கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா

  • June 24, 2019
  • 311
  • Aroos Samsudeen
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்க வீரர்களை 49 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

லண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (23) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தெரிவு செய்தது.

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் அரையிறுதி சுற்றுக்கான அணிகளை தெரிவு செய்யும் தீர்க்கமான ஆட்டங்களாகவே இப்போதைய உலகக் கிண்ண லீக் போட்டிகள் அமைவதால், இப்போட்டியும் மிக முக்கியத்துவம் கொண்டதாக அமைந்திருந்தது.

இந்நிலையில் தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் இந்தியாவுடன் தோல்வியினை தழுவி, 3 புள்ளிகளுடன் காணப்படும் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றியினை எதிர்பார்த்து இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

அந்தவகையில் இந்திய அணியுடனான போட்டியில் விளையாடிய அனுபவ சகலதுறை வீரர் சொஹைப் மலிக், வேகப்பந்துவீச்சாளர் ஹஸன் அலி ஆகியோருக்கு பதிலாக பாகிஸ்தான் அணி இப்போட்டியில் சஹீன் அப்ரிடி மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

பாகிஸ்தான் அணி – இமாம்-உல்-ஹக், பக்கார் சமான், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், ஹரிஸ் சொஹைல், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), இமாத் வஸீம், சதாப் கான், வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமீர், சஹீன் அப்ரிடி

மறுமுனையில் தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியினை தழுவி, 3 புள்ளிகளுடன் காணப்படும் தென்னாபிரிக்க அணி இப்போட்டியில் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் மாற்றங்கள் எதுவுமின்றி களமிறங்கியது.

தென்னாபிரிக்க அணி – ஹஷிம் அம்லா, குயின்டன் டி கொக், எய்டன் மார்க்ரம், பாப் டு பிளேசிஸ் (அணித்தலைவர்), ரஸ்ஸி வன்டர் டஸ்ஸேன், டேவிட் மில்லர், அன்டைல் பெஹ்லுக்வேயோ, கிறிஸ் மொர்ரிஸ், ககிஸோ றபாடா, லுங்கி ன்கிடி, இம்ரான் தாஹிர்

பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வழமை போன்று இமாம்-உல்-ஹக் மற்றும் பக்கார் சமான் ஆகியோர் களம் வந்தனர்.

இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் பாகிஸ்தான் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை கொடுத்தனர். இதில் இம்ரான் தாஹிரின் சுழலில் பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த பக்கார் சமான் 50 பந்துகளில் 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 44 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதேநேரம் மீண்டும் தாஹிரின் சுழலில் பாகிஸ்தான் அணியின் இரண்டாம் விக்கெட்டாக மாறிய இமாம்-உல்-ஹக் 44 ஓட்டங்களை பெற்று தனது தரப்பிற்கு வலுச்சேர்த்திருந்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை அடுத்து பாபர் அசாம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெற்றுக் கொண்ட 2ஆவது அரைச்சதத்துடன் பாகிஸ்தான் அணியை வலுப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து பெஹ்லுக்வேயோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் 14ஆவது அரைச்சதத்துடன் 80 பந்துகளில் 7 பெளண்டரிகள் உடன் 69 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இவரினை அடுத்து மத்திய வரிசையில் துடுப்பாடிய ஹாரிஸ் சொஹைல் பெற்ற அதிரடி அரைச்சதத்துடன் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹாரிஸ் சொஹைல் அவரின் 11ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 59 பந்துகளில் 89 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக லுங்கி ன்கிடி 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர். அத்தோடு, இம்ரான் தாஹிர் இப்போட்டி மூலம் தென்னாபிரிக்க அணிக்காக உலகக் கிண்ணத் தொடர்களில் அதிக விக்கெட்டுக்களை (39) சாய்த்த வீரராகவும் மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 308 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய தென்னாபிரிக்க அணி பதிலுக்கு துடுப்பாடியது.

தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த ஹஷிம் அம்லா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். எனினும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குயின்டன் டி கொக், அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் உடன் இணைந்து தென்னாபிரிக்க அணியின் ஓட்டங்களை உயர்த்த உதவினார்.

தொடர்ந்து குயின்டன் டி கொக் தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்தார். டி கொக் 60 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் உடன் 47 ஓட்டங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

குயின்டன் டி கொக்கினை அடுத்து தென்னாபிரிக்க அணியில் அதன் தலைவர் பாப் டு பிளேசிஸ் மற்றும் அன்டைல் பெஹ்லுக்வேயோ ஆகியோர் மாத்திரமே எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

இதேநேரம் ஏனைய தென்னாபிரிக்க வீரர்கள் பிரகாசிக்கத் தவற தென்னாபிரிக்க அணி போட்டியில் 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவியது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றிக்காக முயற்சி செய்திருந்த பாப் டு பிளேசிஸ் அவரின் 34ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 79 பந்துகளில் 5 பெளண்டரிகள் உடன் 63 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம் பெஹ்லுக்வேயோ 32 பந்துகளில் 46 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் அதன் வெற்றியினை வஹாப் ரியாஸ் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணிக்காக அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஹாரிஸ் சொஹைல் தெரிவாகினார்.

இப்போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால் தென்னாபிரிக்க அணி இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறுகின்றது. தென்னாபிரிக்க அணி 2003ஆம் ஆண்டிற்கு பின்னர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் நொக்-அவுட் சுற்று ஒன்றுக்கு தெரிவாகாமல் வெளியேறுவது இதுவே முதல் தடவையாகும்.

இதேநேரம் இப்போட்டியின் வெற்றியுடன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் 5 புள்ளிகளுடன் முன்னேறும் பாகிஸ்தான் அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் நியூசிலாந்து அணியினை எதிர்வரும் புதன்கிழமை (26) பர்மிங்ஹமில் வைத்து சந்திக்கின்றது.

இதேநேரம் தென்னாபிரிக்க அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இலங்கை வீரர்களை செஸ்டர்-லீ-ரீட் மைதானத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (28) சந்திக்கின்றது.

Tags :
comments