27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

  • July 12, 2019
  • 137
  • Aroos Samsudeen
27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (11) பேர்மிங்கம் எட்ஜ்பெர்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 27 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த அவுஸ்திரேலிய அணி தடுமாற்றத்துக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய போதும், ஸ்டீவ் ஸ்மித்தின் போராட்டமான துடுப்பாட்டத்தால் 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.

நேற்று நடைபெற்ற உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியிருந்த நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. இதன்படி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணியை தெரிவுசெய்யும் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை எதிர்கொண்டு விளையாடியது. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் 3 விக்கெட்டுகளையும் ஆரம்பத்தில் இழந்தது போன்று, அவுஸ்திரேலிய அணியும் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆரோன் பின்ச் (0), டேவிட் வோர்னர் (9) மற்றும் பீட்டர் ஹென்ட்ஸ்கொம் (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இவ்வாறு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அவுஸ்திரேலிய அணிக்கு தனது அனுபவத்தால் ஸ்டீவ் ஸ்மித் ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் அலெக்ஸ் கெரியும் தன்னுடைய பங்கினை வழங்கினார். இதில், ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பௌண்சர் பந்தில் தாடைப்பகுதியில் காயத்துக்குள்ளாகியிருந்த அலெக்ஸ் கெரி காயத்துடன் அணிக்காக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கெரி ஆகியோர் 4வது விக்கெட்டுக்காக 103 ஓட்டங்களை பகிர்ந்தனர். இருவரும் தங்களுடைய அரைச்சதத்தை நெருங்கிய சந்தர்ப்பத்தில் ஆதில் ரஷீட்டின் பந்துவீச்சில் 46 ஓட்டங்களை பெற்றிருந்த அலெக்ஸ் கெரி ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து வருகைத்தந்த துடுப்பாட்ட வீரர்களில் கிளென் மெக்ஸ்வெல் (22) மற்றும் மிச்சல் ஸ்டார்க் (29) ஆகியோர் மாத்திரம் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றியிருந்தனர்.

இதில், இறுதிக்கட்டம் வரை பேராடியிருந்த ஸ்டீவ் ஸ்மித் தனது 23வது ஒருநாள் அரைச்சதத்தை பெற்றிருந்த போதும், துரதிஷ்டவசமாக சதம் பெற முடியாமல் 85 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இவரின் இந்த ஓட்டக்குவிப்பின் உதவியுடன் அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் க்ரிஸ் வோர்க்ஸ் மற்றும் ஆதில் ரஷீட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஜேசன் ரோய் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவின் சிறந்த துடுப்பாட்டத்தின் ஊடாக வெற்றியிலக்கை நெருங்க, இயன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 224 என்ற வெற்றியிலக்கினை நோக்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களை இலகுவாக எதிர்கொண்ட ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோர் சிறப்பாக ஓட்டங்களை குவித்தனர். எதிரணியின் பந்துவீச்சாளர்களை தடுமாற்றத்துக்குள்ளாக்கிய இவர்கள் முதல் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.

இவ்வாறு சிறப்பாக இங்கிலாந்து அணி ஓட்டக்குவிப்பில் ஈடுபட்ட போதும், மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்காக  அழைக்கப்பட்ட மிச்சல் ஸ்டார்க், 38 ஓட்டங்களை பெற்றிருந்த ஜொனி பெயார்ஸ்டோவை LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதனையடுத்து வேகமாக ஓட்டங்களை பெற முற்பட்ட ஜேசன் ரோய், துரதிஷ்டவசமாக 85 ஓட்டங்களை பெற்றிருந்த போது, பெட் கம்மின்ஸின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரின் ஆட்டமிழப்பின் பின்னர் ஜோடி சேர்ந்த அனுபவ துடுப்பாட்ட வீரர்களான ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இணைப்பாட்டத்தை பகிர, இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது. இதில், இயன் மோர்கன் 45* ஓட்டங்களையும்,  ஜோ ரூட் 49* ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

இதன் அடிப்படையில் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு 1992ம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அணி தகுதிபெற்றுள்ளது. அதேநேரம், மூன்றாவது தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள இங்கிலாந்து அணி, எதிர்வரும் 14ம் திகதி எம்.சி.சி. மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Tags :
comments