பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு, இவர்களையும் அழையுங்கள் – ரஞ்ஜன்

  • June 28, 2019
  • 279
  • Aroos Samsudeen
பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு, இவர்களையும் அழையுங்கள் – ரஞ்ஜன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்கின்ற நாடாளுமன்றத் தெரிவுக்குழு கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தை அழைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவானது ஓர் அரசியல் நாடகம் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன விமர்சித்திருந்த நிலையில் அதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் வத்திகானுக்கு விஜயம் செய்திருந்த கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றி பலவித அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தத் தாக்குதல் பற்றிய உண்மைகளை மூடி மறைத்து வருவதாகவும் கர்தினால் ரஞ்சித் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டுவரும் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு மிகவும் கௌரவத்துடன் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை அழைக்குமாறு கோருகின்றேன். கேள்விகளைக் கேட்பதற்கு அல்ல. அவர் பல்வேறு புதிய தகவல்களை வத்திகானுக்குச் சென்று வெளிப்படுத்தியிருந்தார். தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று காலை 6.45க்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறியிருந்தார். பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களும் வெளியிட்டிருந்தார்கள். குறிப்பிட்ட ஒரு நட்சத்திர விடுதியொன்றில் தாக்குதல் நடத்தாததன் காரணம் அந்த விடுதியில் முக்கியஸ்தர் ஒருவர் இருந்ததாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தகவல் வெளியிட்டிருந்தார். அவரையும் தெரிவுக்குழுவுக்கு அழைக்க வேண்டும். தாக்குதல் இடம்பெற 10 நாட்களுக்கு முன்னதாக பாதுகாப்பு பிரிவினர் தனக்கு சொன்னதாக மனோ கணேசன் கூறியிருந்தார். தனது தந்தைக்கு பாதுகாப்பு பிரிவினர் கூறியதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார். இந்தத் தாக்குதலை 225 உறுப்பினர்களும் அறிந்து வைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்திருந்தார். நான் அதனை ஏற்கமாட்டேன்.
சாதாரணமாக சட்டவிரோத மதுபானம் தயாரிப்பவர்கள் சுங்கத் திணைக்களத்திற்கு பயப்படுவார்கள். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு பயப்படுவார்கள். மதுபோதையில் வாகனம் ஓட்டுவோர் பொலிஸாருக்கு பயப்படுவார்கள். பாதாள உலகக் கும்பல் விசேட அதிரடிப் படையினருக்கு அச்சப்படுவார்கள். குற்றம் செய்த காரணத்தினால் இவ்வாறு அச்சம் கொள்வார்கள்.
எனவே இந்த தெரிவுக்குழுவுக்கு யார் அச்சப்படுகிறார்கள் என்பதை மக்களே அறிந்துகொள்ள முடியும். தெரிவுக்குழுவுக்கு பயமில்லை என்றால் சாட்சியமளிக்க முன்வந்து தனக்குத் தேவையான கேள்விகளைக் கேட்கமுடியும். ஏன் இதற்கு அச்சமடைகிறார்கள்? அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. கடந்த காலங்களில் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்கு பலரும் அச்சமடைந்தார்கள். எனவே இந்த தெரிவுக்குழுவுக்கு வரலாறு காணப்படுகிறது. முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை நீக்குவதற்கு 06 பேர் கொண்ட தெரிவுக்குழு அமைக்கப்பட்டதோடு அதில் ராஜித்த, விமல், அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட பலரும் அமர்ந்தார்கள்.
ஆனால் இந்த தெரிவுக்குழுவின் வித்தியாசம் என்னவென்றால் ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. எனவே இதற்கு அச்சமடைவது யார் என்றால் குற்றம் செய்தவர்களே. அவர்களே இன்று இந்தத் தெரிவுக்குழு ஒரு நாடகம் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்”என்றார்.
Tags :
comments