இலங்கை குண்டுவெடிப்பில் பிரித்தானிய, பிரபல கோடீஸ்வரரின் 3 பிள்ளைகள் மரணம்

இலங்கையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பிரித்தானியாவின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரொருவரின் 3 பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்களெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவின் எஸ்.ஏ. ஓ.எஸ். நிறுவனத்தின் அதிக பங்குகளுக்கு உரிமையாளரான என்ட்ரோஸ் ஹொல்சியின் மனைவி, அவரது நான்கு பிள்ளைகளும் இலங்கைக்கு சுற்றுலா வந்தப் போதே இவ் அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் இரண்டாவது மிகப் பெரிய காணி உரிமையாளரான என்ட்ரோஸ் ஹொல்சியின் டென்மார்க் பிரஜை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் பலி

கொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பெண்களின் கர்ப்பப் பைகளை, அகற்றும் மோடி அரசு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் கர்ப்பப்பைகள் அகற்றப்படுவதாக வெளியான தகவல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கரும்பு விவசாயத்துக்கு பெயர்போனது. பெரும்பாலான மக்கள் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.

தற்போது இங்குள்ள கரும்புத் தோட்டங்களில் வேலைபார்க்கும் பெண்களுக்கு கர்ப்பப்பைகள் நீக்கப்பட்டிருப்பதும், அதற்கான காரணமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாதவிடாய் சமயங்களில் பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பெண்களால் கடின உழைப்பில் ஈடுபட முடியாது.

அந்தச் சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும். அதைக் காரணமாக வைத்து கரும்புத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களின் கர்ப்பப்பையை நீக்கவேண்டும் எனக் கரும்புத் தோட்ட ஒப்பந்ததாரர்கள் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய பெண் ஒருவர், எங்கள் கிராமத்தில் கர்ப்பப்பையோடு ஒரு பெண்ணைப் பார்ப்பதென்பது அரிதிலும் அரிதான காரியம் என தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி ஹாஜிப்பூர் கிராமத்துக்கு அருகில் உள்ள வஞ்சரவாடி என்ற கிராமத்தில் வசிக்கும் ஐம்பது சதவிகித பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏழைப் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி இந்த அவலம் நடந்தேறிவருகிறது தற்போது அம்பலமாகியுள்ளது.

கர்ப்பப்பையை நீக்குவதால் ஹார்மோன் குறைபாடுகள் முதல் புற்றுநோய்வரை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

நியூசிலாந்தில் பள்ளிவாயல்களில் துப்பாக்கிச்சூடு: 49 பேர் பலி

நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாயல்கள் 2ல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுல் 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உறுதிப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தோரில் 20 க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக‌ அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்நாளானது நியூஸிலாந்து வரலாற்றில் கறுப்பு தினங்களில் ஒன்றாகும் என பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார்.

கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இரண்டு பள்ளிவயல்களில் இன்று வெள்ளிக்கிழமை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது இதில் வெள்ளிக்கிழமை ஜும்மா வழிபாட்டில் கலந்துகொண்டவர்களே துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகியுள்ளனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அல் நூர் வழிபாட்டுத் தலத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், பாதுகாப்பாக தமது அணியினர் அப்பகுதியிலிருந்து வௌியேறியதாக அணித்தலைவர் தமிம் இக்பால் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

துப்பாக்கிகளுடன் காரில் வந்த ஆயுததாரி, வழிபாட்டுத் தலத்திலிருந்த அனைவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட காணொளிகள் இணையத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

எனினும், காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அவுஸ்திரேலிய பிரஜையொருவரும் உள்ளதை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து க்ரைஸ்ட் சர்ச்சிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் கண்டனம் வௌியிட்டுள்ளனர்.

துருக்கி, பிரித்தானியா, ஸ்கொட்லாந்து, பாகிஸ்தான் நாடுகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுபதாபங்களை தெரிவித்துள்ளதுடன், தாக்குதலுக்கு கண்டனத்தையும் வௌியிட்டுள்ளனர்.

இது திட்டமிட்டதொரு செயல் என நியூஸிலாந்தின் பொலிஸ் மா அதிபர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத்தினர் என்னை, நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள்: அபிநந்தன் தெரிவிப்பு

பாகிஸ்தான் இராணுவத்தினர் தம்மை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள் என்றும் அவர்கள் நடத்தை மிகவும் தொழில்முறையுடன் இருந்ததாகவும் இந்திய விமானி அபிநந்தன் கூறியுள்ளார்.

அவர் இவ்வாறு கூறும் காணொளியை பாகிஸ்தான் ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.

அந்தக் காணொளியில், தாம் ஓட்டி வந்த விமானம் சுடப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கோபமாக இருந்த மக்கள் கூட்டத்திடம் இருந்து தம்மை மீட்டதாகவும் அபிநந்தன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (01) இரவு இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் தரப்பால், வாகா – அட்டாரி எல்லையில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

இலங்கை அணிக்காக சகலதுறையிலும் பிரகாசிக்கத் தயார் – சந்திமால்

தன்னால் விக்கெட் காப்பைப் போன்று களத்தடுப்பில் ஈடுபட முடியும் என தெரிவித்த தினேஷ் சந்திமால், அந்தந்த நாடுகளில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு அமைய தெரிவு செய்யப்படுகின்ற அணியைப் பொறுத்து எந்தவொரு இடத்திலும் விளையாடத் தயார் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

எனினும், எந்தவொரு நாட்டில் விளையாடினாலும், அனைத்து போட்டித் தொடர்களும் இலங்கை அணிக்கு சவால் மிக்கதாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக நேற்று முன்தினம் (03) இரவு நியூசிலாந்து நோக்கி பயணமாகியது.

அங்கு செல்லும் இலங்கை அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் ஒரேயொரு டி-20 போட்டியில் விளையாடவுள்ளது. அதன் பிறகு, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடனான போட்டித் தொடர்களிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்து செல்ல முன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த மூன்று கிரிக்கெட் சுற்றுப்பயணங்களிலும் எமக்கு சாதகமான ஆடுகளங்கள் கிடைக்காது என்பதை நாம் நன்கு அறிவோம். அதுதான் நாம் சந்திக்கவுள்ள மிகப் பெரிய சவாலாகும். எனினும், அந்த சவாலுக்கு நாம் கட்டாயம் முகங்கொடுக்க வேண்டும். இந்த மூன்று தொடர்களிலும் எம்மால் மாற்றமொன்றை செய்ய முடியுமானால் அதுதான் எமது அணியின் எதிர்காலத்துக்கு மிகப் பெரிய சக்தியாக அமையவுள்ளதுடன், திருப்புமுனையாகவும் இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

அதே போன்று, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் ஒருசில தவறுகளை விட்டோம். இதன் காரணமாகவே எமக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டது. எனினும், அந்த தவறுகளையெல்லாம் நிவர்த்தி செய்து கொண்டு நியூசிலாந்து அணியுடனான தொடரில் சிறப்பாக விளையாடவுள்ளோம். அத்துடன், ஒரு சகலதுறை வீரராக நான் விளையாடவுள்ளேன். எனக்கு விக்கெட் காப்பபைப் போல களத்தடுப்பிலும் ஈடுபட முடியும். எனவே நான் எந்த இடத்தில் விளையாட வேண்டும் என்பதை உடனே தீர்மானிக்க முடியாது. அந்தந்த நாடுகளில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு அமைய தெரிவு செய்யப்படுகின்ற அணியைப் பொறுத்து எந்தவொரு இடத்திலும் விளையாடத் தயார் என அவர் கூறினார்.

இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவுக்கு, சுமார் ஒரு வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தொடர் உபாதைகள் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, லஹிரு திரிமான்ன மற்றும் நுவன் பிரதீப்பின் மீள்வருகை குறித்து சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் திரிமான்ன திறமையான துடுப்பாட்ட வீரர் என்பதை நாம் நன்கு அறிவோம். இறுதியாக நடைபெற்ற இலங்கை A மற்றும் இலங்கை பதினொருவர் அணிகளுக்காக விளையாடி துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார். எனவே திரிமான்னாவின் மீள்வருகையானது எமது துடுப்பாட்ட வரிசைக்கு பலத்தை கொடுக்கும்.

அத்துடன், வேகப்பந்துவீச்சாளர் நுவன் பிரதீப் அண்மைக்காலமாக தொடர் உபாதைகளுக்கு முகங்கொடுத்து வந்தார். தற்போது அவர் உபாதைகளிலிருந்து பூரண குணமடைந்து அணிக்குள் மீண்டும் திரும்பியுள்ளார்.

எனவே, இந்த இரண்டு வீரர்களின் மீள்வருகையானது எமக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளதுடன், அவர்களது அனுபவங்கள் இந்த மூன்று தொடர்களிலும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியுடன் காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் சுழல் பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணி தொடர்பாக நடுவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஆய்வுக்குள்ளான அவரது பந்துவீச்சுப் பாணி பரிசோதனையின் இறுதி அறிக்கை கிடைக்கும் வரையில் அவருக்கு டெஸ்ட் குழாமில் வாய்ப்பு வழங்காமல் இருக்க தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், அகில் தனஞ்சய டெஸ்ட் அணியில் இடம்பெறாமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சந்திமால் கருத்து தெரிவிக்கையில்,

”அகில தனஞ்சய அணியில் இடம்பெறாமை மிகப் பெரிய இழப்பாகும். கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இடம்பெற்ற மூவகைப் போட்டிகளிலும் சுழல் பந்து வீச்சில் இலங்கை அணிக்காக பிரகாசித்த ஓரேயொரு பந்துவீச்சாளர் அவர்தான். எனினும், துரதிஷ்டவசமாக அவருடைய பந்துவீச்சுப் பாணி தொடர்பில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டது. எனவே குறித்த பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி வெளிவரவுள்ளது. அவருடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து விரைவில் அணியுடன் இணைந்து கொள்வார்” என அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, ஏதிர்வரும் 8 ஆம் திகதி நேப்பியரில் ஆரம்பமாவுள்ள மூன்று நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், உண்மை நிலையை விவரிக்கும் செய்தியாளர் மாநாடு

(ஐ. ஏ. காதிர் கான்)

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்பு விடுதலை செய்யப்பட்ட இலங்கை இளைஞரான மொஹமட் நிஸாம்தீன், கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குறித்த இளைஞர் முகங்கொடுத்த அவலங்கள் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தொடர்பில், நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவிக்கவுள்ளார்.

இது தொடர்பிலான உண்மை நிலையை ஊடகங்களுக்குத் தெளிவூட்டும் செய்தியாளர் சந்திப்பொன்று,(இன்று) 7 ஆம் திகதி புதன்கிழமை,மாலை 3.30 மணிக்கு, இடம் : கொழும்பு – சன்கிரில்லா ஹோட்டலில் (Colombo – Shangrilla Hotel – Lotus Boll Room Yellow) இடம்பெறவுள்ளது.

வெளிநாடுகளின் கோரிக்கையின்படி நாடாளுமன்றத்தைக் கூட்டவே கூடாது! – கோட்டா சண்டித்தனம்

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பல நாடுகள் முயற்சிக்கின்றன என்றும், வெளிநாடுகளின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது என்றும் கூறியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“மைத்திரி – மஹிந்த அரசில் நான் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. தற்போதைய அமைச்சர்கள், மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கி அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டிய தேவை உள்ளது.

அதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுத்து அரசை அமைக்க வேண்டும்.

வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு முகம் கொடுக்கும் பல்வேறு முயற்சிகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது. ஆனால், நாங்கள் பொதுவாக அதனைக் கவனிக்கவில்லை.

எமது அரசமைப்புக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். வெளிநாட்டவர்கள் கேட்கின்றார்கள் என்பதற்காக நாங்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது.

ரணில் விரும்பினால் அலரி மாளிகையில் தங்கியிருக்கலாம். அவர் பிரதமராக பாசாங்கு செய்கின்றார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜமால் காசோஜி சண்டையின் பின் உயிரிழந்ததாக சவுதி ஒப்புக்கொண்டது

காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சௌதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, விசாரணைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.

ஜமால் காசோஜி இறந்துள்ளதை முதல் முறையாக சௌதி அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சௌதி புலனாய்வு அமைப்புகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக இளவரசர் முகமத் பின் சல்மான் தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்றை சௌதி மன்னர் சல்மான் அமைத்துள்ளார்.

செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால், அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் உடன் இந்த விவகாரம் தொடர்பாக மன்னர் சல்மான் நிகழ்த்திய தொலைக்காட்சி உரையாடலுக்கு பிறகு அவர் இறந்ததாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னனதாக, ஜமால் கசோஜியின் உடலை அருகில் உள்ள காடு மற்றும் விளைநிலத்தில் துருக்கி காவல்துறை தேடியது.

அவர் துணைத் தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதற்கான காணொளி மற்றும் ஒலிப்பதிவு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக துருக்கி கூறியிருந்தது.

ஜமால் கசோஜி துணைத் தூதரகத்துக்கு சென்ற பின் அங்கிருந்த அதிகாரிகளுடன் சண்டை நடந்துள்ளது. அச்சண்டை அவரது மரணத்தில் முடிந்தது.

துருக்கியில் இன்னும் தொடரும் இந்த விசாரணையில் இதுவரை 18 சௌதி அரேபிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கசோஜி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபின், அவரது உடல் துண்டுகளாக்கப்பட்டது என்று இந்த வழக்கை விசாரித்து வரும் துருக்கி அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் கசோஜி மாயமான 17 நாட்களுக்கு பிறகு, அவர் அதிகாரிகளுடனான சண்டையைத் தொடர்ந்து இறந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள சௌதி அரசு தெரிவித்துள்ள கூற்று வேறு மாதிரியாக உள்ளது. அதாவது இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை அல்ல என்பதை நிறுவ சௌதி முயல்கிறது.

சௌதி அரசுடன் மிகவும் நட்புடன் இருக்கும் மேற்கு நாடுகள் இந்த விவகாரத்தில் சௌதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் லேன்ஸ்டேல்.

பிபிசி

இந்தோ​னேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஆழிப்பேரலைத் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்வு

இந்தோ​னேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலைத் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்வடைந்துள்ளது.

7.5 ரிக்டர் அளவில் பதிவாகிய பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாலு நகரின் கரையோரப் பிரதேசங்களை ஆழிப்பேரலை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

9.8 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்துள்ளன. இதனால் கட்டடங்கள், மதவழிபாட்டுத்தலங்கள் ஆகியன இடிந்து வீழ்ந்துள்ளன. மேலும், சுற்றுலாத்தலமொன்றும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பாலு நகரம் கட்டட இடிபாடுகளுடன் காட்சியளிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆழிப்பேரலை தாக்கிய போது, பல்பொருள் அங்காடியில் இருந்த 3,80,000 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ​னேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து, விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்ட சிறிது நேரத்தில் சுனாமி தாக்கியுள்ளது.

இந்தோனேஷியாவின் லொம்பொக் தீவில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 500 பேர் உயிரிழந்தனர்.

2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்தோனேஷியாவின் சுமாத்ரா கடற்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் இந்து சமுத்திரப் பிராந்தியங்களில் 2, 26,000 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 1,02,000 பேருக்கு மேல் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் படைகளால் 180 பலஸ்தீனியர்கள் கொலை

ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில், இஸ்ரேல் படைகளால் 180 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

70 வருடங்களுக்கு முன்னர் வௌியேற்றப்பட்ட தமது சொந்த நிலங்களுக்கும், வீடுகளுக்கும் செல்ல தம்மை அனுமதிக்க வேண்டுமென கோரி கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக காஸா எல்லையில் பலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தி வருகின்றது.

இதில் 180 பேர் கொல்லப்பட்டதுடன் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ஜெர்மனியில் இரண்டாவது உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் லூட்விக்ஸ்காபென் நகரில், கட்டுமான பணியின் போது சுமார் 500 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவால் வீசப்பட்டது என்று அதை ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் உள்ள 18,500 பேர் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணி தொடங்கியது.

மேலும், வெடிகுண்டு இருந்த இடத்தில் இருந்து 1000 மீட்டர் சுற்றுவட்டார பகுதியில் இருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன் பின்னர், ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே நிபுணர்கள் வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர்.

நாசி ஜெர்மனிக்கு எதிராக வீசப்பட்ட இந்த குண்டு 70 ஆண்டுகளாக வெடிக்காமல் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, லூட்விக்ஸ்காபெனில் நகராட்சி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘வெடிகுண்டு செயலிழக்கப்பட்டுவிட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பலாம்’ என தெரிவித்தது.

பின்னர், 2 மணிநேரம் கழித்து மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்பட்டனர். இதற்கு முன்பு இதே போல் பிராங்பர்ட் மற்றும் பெர்லின் நகரங்களில் இங்கிலாந்து படைகளால் வீசப்பட்ட வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தப்பித்தார் தெரேசா மே

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் தெரேசா மே, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முக்கியமான வாக்கெடுப்பொன்றில், மயிரிழையில் வெற்றிபெற்றுக் கொண்டார். அவரது இவ்வெற்றி, குறுகிய காலத்தில் அவருக்கு வெற்றியாக அமைந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐ.இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான இறுதி வாக்கெடுப்பில், அவரால் வெற்றிபெற முடியுமா என்ற கேள்வியை எடுப்பியுள்ளது.

பிரெக்சிற் தொடர்பான பேரம்பேசல்களை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அங்கிகாரம், நாடாளுமன்ற அனுமதி ஆகியவற்றை, பிரதமர் மே பெற்றுக்கொண்டாலும், கட்சிக்குள், கடுமையான எதிர்ப்பை அவர் எதிர்கொள்கிறார். இதில், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர், தமது பதவிகளையும் இராஜினாமா செய்திருந்தனர்.

நாடாளுமன்ற அனுமதி, கடந்த திங்கட்கிழமையே அவருக்குக் கிடைத்திருந்த நிலையில், அவ்வாறு கிடைக்கப்பெற்ற அனுமதியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, பிரதமரின் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் முனைந்தனர்.

ஐ.ஒன்றியத்திலிருந்து வெளியேறும் போது, சுதந்திர வர்த்தகம் தொடர்பான இணக்கப்பாடொன்று ஏற்படாவிட்டால், ஐ.ஒன்றியத்துடனான சுங்க ஒன்றியத்தில், ஐ.இராச்சியத்தைத் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமென, புதிதாகச் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தம் வேண்டி நின்றது.

இது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்ற போது, அத்திருத்தம், 301-307 என்ற வாக்குகள் கணக்கில் தோல்வியடைந்தது. ஆனால், வெறுமனே 6 வாக்குகளால் தான், பிரதமருக்கு வெற்றி கிடைத்தமை, எதிர்காலத்தில் அவர் மீதான அழுத்தங்கள் இன்னமும் அதிகரிக்குமென்பதைக் காட்டுகின்றன எனக் கருதப்படுகிறது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்டு டிரம்ப். இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மெயில் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், வருகிற 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் உள்ளேன்.

அனைவரும் நான் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர் என்பதுபோல் தெரிகிறது. ஜனநாயக கட்சியில் தன்னை தோற்கடிக்க யாரும் இல்லை என அவர் கூறியுள்ளார்

பொதுவாக இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் பேசும் விவரங்களை பற்றி தலைவர்கள் வெளியிடுவது வழக்கமில்லை. ஆனால், டிரம்பிடம் பேட்டி கண்ட பியெர்ஸ் மோர்கன் பிரெக்சிட் பற்றி ராணியிடம் ஆலோசனை மேற்கொண்டீர்களா? என எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு டிரம்ப் பதிலளித்துள்ளார்.

அவர், ஆம் ஆலோசனை மேற்கொண்டேன். அது ஒரு சிக்கலான விசயம் என அவர் கூறினார். அவர் கூறியது சரி. அது எவ்வளவு சிக்கலான விசயம் ஆக போகிறது என்பது பற்றி யாரிடமும் எந்த கருத்தும் இல்லை என்றே நான் நினைக்கிறேன் என அவர் கூறினார்.

யூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்

இஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேறியது.

இந்த நாட்டின் முழுமையான தலைநகராக ஜெருசலேம் விளங்கும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மசோதா நிறைவேறி இருப்பதற்கு இஸ்ரேலிய அரபு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ புகழ்ந்து உள்ளார். இது சிறப்புவாய்ந்த தருணம் என அவர் கூறி உள்ளார்.

8 மணி நேர விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. 62 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 55 பேர் எதிராக ஓட்டு போட்டனர்.

இஸ்ரேல் மக்கள் தொகையில் (90 லட்சம்) 20 சதவீதத்தினர் இஸ்ரேலிய அரபு மக்கள் ஆவர். இப்போது இஸ்ரேல், யூத நாடு ஆகி விட்டதால் அரபி மொழிக்கான அந்தஸ்து குறைந்து விடும் என சொல்லப்படுகிறது.

சட்டப்படி அவர்கள் சம உரிமை பெற்றிருந்தாலும்கூட இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக குறை கூறுகின்றனர்.

அகமது டிபி என்ற அரபு எம்.பி. கருத்து தெரிவிக்கையில், ´´இந்த மசோதா நிறைவேறி இருப்பது, ஜனநாயகம் செத்து விட்டதையே காட்டுகிறது´´ என்று குறிப்பிட்டார்.