அடிப்படை உரிமை வழக்கும் ‘அபாயா’ ஐ உள்ளடக்கும் புதிய சுற்றுநிருபமும் அதனுள் ஒளிந்திருக்கின்ற அபாயங்களும்

  • June 28, 2019
  • 337
  • Aroos Samsudeen
அடிப்படை உரிமை வழக்கும் ‘அபாயா’ ஐ உள்ளடக்கும் புதிய சுற்றுநிருபமும் அதனுள் ஒளிந்திருக்கின்ற அபாயங்களும்

(சட்டத்தரணி ஹஸான் றுஸ்தி)

அடிப்படை உரிமை வழக்கும் ‘அபாயா’ ஐ உள்ளடக்கும் புதிய சுற்றுநிருபமும் அதனுள் ஒளிந்திருக்கின்ற அபாயங்களும்…..

ஒரு மாத கால அயராத முயற்சியின் விளைவாக அரச ஊழியர்களின் ஆடை சம்பந்தமான பழைய சுற்றுநிருபத்திற்கு எதிராக குரல்கள் இயக்கத்தினால் அடிப்படை உரிமை மீறல் வழக்கானது இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளை எமது சமூகத்தை சேர்ந்த பலரின் விடா முயற்சியின் பலனாக இன்றைய தினமே புதிய சுற்றுநிருபமும் வெளிவந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்….

எமது சமூகத்தின் ஆடை சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டதா என்ற கேள்வி இங்கு முக்கியமானது. சட்டரீதியில் பார்ப்பின் ‘இல்லை’ என்பதே அதற்கான விடையாகும். ஏனெனில் புதிய சுற்றுநிருபத்தில் ‘அபாயா’ என்ற வாசகம் தந்திரமாக தவிர்க்கப்பட்டு பெண்களின் உடை தொடர்பில் ‘சாரி, ஒசரி அல்லது கண்ணியமான ஆடை’ என்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

1. இங்கு ‘கண்ணியமான ஆடை’ என்பதை யார் முடிவு செய்வது?
2. ஒரு அரச அதிகாரியொருவர் வேண்டுமென்று ‘அபாயா’ ஐ கண்ணியமான ஆடையல்ல என தன்னிச்சையாக தீர்மானம் எடுப்பின் அதற்கான தீர்வு என்ன?
3. அவ்வாறான தான்தோன்றித்தன நடிவடிக்கைகளுக்கான இடைவெளியை இந்த சுற்றுநிருபம் உள்ளடக்கியுள்ளதல்லவா?
4. ‘ஒசரி’ ஐ போன்று ‘அபாயாவை’ ஒரு சமூகத்தின் கலாச்சார ஆடையாக ஏற்பதனை தடுப்பதற்கான சிந்தனையின் இன்னொரு வடிவம் தான் இப்புதிய சுற்றுநிருபத்தின் உள்ளடக்கம் என்ற சந்தேகம் யாருக்கும் எழவில்லையா?
5. ‘அபாயா’ ஐ அணிவது எமது பெண்களின் அடிப்படை ஆடை உரிமை என்பதனை விஷேடமாக உறுதிப்படுத்தும் ஏதாவது சட்டரீதியான ஆவணம் அல்லது தீர்மானம் ஏதாவது இந்நிமிடங்கள் வரை எமது சமூகத்திடம் இருக்கின்றதா?

இதற்கான சட்டத்தீர்வு இரண்டு முறைகளில் தான் வர முடியும்.

1) ‘கண்ணியமான ஆடை’ என்ற போர்வையில் அபாயாவை உள்ளடக்குவதனை விட்டுவிட்டு நேரடியாகவே ‘அபாயா’ அல்லது அதற்கொத்த வாசகங்களை கொண்ட சுற்றுநிருபத்தை கொண்டுவர அழுத்தங் கொடுத்தல் அல்லது

2) அபாயா அணிவதை தடுத்தமையானது எமது பெண்களின் அடிப்படை ஆடை உரிமையை மீறியுள்ளது என்ற நீதிமன்ற தீர்ப்பொன்றினை வழக்கொன்றினூடாக பெறுதல்.

 

Tags :
comments