்கள்!

-சுஐப்.எம்.காசிம்-

சிங்கள முஸ்லிம் உறவுகளின் கடந்தகால நினைவுகளில் சஞ்சரிக்கையில்,இன்றைய நிலவரங்கள் கவலை தருகின்றது . அடிக்கடி தளம்பும் நீர்க்குமிழி போல் இந்த உறவு
உருவெடுத்ததற்கு யார் காரணமென,யாரைக் கேட்பதென்ற ஆதங்கமும் எனக்குள் இன்னும் அடங்கவில்லை. பயங்கரவாதம்,அடிப்படைவாதம்,தீவிரவாதம், மதவாதம், கடும்போக்குவாதம் போன்ற எல்லா வாதங்களையும் எடுத்தெறிந்து விட்டு மனிதாபிமானம் வாழ,வழியமைப்பது யார்?

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்குப் பின்னர்,உக்கிரமடைந்துள்ள அதிகார மோதல்களு க்குள் உயிர்பிழைக்கும் இந்த அத்தனைவாதங்க ளும் மனிதாபிமானத்தை மட்டும் மரணிக்கச் செய்கிறதே! ஏன்? ஆளும் வர்க்கத்தினரின் அதிகாரப்போட்டிக்குள் அகப்பட்டு அப்பாவிகள்,தங்களது உயிர்கள்,சொத்துக்களைப் பறிகொடுக்கின்றனரே, இது எவ்வாறு? எல்லா இனத்தவர்களின் உணர்வுகளையும் ஒன்றிக்கச் செய்வது இயலாதது தான்.

சகல இனத்தவரையும் சகலரும் மதிக்கும் பரஸ்பர சமூகமொன்றை கட்டியெழுப்ப முடியாதுள்ளதே எதற்காக? கடந்த காலங்களில் நடந்த கசப்பான துயரங்கள் சகலர் மனங்களையும் விகாரமாக்கிவிட்டதா?அல்லது பிறப்பிலிருந்தே சிலருக்குள் வக்கிர புத்திகள் புகுந்து விட்டனவா?

இதிலிருந்து எமது வரலாற்றுக்குள் நுழைவோம். சிங்கள தரப்பினரின் தயவில் வாழ்ந்து,தேசப்பற் றையும் தூக்கிப்பிடித்தால் எமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை முதலில் நாம் விடை கொடுத்தனுப்ப வேண்டும்.வரலாற்றுக்கு முற்பட்ட காலமுதல் நாம் இப்படி வாழ்ந்திருந் தோமே,இந்த வரலாறுகளில் இடைக்கிடை ஏற்பட்ட நெருக்கடிகளில் எம்மை யார் காப்பாற்றியது?

நெருங்கிப்போன தயவுக்கும், வௌிப்படுத்தி வந்த தேசப்பற்றுக்கும் தேசம் தந்த வெகுமதியென்ன? தேசம் தயாராக இருந்தாலும் அதைத் தடுத்து வந்த தீய சக்திகள் எவை?எந்த வாதங்களுக்குள்ளும் நிலையாகப் பிழைப்பு நடத்தும் மேலாண்மைவாதமே.

அரசாங்க இயந்திரத்தின் அச்சாணி.இதுவே அனைத்தையும் இயக்குகிறது அல்லது அச்சுறுத்துகிறது.தமிழ் பேசும் சமூகங்களின் ஒன்றிணைவு,அல்லது இவ்விரு சமூகங்களினதும் அரசியல் ஒன்றிப்பு, பௌத்த கலாசாரத்தின் இருப்புக்கு ஆபத்து என அஞ்சிய இந்த தேரவாத மேலாண்மையே பிரித்தாளும் தந்திரத்தை அரசுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

இல்லாவிட்டால் தமிழர்களும், முஸ்லிம்களும் எதற்காகப் பிரிந்தனர்? மதத்தைத் தவிர, வேறெந்த சித்தாந்தங்கள் இச்சமூகங்களை வேறுபடுத்தி வேரறுக்கின்றது.2500 வருடங்கள் பழமைவாய்ந்த ஆரிய பௌத்தஇனத்துக்கு தமிழர்களால் ஆபத்து நேர்ந்தால் முஸ்லிம்களையும், 2500 வருடங்கள் பெருமை வாய்ந்த பௌத்த தேரவாத கலாசாரத்துக்கு முஸ்லிம்களால் அச்சுறுத்தல் வந்தால் தமிழர்களையும் மாறி, மாறிப் பகடைக் காய்களாக மாற்றிச் சாதிப்பதில் மேலாண்மைவாதத்தின் வீரவரலாறும் வெற்றிச் சரித்திரமும் எழுதப்பட்டு வருவதை நாம் ஏன் இன்னும் அறியவில்லை.

நமக்கேன் இந்தத் தோல்விகள் அவமானமாகத் தென்படுவதில்லை.தமிழர்கள் எல்லோரும் புலிகளா? முஸ்லிம்களில் எத்தனை வீதத்தினர் ஐ.எஸ்.ஐ.எஸ். இவர்களை அடக்குவதாகக் கூறி,அல்லது அடக்குமாறு கூறி எம்மில் எத்தனை உறவுகள் வதைக்கப்பட்டன.

வளை குடாவிலுள்ள அரபு நாடுகள்,அதற்கு வௌியிலுள்ள அத்தனை முஸ்லிம் நாடுகளையும் எதிர்க்கும் ஐ.எஸ். பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்? இதைப்பற்றி தேரவாத மேலாண்மைவாதம் ஏன் சிந்திப்பதில்லை?

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை ஜனநாயக வழியில் அடைந்து கொள்வது ஜனநாயக நடைமுறைதான்,அதற்காகப் புலிகளின் பயங்கரவாதத்தை ஒட்டு மொத்த தமிழர்களும் ஏற்கவில்லையே! பயங்கரவாதத்தின் ஆயுத மொழிக்கு அஞ்சித்தானே,தமிழர்கள் எதையும் பேசாதிருந்தனர்.

இந்தப்பின்புலத்தில் புலிகளுக்காக முழுத்தமிழரையும் கொளுத்தி எரிப்பதா? ஐ.எஸ்ஸுக்காக அரபுக் கலாசாரத்தை அழிக்க முனைவதும் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளைக் காயப்படுத்துவதுமா? பௌத்த கலாசாரத்தைப் பாதுகாப்போர் கையாளும் ஜனநாயக நடைமுறை. இவையாவும் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான,மேலாண்மைவாதத்தின் ஒரே சாயலாக எமக்கு ஏன் தென்படுவதில்லை?

அமைச்சர் ரிஷாத்பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தமிழ் தேசிய கூட்டமைப் பின் சிரேஷ்ட தலைவர்கள் எடுத்திருந்த நிலைப் பாடு முஸ்லிம்களை மெய்சிலிர்க்க வைத்தது. மஹிந்தவைப் பிரதமராக்கும் கடந்தகால முயற்சி க்கு ரிஷாத்பதியுதீன், கைகொடுத்திருந்தால் தமிழருக்கு எதிரான தலைமைத்துவம் மீண்டும் உயிர்ப்புப் பெற்றிருக்கும்.

இந்த உயிர்ப்பில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் உயிர் துறந்திருக்கும். இந்த நன்றிக்கடனுக்காவது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்பதியுதீனைக் காப்பாற்ற வேண்டுமென சம்பந்தன் ஐயா, மாவை அண்ணன் , சுமந்திரன், ஸ்ரீதரன் உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள் எண்ணியதும் எமக்குத் தெரியும்.

இதற்குமாறாக இதிலுள்ள சிலர், பழிதீர்க்கக் காத்திருந்த கவலையும் எம்மிடத்தில் இல்லாமலில்லை. பழிதீர்த்துக் கொண்டிருந்தால், நமது சமூகங்கள் படுகுழிக்குள் விழுவதையும் மேலாண்மைவாதத் தேரவாதம் பலமடைவதையும் எவரும் தடுக்கவும் முடியாது.

முஸ்லிம், தமிழ் அரசியல் தலைமைகள் பகை மறந்து,பழையன மறந்து கைகொடுக்கும் காலம் கைகூடவுள்ள நிலையில், நாமே இக்காலத்தை கைகூப்பி அழைக்க வேண்டும். மல்வத்தை, அஸ்கிரிய மகா நாயக்கத் தேரர்களைச் சந்தித்த முஸ்லிம் எம்பிக்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு விடுத்த வேண்டுகோளை மதிப்பதாகவும், சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வரை, துறந்ததை மீண்டும் தேர்ந்தெடுக்கப் போவதில்லை எனவும் பணிவுடன் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வெல்வதற்காக, எம்.பி பதவிகள் ,அமைச்சுக்கள், சுகபோகங்களைத் தூக்கி வீசிய தமிழ்த்தலைவர்களின் சாயலே இது. இந்த வரலாறுகளின் ஒற்றுமை மேலாண்மைவாத தேரவாத்துக்கு படிப்பினையூட்டட்டும். மேலும் இவர்களுக்கு அஞ்சி எதையும் பேசாது, நியாயத்துக்காக மனச்சாட்சியுடன் போராடும் பெரும்பான்மை சிங்கள மக்களை தைரிய மூட்டட்டும்.

ஈஸ்டர் தினத் தாக்குதல் திடீரெனத் தலையெடுக்கவில்லை.2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த வெறித்தனத்தின் வௌிப்பாடுகள் மெது, மெதுவாகக் வௌிக்கிளம்பியதாகவே பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளில் தெரிய வருகிறது.

இது குறித்து எத்தனை தடவைகள் எச்சரித்தும் மதக்குழுக்களின் முரண்பாடுகளாகவே பலராலும் இது நோக்கப்பட்டி ருக்கிறதே! ஏன்? தேசிய கீதத்தை மதிக்காமை, வகுப்புக்கு வரும் ஆசிரியர்களை எழுந்து நின்று வரவேற்காமை,பெண்கள் நகை அணிவதை விரும்பாமை,இஸ்லாத்தில் ஜனநாயகத்துக்கு இடமில்லை என குண்டுதாரி சஹ்ரான் போதித்தமை, அனைத்தையும் எவ்வாறு மதக்குழுக்களின் மோதல்களாக நோக்க முடிந்தது.

காத்தான்குடி மக்களின் எச்சரிக்கை காற்றில் விடப்பட்டமைக்கு பொறுப்புக் கூறப் போகும் தரப்பு எது? வடக்கு,கிழக்கில் நிகழ்ந்த இன அழிப்புக்கு இன்னும் பொறுப்புக் கூறப்படாதுள்ளது. இந்நிலையில்,நிறைவேற்று அதிகாரமும், சட்டவாக்கமும் வெவ்வேறு துருவங்களாகச் செயற்படும் இன்றைய சூழலில் மேலாண்மைத் தேரவாதத்தை பொறுப்புடன் செயற்படுமாறு, யாரால் கோர முடியும்.

“சம்திங் இஸ் கோயிங் டு ஹெப்பிண்” ஏப்ரல் 21 காலை ஏழு 15 க்கும் இந்தச்சத்தம்,பதற்றம்,பரபரப்பு பாதுகாப்பு,அரசியல் அதிகாரிகளுக்குள் முணுமுணுக்கப்பட்டுள்ளதே.

ஆனால் ஒரு பாமரனின் காதில் அல்லது பொது மகனின் காதில் இந்தச் சத்தம் ஒலித்திருந்தால் எமது நாடு விழித்திருக்கும்,அழிவுகள் பிழைத்திருக்கும்.அச்சுறுத்தல்கள்,எச்சரிக்கைகளை
பொருட்படுத்தாது அசிரத்தையாக இருந்தோரை, இந்த மேலாண்மை வாதம் கண்டுகொள்ளாதது ஏன்?.கைது செய்யுமாறு குரலெழுப்பாதது ஏன்? கைது செய்யக் கோருவது,குற்றம் காண்பது அனைத்தும் சிறுபான்மையினராகவும் சிறுபான்மைத்தலைவராகவும் இருப்பது ஏன்…?

Tags :
comments