இரகசிய இடத்தில் 5 மணிநேர விசாரணை – முக்கிய கேள்விக்கு புலனாய்வு தலைவர் மௌனம்

  • July 26, 2019
  • 217
  • Aroos Samsudeen
இரகசிய இடத்தில் 5 மணிநேர விசாரணை – முக்கிய கேள்விக்கு புலனாய்வு தலைவர் மௌனம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தனவிடம், ஐந்து மணி நேரம் இரகசிய இடத்தில் விசாரணை நடத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு- இரகசிய இடம் ஒன்றில் ஆரம்பமான இந்த விசாரணைகள், நேற்று அதிகாலை 1 மணி வரை நீடித்ததாக, தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இந்த சாட்சியம் தொடர்பான குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரமே ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த முடியும் என்று கூறிய அவர், தாம் இந்த விசாரணைகளில் பங்கேற்கவில்லை எனவும் கூறினார்.
“கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தலைமையிலான தெரிவுக்குழு உறுப்பினர்களே இந்த விசாரணைகளில் பங்கேற்றிருந்தனர்.
தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் சாட்சியம் முடியும் வரை இருந்து ஒத்துழைத்தனர். அவர்களின் ஆதரவு இல்லாவிடின் , இந்த சாட்சியத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது” என்றும் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டார்.
நிலந்த ஜெயவர்த்தனவின் சாட்சியம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதையும் அவர் வெளிப்படுத்த மறுத்து விட்டார்.
இரகசிய விசாரணை
அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தனவை அடையாளம் காண்பதை தவிர்க்கும் வகையில், அவரது ஒளிப்படங்களையோ, சாட்சியத்தின் காளொளிப் பதிவையோ ஊடகங்கள் வெளியிட அனுமதிப்பதில்லை என, நாடாளுமன்ற தெரிவுக்குழு ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
இதனாலேயே, அவரிடம் இரகசிய இடம் ஒன்றுக்குச் சென்று தெரிவுக்குழு சாட்சியத்தை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள முன்னர் விவசாய அமைச்சு இயங்கிய கட்டடத்திலேயே இந்த சாட்சியம் பதிவு செய்யப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஒரு தகவல் கூறுகிறது.
இந்தக் கட்டடம் தற்போது நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
அதிக தகவல்கள்
அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தன தனது சாட்சியத்தின் போது, தாக்குதல்கள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல் தமக்கு கிடைத்தது என்பதை ஏற்றுக் கொண்டார் என்று தெரிவுக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஊடகங்களில் வெளியான தகவல்களை விட அதிகமான தகவல்கள் அவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும், தாக்குதல்களுக்குப் பின்னர் அதிகளவு தகவல்களை அவர் திரட்டியிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது,
புலனாய்வுத் தகவல் தொடர்பாக தாம் தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக இருந்த சிசிர மென்டிசுக்கு தெரியப்படுத்தியதாகவும் நிலந்த ஜெயவர்த்தன கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய கேள்விக்கு மௌனம்
இந்தப் புலனாய்வுத் தகவல் குறித்து சிறிலங்கா அதிபருக்கு தெரியப்படுத்தினீர்களா என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் மௌனமாக இருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவரது சாட்சியத்தின் பிரதியை பெற்றுக் கொள்ள தெரிவுக்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர் என்றும், மீண்டும் அவர் தெரிவுக்குழு முன்பாக அழைக்கப்படுவார் என்பதால், அப்போது அவரிடம் கேள்வி எழுப்பலாம் என்று சில உறுப்பினர்கள் இடையில் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
Tags :
comments