அரச ஊடகங்களில் இருக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளர்கள்- சுனந்த தேசப்பிரிய

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக மக்கள் விரோதப் போக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஜனநாயக செயற்பாட்டாளரும், மூத்த பத்திரிகையாளருமான சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிங்கள இணையத்தள சஞ்சிகையொன்றுக்கு அவர் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். குறித்த கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிக நீண்டகாலமாக ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

2002-2004 ஆண்டுகளுக்கிடையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவைக் கலைத்த அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் இம்முறை பதவிக்கு வந்த பின் அண்மையில் இனவாத ஊடகங்களுக்கு எதிராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரத்தக் காட்டேறிகள், அரக்கர்கள் போன்ற கடும் வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் கண்டனம் தெரிவித்திருந்தார். இனவாத ரீதியில் பேனையைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் பிரதமரின் கண்டனம் நியாயமானது.

அதே நேரம் பிரதமர் தொடர்ந்தும் அதே போக்கைக் கையாள முற்படுவது ஊடகங்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும். அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது.

பிரதமர் முதலில் அரச ஊடகங்களில் இருக்கும் கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளர்களை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஊடகங்களுக்கு ஓரளவு கருத்துச் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

மேலும் இந்தியாவுடனான பொருளாதார ஒப்பந்தத்தை எதிர்த்து வீதிக்கு இறங்கி போராட்டங்களை நடத்துவோருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுங்கட்சியும் ஆதரவாளர்களை வீதிக்கு இறக்கவுள்ளதாக பிரதமர் அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. பொதுமக்களின் கருத்துக்களை அச்சுறுத்தி அடக்க முயற்சிப்பதற்கு ஒப்பானது.

அத்துடன் அரச மருத்துவர் சங்கம் அமைச்சர் ஹரினுக்கு எதிராக பதுளையில் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தின்போது இந்த எதிர் ஆர்ப்பாட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இனி அரசாங்கத்தின் ஆதரவுடன் நாடுமுழுவதும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நம்பலாம்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாக நல்லாட்சி அரசாங்கம் பொதுமக்கள் விரோத பாதையில் பயணிக்க முற்படுகின்றமை புலப்படுகின்றது என்றும் சுனந்த தேசப்பிரிய தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சுனந்த தேசப்பிரிய குறிப்பிட்டது போன்று அரச ஊடகங்களில் சில கூலிக்கு மாரடிக்கும் சில ஊடகவியலாளர்கள் உள்ளனர். தாங்கள்தான் இந்த அரசாங்கத்தின் பிரதமர் போன்று செயற்படுகின்றனர்.

குறிப்பாக தமிழ் பிரிவிலுள்ளவர்களின் செயற்பாடுகள் அருவருப்பாக உள்ளதாம். தூசன வார்த்தைகள் லாவகமாக பயன்படுத்தப்படுகின்றது. தான் செய்திப்பிரிவிற்கு பொறுப்பானவர் என்ற அகங்காரத்தில் கண்டதற்கெலலாம் தூசன வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகின்றாராம்.

தன்னை எவரும் ஒன்றும் செய்ய முடியாது என்கின்ற நினைப்பில் நடுநிலையான, திறமையான ஊடகவியலாளர்களை தனது நிறுவனத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றாராம். இது விடயத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் குறித்த நிறுவனத்தின் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

மக்களின் நல்லாட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களை சில கூலிக்கு மாறடிக்கும் பொறம்போக்கு உடகவியலாளர்கள் புறக்கணிக்க முற்படுவது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

Image title

உதைபந்தாட்ட வளர்ச்சிக்கு புதிய மாற்றங்கள் நம்பிக்கையளிக்கும்

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் புதிய தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று திங்கட் கிழமை காலை 10 மணிக்கு அக்கரைப்பற்று டாக்டர் பதியுதீன் மௌமூத் வித்தியாலயத்தில் நடைபெற்றபோதே தலைவராக ஏ.எல்.தவம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் தலைவரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எம்.ஏ.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இப்போதுக்கூட்டத்தில் லீக்கில் பதிவு செய்து இயங்கி வருகின்ற கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இங்கு அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் செயலாளராக என்.ரீ.பாறூக், பொருளாளராக ஏ.எச்.ஹம்ஸா சனூஸ், உப தலைவர்களாக எம்.ஏ.நவாஸ், எம்.பி. செய்னுலாப்தீன்,எஸ்.எம்.அறூஸ்,ஏ.எல்.அன்வர்,ஐ.எச்.ஏ.வஹாப், உபசெயலாளராக எம்.சாதீக், உபபொருளாளராக எம்.ஐ.எம்.றியாஸ், முகாமையாளராக எ.எல்.றமீஸ், பயிற்றுவிப்பாளராக எம்.எச்.அஸ்வத்,கணக்காய்வாளராக ஏ.எல்.கியாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் துணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் அடுத்த நிர்வாக சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக செயற்பாட்டு ரீதியில் பின்னடைந்து காணப்பட்டு வந்த அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் பொதுக்கூட்டத்தை கூட்டுமாறு பல தடவைகள் விளையாட்டுக் கழகங்களினால் கோரப்பட்டு வந்தது.

நீண்டகாலமாக உதைபந்தாட்ட வீரா்களின் கனவாக இருந்து வந்த உதைபந்தாட்ட லீக் அக்கரைப்பற்று லீக்காக தோற்றம் பெற்ற விடயம் எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உதைபந்தாட்ட லீக்கிற்குரிய எந்தவித செயற்பாடுகளும் இன்றி லீக்கின் செயற்பாடுகள் அமைந்தது மிகப்பெரிய கவலையாக இருந்தது.

இன்று புதியவர்கள் நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது புதிய உத்வேகத்துடன் அக்கரைப்பற்று லீக் செயற்படும் என்பதற்கு நம்பிக்கையளித்துள்ளது. அதன் தலைவரான மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆளுமைமிக்கவர். அவரது கன்னி உரையே மிகவும் சிறப்பாக அமைந்தது. உதைபந்தாட்டத்தின் வளர்ச்சிக்காக பல வேலைத்திட்டங்கள் முன்னடுக்கப்படும் என்று அறிவித்ததுடன் விரைவில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். அத்தோடு கழகங்களின் ஒத்துழைப்பினையும் வேண்டிக் கொண்டார்.

செயலாளராக தெரிவு செய்யப்பட்ட என்.ரீ.பாறூக் உதைபந்தாட்ட லீக் தொடர்பில் பரிட்சயமிக்கவர். மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவராக பல வருடங்கள் கடமையாற்றியவர். அவ்வாறான ஒருவரின் சேவையைத்தான் அக்கரைப்பற்று லீக் இதுவரை எதிர்பார்த்து இருந்தது.

பொருளாளரான அஹம்ஸா சனூஸ் உதைபந்தாட்டத்தில் பல சாதனைகளைப் படைத்தவர். நல்லதொரு சமூக சேவையாளன். உதைபந்தாட்டத்தை இப்பிரதேசங்களில் வளர்த்து எடுக்க வேண்டும் என்பதில் தீராத ஆசை கொண்டவர். இவ்வாறானவர்களுடன் உதைபந்தாட்ட தேசிய அணியில் விளையாடி பெருமை சேர்த்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.நவாஸ், ஏ.ஜிஅன்வர் மற்றும் உப தலைவர் செய்னுலாப்தீன், முகாமையாளர் றமீஸ், பயிற்சியாளர் எம்.எச்.அஸ்வத் போன்றவர்களின் அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகளும் அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக் வளர்ச்சியடைந்து நமது பிரதேசங்களில் மிகவும் திறமையான வீரா்கள் தேசிய மட்டத்தில் பிரகாசிப்பார்கள் என நம்பலாம்.

Image title

முபாரக் மௌலவியின் கருத்து தொடர்பில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்

பெண்கள் தாமாக விரும்பாத வரை அவர்களை கட்டாயப்படுத்தி அரசியலில்; 25 வீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது பல குடும்பங்களில் அநாவசிய பிரச்சினைகளை தோற்றுவிக்கச்செய்வதோடு பலர் தமது மனைவிமாரை இழக்கும் நிலையும் ஏற்படலாம் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நடை பெற்ற கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.

பெண்கள் தாம் விரும்பினால் அவர்கள் அரசியலுக்கு வரலாம். பெண்கள் அரசியல் செய்யக்கூடாது என்ற சட்டம் நாட்டில் இல்லை. ஆனாலும் ஒழுக்கமான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அரசியலுக்கு வருவதை தவிர்த்தே வருகிறார்கள். காரணம் நமது நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகளும் தலைவர்களும் ஒழுக்கம் கெட்டவர்களாக இருப்பதுதான் காரணம்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த, அங்கம் வகிக்கும் பெண்களில் பலர் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. பெரும்பாலும் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகைகள், பாடகிகள் என்றே இருக்கின்றனர். ஆக பெண்களுக்கு இருபத்தைந்து வீதம் வேட்பாளர் பட்டியல் எனும் போது இத்தகைய பெண்களே அரசியலுக்கு முன் வருவார்கள்.

சமூகத்தை சீரழிக்கும் இத்தகைய பெண்களால் ஏற்கனவே சீர் கெட்டுப்போயுள்ள அரசியல் மேலும் சாக்கடையாகும் நிலையே ஏற்படும். அத்துடன் பெண்கள் அரசியலுக்குள் வருவதன் மூலம் பல கணவன்மார் தமது மனைவிமாரை பறி கொடுக்கும் நிலையும் வரலாம். அரசியல்வாதிகளிடம் தொடர்பு வைத்திருக்கும் பல ஆண்கள் தமது மனைவியரை பறிகொடுக்கும் நிலை இலங்கை அரசியலில் மிக அதிகமாகவே உள்ளது.

அத்துடன் 25 வீதம் பெண் வேட்பாளர் வேண்டும் என்பதற்காக சில கட்சிகளினால் பெண்கள் விருப்பமின்றியே கட்டாயப்படுத்தப்பட்டு பட்டியலில் இணைக்கப்படும் நிலையும் ஏற்படும். இது அப்பட்டமான பெண்ணுரிமை மீறலாகும்.

மேலும் அரசியலில் அவதூறு என்பது கட்டாய கடமை என்பது போல் இருக்கும் நமது நாட்டின் ஜனநாயகத்தில் ஒழக்கமுள்ள பெண்கள் அநியாயமாக தமது மானத்தையும், கௌரவத்தையும் தேர்தல் மேடைகளில் இழக்க வேண்டியும் ஏற்படும் என்பதை எம்மால் உறுதியாக சொல்ல முடியும்.

ஆகவே பெண்களுக்கு 25 வீதமோ 50 வீதமோ என்றில்லாமல் பெண்கள் விரும்பினால் அவர்களை எத்தனை வீதமாகவும் வேட்பாளர்களாக நியமிக்கலாம் என்ற வழமையான சட்டத்தை அமுல்படுத்துவதே பெண்களை அநாவசியமாக அரசியலுக்குள் இழுத்து அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் இழிவு படுத்தும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியும் என முபாறக் மௌலவி மேலும் இங்கு தெரிவித்துள்ளார்.

முபாரக் மௌலவியின் கருத்தின்படி பெண்கள் அரசியலில் ஈடுபடுவதும், அதிகாரத்திற்கு வருவதும் பல வகையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றுள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் கட்டாய அரசியல் பெண்களை ஈடுபடச் செய்ய எடுத்துள்ள நடவடிக்கை அப்பட்டமான பெண் உரிமை மீறலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

முபாரக் மௌலவியின் கருத்தின் அடிப்படையில் இனிவரும் தேர்தல்களில் பெண்கள் குதிக்கும் போது குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தங்களை மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். முபாரக் மௌலவியின் கருத்துத் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

முபாரக் மௌலவி பதிவு செய்யப்பட்டாத உலமாக் கட்சியின் தலைவராக இருந்து வருகின்ற போதிலும் அண்மையில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டு அக்கட்சியில் பதவி ஒன்றையும் பெற்றிருக்கின்றார்.

இவ்வாறான ஒரு நிலையில் முபாரக் மௌலவியின் கருத்தினை எந்தக்கட்சியின் கருத்தாக பார்க்க வேண்டிய குழப்பகரமான நிலை மக்களுக்கு உள்ளது. தங்களது கட்சியில் பதவி வகிக்கும் முபாரக் மௌலவியின் கருத்தினை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அங்கிகரித்துள்ளாரா? என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Image title

சாப் விளையாட்டுப் போட்டியும், அம்பாரை வீரா்களின் வரலாற்றுச் சாதனையும்- களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

சாப் விளையாட்டுப் போட்டியும், அம்பாரை வீரா்களின் வரலாற்றுச் சாதனையும்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது இந்தியாவின் அஸாமில் நடைபெற்று வருகின்றது. 12 ஆவது தடவையாக இடம்பெறும் இவ்விளையாட்டுப் போட்டியில் தெற்காசிய பிராந்தியத்தின் எட்டு நாடுகள் கலந்து கொள்கின்றது.

ஆரம்பத்தில் ஏழு நாடுகளே சாப் என்று அழைக்கப்படும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றியது. பிறகுதான் ஆப்கானிஸ்தான் நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இதுவரை நடைபெற்ற 11 விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியாதான் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது. பாக்கிஸ்தான் 7 தடவைகளும், இலங்கை 3 தடவைகளும் இரண்டாமிடங்களைப் பெற்றுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா பலமிக்க வீரா்களைக் கொண்ட நாடு என்பதை தொடர்ந்தும் நிருபித்துள்ளது. இலங்கை முதல் தடவையாக 1991ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் சிறிய பதக்க மாற்றத்தில் முதலாமிடத்தையும் பறிகொடுத்தது.

இலங்கை நீச்சல் அணியில் அங்கம் வகித்த நீச்சல் சாதனை வீரர் ஜுலியன் போலிங், நீச்சல் வீராங்கனை தீபிகா சண்முகம், மெய்வல்லுநர் அணியில் இடம்பெற்ற தமயந்தி தர்சா, சிறியாணி குலவன்ஸ,கருணாரத்ன போன்றவர்களின் அதீத திறமைகள் இலங்கை கூடுதல் தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக அமைந்தது.

அத்தோடு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் பலமிக்க இந்தியாவை தோற்கடித்து இலங்கை அணி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது. இந்தப் போட்டி நடைபெற்று இன்றைக்கு 25 வருடங்கள் கடந்த போதிலும் அந்தப் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தவன் என்ற வகையில் அந்தக்காட்சிகள் என் மனத்திரையைவிட்டு அகலவில்லை.

இலங்கையின் விளையாட்டுத்துறையில் 1991ம் ஆண்டு நடைபெற்ற சாப் போட்டிகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் இளம் வீரா்கள் பல சாதனைகளைப் படைப்பதற்கும் உந்து சக்தியாக அமைந்தது. பிற்பட்ட காலப்பகுதியில் சுதந்திகா ஜெயசிங்க, சுகத் திலகரத்ன போன்ற சாதனை வீர,வீராங்கனைகளும் இலங்கையில் தோன்றினர்.

சுதந்திகா ஜெயசிங்க, சுகத் திலகரத்ன மற்றும் பல திறமையான வீரா்கள் தங்களது போட்டி நிகழ்ச்சிகளில் சாதனைகளுடன் கூடிய தங்கனப்பதக்கங்களைப் பெற்றுக் கொண்டது சர்வதேசம் அறிந்த விடயமாகும். சுதந்திகாவின் இந்த சாதைனைகள்தான் ஒலிம்பிக்கில் இலங்கை மக்களின் கனவாக இருந்து வந்த பதக்கம் ஒன்றுக்கான ஏக்கத்தை நிறைவேற்றிக் கொடுத்து.

அண்மைக்காலமாக சர்வதேசப் போட்டிகளில் மிகப் பெரிய பெறுதியில் இலங்கையின் மெய்வல்லுநர் வீரா்களால் சாதிக்க முடியாவிட்டாலும் பிராந்திய ரீதியான போட்டிகளில் பிரகாசித்து வருகின்றனர்.

இந்தியாவின் அஸாமில் நடைபெறும் போட்டிகளில் இலங்கையின் வெற்றிகள் குறித்து முழுமையான நம்பிக்கையோடு விளையாட்டுத்துறை அமைச்சு இருக்கின்றது. தமது நாடு இழந்துவிட்ட உயரிய இடத்தை மீண்டும் திரும்பப் பெறவேண்டும் என்கின்ற சிந்தனையோடு செயல்படுகின்ற விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர போட்டிகளைக் கண்டு களிப்பத்றகாகவும், வீரா்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இந்தியா சென்றுள்ளார்.

அதேபோன்று பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் 13ம் திகதி இந்தியா செல்வதுடன் இறுதி நிகழ்வில் இலங்கையின் பிரதிநிதியாகவும் கலந்து கொள்கின்றார்.

தற்போது இடம்பெறும் போட்டி முடிவுகளின் படி இலங்கையின் பதக்க வேட்டை சிறப்பாக இடம்பெறுவதாக செய்திகள் கூறுகின்றது. குறிப்பா நீச்சல் போட்டியில் இலங்கை வீரா்கள் அசத்தி வருகின்றனர். முதல் கட்ட உதைபந்தாட்டப் போட்டியில் 10 வருடங்களின் பின்னர் இலங்கை இந்தியாவை தோற்கடித்துள்ளது.

இதில் விசேட அம்சமாக சாப் போட்டி வரலாற்றில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மெய்வல்லுநர் வீரா்கள் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். அட்டாளைச்சேனை- ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ரஜாஸ்கான், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த எ.எல்.அஸ்ரப் ஆகியோர்களாகும்.

இந்த இரண்டு பேரின் பங்குபற்றுதலை நம்மவர்கள் அறிந்து வைத்திருந்த நிலையிலும் அவர்களைப் பாராட்டுவதற்கு மனமில்லாதவர்களாக இருந்துவிட்டனர். இரண்டு வீரா்களின் ஆரம்பகால வெற்றிகளையும், திறமைகளையும் ஊடகங்களில் முதலில் கொண்டு வந்தவன் என்ற வகையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியுள்ளது.

இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு ஆளுமையுள்ள அமைச்சரும், ஒரு பிரதியமைச்சரும் கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.

இலங்கை நாட்டின் வெற்றிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

Image title

களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம் – நல்லாட்சி அரசுக்குள் முரண்பாடு?

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

தேசிய அரசாங்கத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்குமிடையில் அறிக்கைப் போர் ஆரம்பமாகியுள்ளது. முரண்பாடுகள் வெளியில் தெரியாமல் இருந்து வந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸவின் கைதுக்குப் பிறகு பகிரங்கமாக மாறியுள்ளது.

சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் பலரும் சிறைக்குச் சென்று யோசித்தவைப் பார்வையிட்டதுடன் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிப்பது போல் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அறிக்கை ஒன்றினை விட்டுள்ளார். அதில் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய பிரபு ஒருவரின் மகன் கைதானமையை தாங்கிக் கொள்ள முடியாத பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் எனவும் அதற்கு தடையில்லை.பதவி விலகப் போவதாக கூறி தொடர்ந்தும் ஊடக கண்காட்சி நடத்த வேண்டியதில்லை. பதவி விலக விரும்புவோர் தங்களது பெயர்களை உடனடியாக வெளியிட வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டம் அனைவருக்கும் சமமானது. யாரேனும் சட்டத்தை மீறினால் தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என லக்ஸ்மன் கிரியல்லவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தியதாகவே தேசிய அரசாங்கம் செயற்படுகின்றது. இன்று நாட்டில் பல விடயங்களில் அரசுக்குள் கருத்து முரண்பாடு காணப்படுகின்றது. உரிய காலத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டிய உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. கீழ் மட்ட மக்களின் அபிவிருத்திக்கு பாரிய தடையினை தேர்தல் பிற்போடப்பட்டமை ஏற்படுத்தியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக் கொண்டு மக்களின் வாக்களிக்கும் உரிமையை பிற்படுத்துவது ஆரோக்கியமான விடயமாகத் தெரியவில்லை. இலங்கை போன்ற நாட்டுக்கு ஒரு கட்சி அரசாங்கம்தான் சரிவரும் என்று சொல்லுகின்ற நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்தும் முரண்பாடுகள் காணப்படுமாயின் அரசுக்குள் குழப்ப நிலை உண்டாகும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

பிரதமர் இது விடயத்தில் தமது அமைச்சர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அறிய வருகின்றது. தேசிய அரசாங்கத்தை முன் கொண்டு செல்ல வேண்டுமாயின் ஜனாதிபதியும்,பிரதமரும் தமது கட்சிகளின் அமைச்சர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஊடக அறிக்கைகளை தவிர்த்துக் கொள்வதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கான நல்ல திட்டங்களை அமுல்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும்.

Image title

நல்லாட்சியில் சுதந்திர தினம் களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற இலங்கை மக்கள் அனைவருக்கும் களம் பெஸ்ட் இணையத்தளம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இலங்கை மக்கள் அணைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுகின்ற ஒரு நிகழ்வாக சுதந்திர தினம் இன்று மாறியுள்ளது. பல்வேறு கெடுபிடிகள் நிறைந்த காலமாக கடந்தகால ஆட்சி இருந்து வந்தது. புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றத்தின் மூலம் இன்று மக்கள் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்ற நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

வடக்கில் ஒரு கொள்கையும் தெற்கில் ஒரு கொள்கையும் என்கின்ற நிலைப்பாடுகள் மாறி முழு இலங்கையும் ஒரே கொள்கையின் கீழ் பயணிக்கின்றது என்கின்ற சந்தோசம் இன்றைய சுதந்திர தினத்தில் காணப்படுகின்றது.

சுதந்திரமான கருத்துக்களை முன்வைக்க முடியாது, மாற்று அரசியல் செய்வதற்கான தடைகள், ஊடக அடக்குமுறைகள், கொலைகள்,கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் என்று இருந்து வந்த நாட்டின் நிலவரம் இன்று முற்றாக மாறியுள்ளது.

தங்களது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்கக் கூடிய நிலை காணப்படுகின்றது. ஜனாதிபதி, பிரதமர் விமர்சிக்கப்படுகின்றார்கள், ஊடகங்கள் சுதந்திரமாக எழுதுகின்றன. அரசியல் கட்சிகள் தங்களது செயற்பாடுகளை அச்சமில்லாமல் மேற்கொள்கின்றனர், நீதித்துறை சுதந்திரமாக இயங்குகின்றது. தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக போாராட்டங்களை முன்னடுக்கின்றனர் இவ்வாறான ஒரு நிலை இலங்கையில் காணப்படுவது இலங்கையர் ஒவ்வொருவரும் சந்தோசப்படுகின்ற விடயமாகும்.

இன்று இலங்கையில் காணப்படுகின்ற சுதந்திரம் எதிர்வரும் காலங்களிலும் நீடிக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் வேண்டுதலாகும்.

புதிய அரசியலமைப்பு மாற்றம், சிறுபான்மையினருக்கான தீர்வுத்திட்டங்கள் என்பனற்றில் அரசாங்கம் முன்னடுக்கும் நடவடிக்கைகள் சிறுபான்மையினர் மத்தியில் எவ்வாறான தாக்கங்களை கொண்டு வரப்போகின்றது என்கின்ற விடயம் மிக முக்கியமாகும்.

சிறுபான்மையினருக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராகவே பல போராட்டங்கள் நாட்டில் ஏற்பட்டிருந்தது. அந்த விடயங்களை கவனத்தில் கொண்டு செயற்படுவதன் மூலமே நாட்டில் நிரந்தரமான சுதந்திரத்தை வெற்றி கொள்ள முடியும்.

இன்றைய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாம் எல்லோருக்கும் உண்மையான ஒழுக்கப்பண்பாடும் அறிவுபூர்வமானதும் சமத்துவமானதுமான சேவையை வழங்க எம்மை நாம் அர்ப்பணிப்போம்.

Image title

ஒலுவில் பிரகடனத்திற்கு வயது 13 ஆசிரியர் தலையங்கம்

(களம் பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்)

முஸ்லிம்களின் தேசிய எழுச்சியும், முஸ்லிம் தேசியக் கோட்பாட்டுப் பிரகடனமும் செய்யப்பட்டு இன்றோடு 13 வருடங்கள். இலங்கை அரசியலில் முஸ்லிம்களை தனியான தேசியமாக சுயாதீனமான மக்கள் எழுச்சி மூலம் பிரகடனப்படுத்திய இந்த நாளை எல்லோரும் நினைவு கூர்வோம்.

தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் திம்பும் பிரகடனமும், தமிழர்களின் தாயகக் கோட்பாட்டையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி நிற்பதைப் போன்று, ஒலுவில் பிரகடனம் முஸ்லிம்களின் தாயகக் கோட்பாட்டையும் சுயநிர்ணய உரிமையையும் வரையறுத்து நிற்பதை அவதானிக்கலாம்.

ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானமும் திம்பும் பிரகடனமும் தமிழர்களினது அரசியல் கட்சிகளாலும் ஆயுதக் குழுக்களாலும் முன்வைக்கப்பட்டவையாக இருக்கின்ற அதே சமயம், ஒலுவில் பிரகடனம் அரசியல் நிறுவனங்களின் தலையீடற்ற சுயாதீன மக்கள் எழுச்சியும் கோட்பாட்டுப் பிரகடனமுமாகும்.

ஒலுவில் பிரகடனத்தை தென்கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் சமூகமே முன்கொண்டு சென்றது. அன்று மாணவர் சமூகத்திற்குத் தலைமை கொடுத்தவர் அன்றைய மாணவர் பேரவைத் தலைவர் ஏ.எல்.தவம் அவர்களாகும். .

அன்றைய ஒலுவில் பிரகடனத்திற்குப் பிறகு முஸ்லிம் சமூகம் சார்ந்த முன்னடுப்புக்கள் இன்று வரை சிவில் சமூகத்தினராலோ அல்லது அரசியல் கட்சிகளினாலோ முன்னடுக்கப்படவில்லை.

அண்மைக்காலமாக இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு பலவிதமான பிரச்சினைகளை இனவாதிகள் ஏற்படுத்திய நிலையில் அதனை தட்டிக் கேட்பதற்கும், மக்கள் மத்தியில் சிந்தனை ரீதியான போராட்டக் குணத்தை வெளிப்படுத்துவதற்கும் தலைமை கொடுக்க ஆளில்லாத சமூகமாக முஸ்லிம்கள் இன்று காணப்படுகின்ற துர்ப்பாக்கிய களத்தினைக் காண்கின்றோம்.

அரசியல் கட்சி ரீதியான கொள்கைக்குள் அடங்கிப் போய் பதவிகள் முன்னிலைப்படுத்தப்பட்டு சமூகம் சார்ந்த முன்னடுப்புக்களை பிற்படுத்துகின்ற சிந்தனைக்கு நமது அரசியல்வாதிகள் இன்று வந்துள்ளதை பார்க்கின்றோம்.

காலத்திற்குக் காலம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேடைகளில் வீரவசனங்களைப் பேசிவிட்டு பதவிகள் கிடைத்ததும் அதிகார வட்டத்திற்குள் முடங்கிப் போய்விடுகின்றனர்.

தமிழர்களின் இன்றைய அரசியல் ரீதியான போராட்டம் அன்றைய ஆயுதம் தரித்துப் போராடிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தைவிட கூர்மையானதாக இருப்பதாக சொல்லப்படுகின்ற நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் எந்தப்பாதையால் பயணிக்கின்றது, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு செயற்படுவதால் கண்ட பலன்கள் என்ன என்பது தொடர்பில் பலவிதமான விமர்சனங்கள் எழுகின்றது.

அரசியல் கட்சிகளில் உள்ள சமூகம் சார்ந்த சிந்தனையாளர்களும், சிவில் சமூகத்தினரும், பல்கலைக்கழக மாணவ சமூகமும், ஊடகத்துறை செயற்பாட்டாளர்களும் ஒன்றினைந்து முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் முன்னடுப்புக்களை செய்வதற்கான சரியான களத்தினை அமைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் இடம்பெறப்போகின்ற அரசியல் அமைப்பு மாற்றத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை முன்வைக்க முடியும்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் கலந்துரையாடல்!

புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்தும், எமது தேசத்திற்கு பொருத்தமான யாப்பின் வடிவம் எவ்வாறு அமைய முடியும் என்பது குறித்தும் பல்வேறு மட்டங்களில் கருத்தாடல்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்தின் ஒரு பங்காளி என்ற வகையிலும், ஆட்சி மாற்றம் மாத்திரமன்றி ஆட்சி முறையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தி வந்த ஒரு கட்சி என்ற வகையிலும், உத்தேச அரசியலமைப்பு மாற்றம் குறித்து மிகுந்த அவதானத்துடனும் முனைப்புடனும் செயற்படுகிறது.

ஏற்கனவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இது குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதுடன், அரசியலமைப்பு மாற்றம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தி சமூக மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஊடக அறிக்கை மூலம் மக்களுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு கற்கைகளுக்கான நிறுவனமும் சுவிற்சர்லாந்து Fribourg பல்கலைக்கழகமும் இணைந்து, “அதிகாரப் பகிர்வினை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு மாதிரிகள்: பல்லின சமூகங்களில் எதிர்நோக்கும் சவால்களும் பார்வைகளும்” என்ற தொனிப்பொருளில் கடந்த ஒரு வாரகாலமாக கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் போன்ற முக்கிய நகரங்களில் கலந்துரையாடல்களை நடத்தி வந்தன.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் பிரத்தியேகமான கலந்துரையாடலொன்றை நடத்துவற்கு, மேற்படி இரு நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்திருந்தன.அந்த வகையில், கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

சுவிஸ் தூதரகத்தின் அரசியல் அலுவலக முதன்மைச் செயலாளரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பேராசிரியர் ஏவா மரியா பெல்செர் (சுவிட்சர்லாந்து), பேராசிரியர் நிகோ ஸ்டேய்ட்ளர் (தென் ஆபிரிக்கா), மௌறிசியோ மக்கேட்டி (சுவிட்சர்லாந்து) ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

அதிகாரப் பகிர்வினை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்புகளின் பிரதான அம்சங்களையும் பண்புகளையும் விளக்கியதுடன், அவை பல்வேறு சூழ்நிலைகளில் எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றன என்பதையும் பேச்சாளர்கள் விளக்கினர்.குறிப்பாக சுவிட்சர்லாந்திலும் தென் ஆபிரிக்காவிலும் உள்ள

அரசியலமைப்புக்களின் முக்கிய பண்புகளைப் பற்றியும் அவற்றின் நடைமுறைகள் பற்றியும் விளக்கப்பட்டதுடன், இவ்வாறான மாதிரிகளை வைத்து இலங்கை தனக்கான தனித்துவமான அரசியலமைப்பு முறையொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது.

இலங்கையும் பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடு என்ற வகையில்,பொதுவாக சகல பிரஜைகளினதும் உரிமைகள் சமமாக வழங்கப்படக் கூடிய வகையிலான அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களின் அவசியம் குறித்தும், ஒவ்வொரு இனக் குழுவுக்கும் பிரத்தியேகமாகக் காணப்படும் தனித்துவங்களைப் பேணக்கூடிய உரிமைகளையும் அபிலாஷைகளையும் உத்தரவாதப் படுத்தக்கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அவசியம் குறித்தும் சபையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன

புவிசார் தேசிய இனக் குழுக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? பரந்தளவில் சிதறிவாழும் சமூகங்களின் எதிர்பார்ப்புகள், அபிலாசைகள் என்ன? போன்ற விடயங்கள் இனங் காணப்பட்டு, அவற்றிற்குப் பொருத்தமான அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் கண்டறியப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம்

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம்

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தை முன்னிட்டு இன்று(25) நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்கள், காரியாலயங்கள், அமைச்சுக்கள் என்பவற்றில் உடற் பயிற்சி ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தினதும், விளையாட்டுத்துறை அமைச்சினதும் வழிகாட்டலில் இன்று 25ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் விசேட விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளும் உடல் ஆரோக்கிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்மொழிவில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரின் பங்களிப்பில் விளையாட்டுத்துறை அமைச்சு முன்னடுத்துள்ள இந்நிகழ்ச்சித் திட்டம் இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒரு திட்டமாகப் பார்க்கப்படுகின்றது.

தொற்றா நோயிலிருந்து ஒவ்வொருரையும் பாதுகாப்பதுடன் அரச நிர்வாகத்துறையை வினைத்திறன் மிக்கதாக ஆக்குவதற்கும் தேகாரோக்கியத்தை கடைப்பிடிப்பதற்கான இந்நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்தும் முன்னடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் சுற்றுநிருபம் அனுப்பியதற்காக அதனை செய்ய வேண்டும் என்கின்ற மனநிலையிலிருந்து மாறி நமக்காகத்தான் இத்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதை சரியான முறையில் அரசாங்க ஊழியர்கள் விளங்கிக் கொள்வார்களாயின் பெரிதும் உடற் பாதுகாப்பில் நன்மையடையலாம்.

மௌனித்துப்போன அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் எம்.பி பதவி

மௌனித்துப்போன அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் எம்.பி பதவி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வெற்றிடமான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவைச் சேர்ந்த எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத மாவட்டங்களுக்குத்தான் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அண்மைக்காலமாக கூறிவந்த நிலையில் எம்.எஸ்.தௌபீக்கின் நியமனம் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்காக பலரும் ரவுப் ஹக்கீமை பின் தொடர்ந்து வந்த நிலையில் தமக்குக் கிடைக்கும் தமக்குக் கிடைக்கும் என்று பலரும் கனவு கண்டு வந்தார்கள். அது மட்டுல்ல ரவுப் ஹக்கீமை அச்சுறுத்தும் பாணியிலும் நடந்து கொண்டார்கள் என்பதை அவ்வப்போது இணையத்தள ஊடகங்களிலும், சில அரசியல் பிரமுகர்களின் பேச்சுக்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.

கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் தவிசாளர் என்பவர்கள் முன்னிலைப்பட்டியலில் இருக்க அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு எப்படிக் கிடைக்கும் என்கின்ற யோசனைக்கப்பால் ரவுப் ஹக்கீம் அவர்கள் இருவரையும் முன்னிலைப்படுத்த விரும்பவில்லை என்பதை அவரின் தீர்மானங்கள் வெளிப்படுத்துகின்றது.

கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ள குறிப்பிட்ட இருவரும் அடுத்த கட்டமாக என்ன முடிவுகளை எடுக்கப்போகின்றார்கள் என்பதில் அக்கரை கொள்ளாத ஒருவராகவே ரவுப் ஹக்கீம் இருப்பதாக தெரிகின்றது. அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் இருவர் தொடர்பிலும் அவ்வளவு அசட்டையாக இருந்துவிட முடியாது என்பதையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக முக்கிய பதவியில் உள்ளவர்கள் என்பதால் மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கின்றபோதும், அமைச்சர் ரவுப் ஹக்கீமின் செயற்பாடுகளின் குறைபாடுகளையும், பிழைகளையும் தெரிந்து வைத்திருக்கின்றவர்கள் என்பதாலும் பெரியளவில் இல்லாவிட்டாலும் எந்த வகையிலாவது பாதிப்பு வருவதற்கு வாயப்புக்கள் இல்லாமலில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை பல பிரதேசங்களிற்கும் தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்கப்படும் என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்ததாக சொல்லப்படுகின்றது. அட்டாளைச்சேனைப் பிரதேசம், கல்குடா தொகுதி,கம்பஹா மாவட்டம், குருணாகல் மாவட்டம்,கொழும்பு மாவட்டம் என்பனவற்றிற்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதிலும் முஸ்லிம் காங்கிரஸின் இரும்புக் கோட்டையான அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதி கொடுத்தும் அதனை அவர் நிறைவேற்றவில்லை என்று ஆதரவாளர்கள் கவலை தெரிவித்தாலும் கட்சி முக்கியஸ்தர்கள் என்று சொல்லுகின்ற பிரமுகர்களின் போக்கு எம்.பி பதவியை பெற்றுக் கொள்வதில் பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

கடந்த பொதுத் தேர்தலில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் பகிரங்கமாக தேர்தல் மேடைகளில் அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் எம்.பி பதவியை வழங்கியே தீருவேன் என்று முழங்கியபோதும் அதனை அவர் நிறைவேற்றவில்லை. ஆனால் ரவுப் ஹக்கீம் அவர்கள் இப்போது இப்படிக் கூறிவருகின்றார், அட்டாளைச்சேனைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை அடுத்த கட்டத்தில் நிறைவேற்றுவேன் அதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று மீண்டும் பகிரங்கமாக சாய்ந்தமருதில் கூறியுள்ளார்.

அப்போதாவது நமக்குக் கிடைத்துவிடும் என்கின்ற ஆசையில் அட்டாளைச்சேனை கட்சி ஆதரவாளர்கள் இருக்கின்றனர். இதற்கிடையில் கட்சி செய்த துரோகத்திற்கு சரியான பாடத்தை பிரதேச சபைத் தேர்தலில் காட்டுவோம் என்கின்ற பேச்சுக்களும் பரவலாக உள்ளது.

தமக்கான எம்.பி பதவியை வெற்றி கொள்ளாதவர்களுக்கு தேசியப்பட்டியல் கொடுத்துத்தான் அடுத்த கட்டத்தை நகர்த்த வேண்டுமா? அல்லது ஏற்கனவே ஒரு தடவை தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்ட தௌபீக்கிற்கு வழங்கித்தான் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியுமா? இவரைவிட்டால் வேறு ஒரு நபர் கட்சியில் இல்லையா? என்கின்ற கேள்விகளும் எழுகின்றது.

அதுமட்டுமல்ல கிண்ணியா பிரதேசத்திற்கு மாற்றுக் கட்சிகளில் இரண்டுபேர் எம்.பி பதவி வகிக்கும் சந்தர்ப்பத்தில் மூன்றாமவராக அங்குதான் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பியும் போக வேண்டுமா? என்கின்ற கேள்வியை பலரும் கூறுவது போன்று கல்குடா ஆதரவாளர்களும் கேட்கின்றனர். நேற்று இரவு கல்குடா ஆதரவாளர்கள் அமைச்சர் ரவுப் ஹக்கீமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பல பிரதேசங்களும், பல முக்கியஸ்தர்களும் அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு அழுத்தங்களையும்,நெருக்குவாரத்தையும் கொடுத்தாலும் இருக்கின்ற இரண்டையும் வைத்துக் கொண்டு ஒரு கட்சியின் தலைமை என்கின்ற ஸ்தானத்தில் இருந்து முடிவுகளை எடுப்பது என்பது அவ்வளவு இலசுப்பட்ட விடயமல்ல என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். எந்த விடயத்தையும் வெளியில் இருந்து கொண்டு விமர்சிப்பது என்பது மிகப்பெரிய இலகுவான விடயமாகும்.

மாடறுப்பு தடையை எதிர்க்க முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமைப்பட வேண்டும்

நாட்டில் மாடு அறுப்­பதை தடை­செய்து வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறைச்­சியை இறக்­கு­மதி செய்­வது தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ள கருத்­தினால் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­க­வுள்ள மத கட­மை­க­ளுக்­கான சவால்கள் குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்கு தயா­ரா­கு­மாறு முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளுக்கு முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மாட­றுப்­பது தடை செய்­யப்­ப­டு­மென்றால் அது முஸ்­லிம்­களின் சம­யக்­க­ட­மை­க­ளுக்கு பாத­க­மாக அமையும். எனவே இது­பற்றி ஜனா­தி­ப­தியை நேரில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடாத்த வேண்டும். அதற்­காக அனைத்து முஸ்லிம் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பேதங்­களை மறந்து ஒன்­றி­ணைய வேண்டும்.

ஒரு அணி­யாக ஜனா­தி­ப­தியைச் சந்­திப்­பதன் மூலமே ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாட்டில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முடியும். ஜனா­தி­பதி மீது முஸ்­லிம்கள் மிகுந்த நம்­பிக்கை வைத்­துள்­ளார்கள் என்­பதை அவர் அறிவார். அவர் மீது நம்­பிக்கை வைத்தே முன்னாள் ஜனா­தி­ப­தியின் தோல்­விக்கு முஸ்­லிம்கள் முழுப்­பங்­க­ளிப்­பினை வழங்­கி­னார்கள்.

தமது பிரச்­சி­னைகள் தீர்த்­து­வைக்­கப்­படும் என்­பதில் முஸ்­லிம்கள் தொடர்ந்தும் உறு­தி­யாக இருக்­கி­றார்கள். எனவே முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் நாம் அனை­வரும் ஒன்­று­பட்டு ஜனா­தி­ப­தியைச் சந்­திப்­பதன் மூலமே எமக்கு சாத­க­மான தீர்­வு­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். அதற்­காக அனைத்து முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கிறேன் என்று அமைச்சரின் வேண்டுகோள் அமைந்துள்ளது.

இன்று இலங்கையில் முஸ்லிம்களினால் பேசு பொருளாக இவ்விடயம் மாறியுள்ளது. கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்வதற்கு முஸ்லிம்கள் களத்தில் நின்று போராடினார்கள். இன்று அந்தப் போராட்டம் பொய்ப்பித்துவிடுமோ என்கின்ற மனநிலைக்கு வந்துள்ளார்கள். இன்று முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனோ நிலையை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பதிலேயே அரசாங்கத்திற்கான முஸ்லிம்களின் ஆதரவு இருக்கப்போகின்றது.

அமைச்சர் ஹலீமின் வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட வேண்டியது மிக முக்கியமாகும்.

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் களம் பெஸ்ட் இணையத்தளம்

மக்களுக்கான ஊடகப்பயணத்தில் கடந்த மூன்று வருடங்களாக அர்ப்பணிப்புகளைச் செய்தும் சவால்களைக் கடந்தும் இயலுமான சாதனைகளை களம் பெஸ்ட் இணையத்தளம் பதித்துள்ளது.

நான்காவது ஆண்டில் இன்னும் புதிய மாற்றங்களுடன் பயணிக்கக் காத்திருக்கின்றது. நமது சமூகத்தின் உரிமைக்குரலை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட களம் பெஸ்ட் தேசிய ஒற்றுமைக்கும் களம் அமைத்திருக்கின்றது. மக்களுக்கான ஆட்சிக்கு மக்களின் குரலாக களத்தில் நின்று நியாயங்களை எடுத்துரைத்திருக்கின்றது.

எந்த சக்திகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ பக்கம் சாராமல் இயலுமான வரையில் களம் பெஸ்ட் பயணித்திருக்கின்றது என்ற திருப்தி எங்களிடம் இருக்கின்றது. எதிர்வரும் காலங்களிலும் அதனை முன்கொண்டு செல்வோம்.

எங்களது வளர்ச்சியில் பெரும் பங்காற்றி ஊக்கப்படுத்திய பெருமதி மிக்க வாசகர்கள்,பார்வையாளர்கள்,விளம்பரதாரர்கள் எல்லோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகும்.