நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை (8) ஆரம்பமாகவுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டிக்கான 15 பேர்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாம் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தின் தலைவராக துடுப்பாட்ட வீரர் அஷான் பிரியன்ஜன் பெயரிடப்பட்டுள்ளார் என்பதுடன், நியூசிலாந்து அணிக்கு எதிரான 22 பேர்கொண்ட குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள வீரர்களும் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான 22 பேர்கொண்ட டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றுள்ள தனுஷ்க குணதிலக்க, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலொ பெரேரா, சாமிக்க கருணாரத்ன மற்றும் அசித பெர்னாண்டோ ஆகிய வீரர்கள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர்  அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன், தென்னாபிரிக்கா வளர்ந்து வரும் அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்த வீரர்களுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிராக உலகக் கிண்ணத்துக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் இடம்பெற்றிருந்த மொஹமட் சிராஸும் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டிக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நாளைய தினம் கட்டுநாயக்க – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி

அஷான் பிரியன்ஜன் (தலைவர்), தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, ஓசத பெர்னாண்டோ, பெதும் நிஷாங்க, பானுக ராஜபக்ஷ, அஞ்செலோ பெரேரா, மினோத் பானுக, சாமிக்க கருணாரத்ன, அசித பெர்னாண்டோ, மொஹமட் சிராஸ், ஜெப்ரி வெண்டர்சே, அமில அபோன்சோ, வனிந்து ஹசரங்க, நிசால தாரக

 கிழக்கு மாகாண விளையாட்டு விழா நாளை அட்டாளைச்சேனையில் ஆரம்பம்

(எஸ்.எம்.அறூஸ்)

கிழக்கு மாகாண விளையாட்டு விழா நாளை புதன்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

அம்பாரை, மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வீர,வீராங்கனைகள் போட்டிளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாளை புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ள இவ்விளையாட்டு விழாவில் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற வீர,வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

புணரமைக்கப்பட்ட அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்வுகள் கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபயகுணவர்த்தன கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல,அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.ரஹ்மத்துல்லா, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இரண்டாம் நாள் பரிசளிப்பு இறுதி நாள் நிகழ்வுகள் கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் சான் விஜயலால் டி சில்வா கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக சமூக வலுவுட்டல் அமைச்சர் தயாக கமகே, பெற்றோலிய வலத்துறை அமை்சசர் அனோமா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ்,எம்.ஐ.எம்.மன்சூர், எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சிறியானி விஜேயவிக்ரம, விமலவீர திஸாநாயக்க, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் குழு நிலைப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மெய்வல்லுனர் போட்டிளே நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்கள பணிப்பாளர் நௌபீஸ் தலைமையில் விளையாட்டுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழா அட்டாளைச்சேனையில் இடம்பெறுவது இது இரண்டாவது முறையாகும். 2012 ம் ஆண்டு முதல் தடவையாக அட்டாளைச்சேனையில் கிழக்கு மாகாண விளையாட்டு விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் வெற்றி பெறும் வீர,வீராங்கனைகள் ஓக்டோபர் மாதம் ஆரம்பத்தில் பதுளையில் இடம்பெறவுள்ள 45வது தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ளனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக கிரிக்கெட் அணி 29 ஓட்டங்களினால் மொரட்டுவ பல்கலைக்கழக அணியை தோற்கடித்தது.

(எஸ்.எம்.அறூஸ்)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும், மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்குமிடையிலான கிரிக்கெட் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக அணி  29 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான (slug)விளையாட்டுப் போட்டியில் ஒரு அங்கமான கிரிக்கெட் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும், மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்குமிடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று தென்கிழக்குப் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழக அணித்தலைவர்  பத்திரண தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்கிழக்குப் பல்கலைக்கழக அணி  50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் ஏ.எல்.நுபைல் அஹமட் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 135 பந்துகளை எதிர்கொண்ட நுபைல் 8 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார். ஒனிலா ராஜபக்ஸ 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். டீ.ஆர்.பாலசூரிய 25 ஓட்டங்களைப் பெற்றார்.
மொரட்டுவ பல்கலைக்கழக அணியின் சார்பில் சந்துல வெலிவிட்ட 8 ஓவர்கள் பந்துவீசி   51 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும், துமிந்த திஸாநாயக்க 7 ஓவர்கள் பந்துவீசி 19 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
வெற்றி பெறுவதற்கு 227 ஓட்டங்களைப் பெறத் துடுப்பெடுத்தாடிய மொரட்டுவ பல்கலைக்கழக அணியினர்  44.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இதன்மூலம் தென்கிழக்குப் பல்கலைக்கழக அணி 29 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
மொரட்டு பல்கலைக்கழக அணியின் சாரிபில் சுரங்க விக்ரமசிங்க 42 ஓட்டங்களையும், துமிந்த திஸாநாயக்க 39 ஓட்டங்களையும், ராகல் பெர்ணாண்டோ 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக அணியின் சார்பில்  ஏ.எச்.எம்.ஆர்.தேனுவர 10 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுக்களையும்,எம்.ஆர்.டி.பண்டார 10 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்கழைளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழக அணி அடுத்த சுற்றுக் தெரிவாகியுள்ளதாக விளையாட்டுத்துறை பதில் பணிப்பாளர் எஸ்.எம்.பி.ஆஸாத் தெரிவித்தார்.

மஹேல, சங்காவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

இலங்கை முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோரால் சமர்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய மறுசீரமைக்கப்பட்ட கிரிக்கெட் யாப்பு யோசனையை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (23) சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்லையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ,

“மஹேல, சங்கக்கார, ரொஷான் மஹனாம மற்றும் சிதத் வெத்தமுனி உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் சிலரை இணைத்துக்கொண்டு தயாரிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் எம்மிடம் இருந்தன. அந்த அறிக்கையை நாம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தோம்.

உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றதால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பை மறுசீரமைப்பதற்கான முன்னெடுப்புகளை நாங்கள் சற்று நிறுத்தி வைத்திருந்தோம். அதிலும் குறிப்பாக, இதற்குமுன் இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர்களும், முன்னாள் இடைக்கால நிர்வாக சபைகளும், இலங்கை கிரிக்கெட் யாப்பினை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐ.சி.சியின் பல தடவைகள் வாக்களித்திருந்தனர்.

எனவே, தற்போது உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளதால் மஹேல உள்ளிட்ட முன்னாள் வீரர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய அறிக்கையை (நேற்று மாலை 3.15 மணியளவில்) நான் பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் சமர்பித்தேன்.

பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய அறிக்கையொன்று சமர்பிக்கப்பட்டவுடன் அது பாராளுமன்ற வாசிகசாலையில் வைக்கப்படும். இதை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் எடுத்து படிக்கலாம். இதில் உள்ள யோசனைகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல, பாராளுமன்ற சபாநாயகரிடம் இதுதொடர்பில் விவாதமொன்றை வழங்கும்படியும் நான் கோரிக்கை விடுத்தேன். இந்த கோரிக்கை கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பேசப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்பது பற்றியும், அதற்காக திகதியை எப்போது வழங்கலாம் என்பது பற்றியும் தீர்மானிக்கப்படும்.

அதேபோல, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொரு கட்சிக்ளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தெரிவுக் குழுவொன்றை அமைத்து இந்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

அதன்பிறகு, அமைச்சரவைக்கு இந்த அறிக்கையை சமர்பித்து அனுமதியைப் பெற்றுக்கொண்ட பிறகு புதிய யாப்பாக இதை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

மேலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் இதன்போது எம்முடன் ஒன்றுசேர்ந்து தமது திருத்தங்கள் தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதேபோல, ஐ.சி.சிக்கும் இந்த அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தவும், அதன் உள்ளடக்கம் குறித்து தெரியப்படுத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஒவ்வொரு சங்கங்களினதும் யாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தலையிடுவதற்கு பூரண அனுமதி உண்டு. எனவே, இது ஏனைய சங்கங்களைப் போல இலங்கை கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். இதில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் கிடையாது. நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இன்னும் 6 மாதங்கள் இருப்பேன். ஆனால் இந்நாட்டின் கிரிக்கெட் எப்போதும் இருக்கும்.

ஆகவே, உலகக் கிண்ணம் நடைபெறுவதற்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன. அதற்கு இப்போது முதல் நாங்கள் தயாராக வேண்டும். கடைசித் தருவாயில் மேற்கொள்கின்ற மாற்றங்கள் ஏமாற்றத்தையே பெற்றுக்கொடுக்கும். அந்த பிரதிபலனை தான் நாம் இம்முறை உலகக் கிண்ணத்தில் பெற்றுக்கொண்டோம்.

அத்துடன், இந்நாட்டின் கிரிக்கெட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும், அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாங்கள் முன்வைத்துள்ள இந்த அறிக்கை நிச்சயம் இலங்கை கிரிக்கெட்டில் சிறந்ததொரு முன்னேற்றத்தைக் கொடுக்கும் என தான் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் யாப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும், கிரிக்கெட் நிறுவனத் தேர்தலின் போது கழகங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர்களால் கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இதன்படி, மஹேல சங்கக்கார, ரொஷான் மஹனாம மற்றும் சிதத் வெத்தமுனி உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களால் கிரிக்கெட் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பான விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

தற்போதை விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள ஹரீன் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட் யாப்பு விரைவில் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

அத்துடன், எந்தவொரு இடைக்கால நிர்வாக சபையையும் நியமிக்கப் போவதில்லை என தெரிவித்த அவர், அரசியல் தலையீடின்றி விளையாட்டை முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர” – மாலிங்க பெருமிதம்!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ள லசித் மாலிங்க, தான் ஒரு விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராக மாறுவதற்கு முக்கிய காரணம் நுவன் குலசேகர என டுவிட்டர் காணொளியின் மூலமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவன் குலசேகர நேற்றைய தினம் (24) அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார். இலங்கை கிரிக்கெட் சபையிடம் தனக்கு ஒரு பிரியாவிடை வழங்கும் போட்டியை கோரியிருந்த போதும், நேற்றைய தினம் திடீரென அவர் ஓய்வை அறிவித்தார்.

எற்கனவே, லசித் மாலிங்க நுவன் குலசேகர தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கையில், நுவன் குலசேகரவுடன் இணைந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்திருந்தார். எனினும், பங்களாதேஷ் தொடருக்கான குழாத்தில் குலசேகர இணைக்கப்படவில்லை. இந்தநிலையில், குலசேகரவுடன் விளையாடிய காலம் மற்றும் தனது பந்துவீச்சில் நுவன் குலசேகரவின் பங்களிப்பு என்பவை தொடர்பில் மாலிங்க காணொளி மூலம் கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

குலசேகர ஓய்வுபெற்றமை தொடர்பில் கருத்து வெளியிட்ட லசித் மாலிங்க,

“நானும், குலசகேரவும் 14 வருடங்கள் ஒன்றிணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளோம். அவர் இன்று (நேற்று) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை நான் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராக மாறுவதற்கு 90 சதவீதமான காரணம் குலசேகரதான். அவர் முதல் 5 ஓவர்களை சிறப்பாக வீசி துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் வழங்கியதாலேயே நான் விக்கெட்டுகளை கைப்பற்றினேன். அதற்காக குலசேகரவுக்கு எனது நன்றிகள்”

அதேநேரம், இலங்கை அணியானது 2014ம் ஆண்டு T20I உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தமை இலங்கை அணியின் பந்துவீச்சு. குறிப்பாக, கடைசி ஓவர்களில் மாலிங்க மற்றும் குலசேகர ஆகியோர் பந்துவீசிய விதம் எதிரணியான இந்தியாவை குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. இதுதொடர்பிலும் மாலிங்க தனது ஞாபகங்களை பகிர்ந்துக்கொண்டார்.

“T20I உலகக் கிண்ணத்தில் கடைசி ஓவர்களை எவ்வாறு பந்துவீசவேண்டும் என்ற திட்டத்தை நாம் இருவரும் (குலசேகர மற்றும் மாலிங்க) வகுத்திருந்தோம். அதேபோன்று இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிலும் நாம் எப்படி பந்துவீசினோம். இதுபோன்ற எமது கிரிக்கெட் வாழ்க்கையில் ஞாபகப்படுத்த வேண்டிய பல விடயங்கள் உள்ளன”

இதேவேளை, மாலிங்க தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை நாளைய தினத்துடன் நிறைவுக்கு கொண்டுவரவுள்ள நிலையில், குலசேகரவை நாளைய தினம் ஆர்.பிரேமதாஸ மைதானத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதுமாத்திரமின்றி 12 வருடகாலம் இலங்கை கிரிக்கெட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய குசலேகரவுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் அவர் ஒரு பயிற்றுவிப்பாளராக வரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை 16 பேர் குழாம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட 22 பேர் கொண்ட இலங்கை குழாம் 16 பேராக குறைக்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில், 22 பேர் அடங்கிய இலங்கை குழாத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க, அமில அபொன்சோ, லஹிரு மதுசன்க மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் ஆடும் சந்தர்ப்பத்தினை இழந்திருக்கின்றனர்.

இதேநேரம், இந்த 22 பேர் அடங்கிய குழாத்திற்குள் உள்ளடக்கப்பட்ட ஏனைய வீரர்களில் ஒருவரான தசுன் ஷானக்க, பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் லசித் மாலிங்கவிற்கு பதிலாக இணைக்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்ற காரணத்தினாலேயே தசுன் ஷானக்க இணைக்கப்டுகின்றார். அதேவேளை, 22 பேர் கொண்ட குழாத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் ஐந்து வீரர்களும் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் போது தேவை எதுவும் ஏற்பட்டால் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகலதுறை அதிரடி வீரரான 27 வயது நிரம்பிய தசுன் ஷானக்க, பங்களாதேஷ் அணியுடன் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் வெறும் 63 பந்துகளுக்கு 86 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்து திறமையினை வெளிக்காட்டியிருந்தார். அதேநேரம், குறித்த போட்டியில் விளையாடிய நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க மற்றும் அமில அபொன்சோ ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியதனை அடுத்து அவர்களுக்கு பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கின்றது.

லசித் மாலிங்கவின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக அமையும் பங்களாதேஷ் அணியுடனான முதல் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) இடம்பெறவுள்ளது. தொடர்ந்து, இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமையும் (28) மூன்றாவது போட்டி புதன்கிழமையும் (31) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஒருநாள் தொடரின் போட்டிகள் நடைபெறும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளதால், இலங்கை அணி தமது இறுதி 16 பேர் அடங்கிய வீரர்கள் குழாத்தில் ஆறு வேகப் பந்துவீச்சாளர்களை உள்ளடக்கியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை அணி இதுவரையில் தமது சொந்த மண்ணில் வைத்து பங்களாதேஷ் அணியுடன் 19 ஒருநாள் போட்டிகளில் மோதியிருக்கின்றது. இதில் 15 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதோடு, 2 போட்டிகளில் மாத்திரமே பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருக்கின்றது. இதேநேரம், 2 போட்டிகள் முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டிருக்கின்றன.

கடைசியாக, 2017ஆம் ஆண்டில் இலங்கை வந்திருந்த பங்களாதேஷ் அணி இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியிருந்தது. இந்த ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை நிறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்ன, ஷெஹான் ஜயசூரிய, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய, வனிது ஹசரங்க, திசர பெரேரா, இசுரு உதான, கசுன் ராஜித, லஹிரு குமார, நுவன் பிரதீப், லசித் மாலிங்க (முதல் போட்டிக்கு மட்டும்), தசுன் ஷானக்க (இந்த ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கு மட்டும்),

நூலிழையில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட இலங்கை வளர்ந்துவரும் அணி

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்களுக்கு எதிரான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் அணி வெற்றிக்காக கடைசி விக்கெட் வரை போராடிய நிலையில் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

பிச்சப்ஸ்ட்ரூம், சென்வெஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளான இன்று (21) 331 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்ந இலங்கை வளர்ந்து வரும் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்தை சந்தித்தது.

இதன்படி 145 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்த நிலையில் தமது இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி மேலும் 14 ஓட்டங்களை பெறுவற்குள் இரண்டாவது விக்கெட்டை பறிகொடுத்தது. சிறப்பாக துடுப்பாடிவந்த மினோத் பானுக்க 89 ஓட்டங்களை பெற்று வெளியேறினார்.

அடுத்து வந்த சரித் அசலங்க 9 ஓட்டங்களுடன் வெளியேறியதோடு, அஷேன் பண்டார வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இந்நிலையில் சிறப்பாக துடுப்பாடிய பத்தும் நிஸ்ஸங்கவும் 117 பந்துகளில் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது இலங்கை அணி நெருக்கடிக்கு உள்ளானது.

மத்திய பின்வரிசை வீரர்களும் சோபிக்கத் தவறிய நிலையில் இலங்கை வளர்ந்துவரும் அணி 214 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தபோது கடைசி வரிசையில் இணைந்த மொஹமட் சிராஸ் மற்றும் நிஷான் பீரிஸ் 58 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று நம்பிக்கை தந்தனர்.

எனினும் சிறப்பாக துடுப்பாடி வந்த மொஹமட் சிராஸ் 96 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 49 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் இலங்கை அணியின் எதிர்பார்ப்பு சிதறியது.

இறுதியில் இலங்கை வளர்ந்து வரும் அணி 94.1 ஓவர்களில் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான நன்ட்ரே பர்கர் மற்றும் ட்லாடி பொகாகோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்கள் முதல் இன்னிங்ஸுக்காக 382 ஓட்டங்களை பெற்றதோடு தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை வளர்ந்து வரும் அணி 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 141 ஓட்டங்களால் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்ட வரிசையை சிதறடித்த இலங்கை பந்துவீச்சாளர்கள் அந்த அணியை 189 ஓட்டங்களுக்கே சுருட்டியது.

இதன்போது சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்தெனிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வளர்ந்துவரும் அணிக்கும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்கள் அணிக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (25) பிரெடோரியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையிலிருந்து வெளியேற, போகிறாரா மலிங்க..?

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித்மலிங்க அவுஸ்திரேலியாவின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்களாதேசின் கிரிக்கெட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

லசித்மலிங்க அவுஸ்திரேலியாவின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுள்ளார் ஓய்விற்கு பின்னர் அவர் தனது குடும்பத்துடன் அங்கு குடியேறவுள்ளார் என அவரிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர் என இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் அவர் ஏதாவது பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்கக்கூடும் எனவும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

லசித்மலிங்க தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

பங்களாதேஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் மலிங்க ஓய்வை அறிவிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 22 பேர் கொண்ட குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 22 பேர் கொண்ட குழாத்தின் அடிப்படையில், உலகக் கிண்ணத்தில் இணைக்கப்பட்டிருந்த ஜீவன் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் குழாத்திலிருந்து  நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, உலகக் கிண்ண குழாத்தில் மேலதிக வீரர்களாக இணைக்கப்பட்டிருந்த அஞ்செலோ பெரேரா மற்றும் ஓஷத பெர்னாண்டோ ஆகியோரும் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ணத்தில் 3 போட்டிகளில் விளையாடிய ஜீவன் மெண்டிஸ் மொத்தமாக 19 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதுடன், விக்கெட்டுகள் எதனையும் வீழ்த்தவில்லை. அதேநேரம், சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளரான சுரங்க லக்மாலும் எந்தவித விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை என்பதுடன், ஜெப்ரி வெண்டர்சே மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோரும் திறமையை வெளிப்படுத்த தவறியிருந்தனர்.

எனினும், இலங்கை அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, மிகச் சிறந்த முறையில் பந்துவீசி உலகக் கிண்ணத்தில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மொத்தமாக 225 ஒருநாள் போட்டிகளில் 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

“லசித் மாலிங்க மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம், மாலிங்க ஓய்வுபெறுவது குறித்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் இதுவரை கிடைக்கபெறவில்லை” என அசந்த டி மெல் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், உலகக் கிண்ணத் தொடருக்கான குழாத்தில் இடம்பெற தவறியிருந்த நிரோஷன் டிக்வெல்ல, தசுன் சானக, லஹிரு குமார, லஹிரு மதுஷங்க, தனுஷ்க குணதிலக்க மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகிய வீரர்கள் இந்த 22 பேர் கொண்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய A அணிக்கு எதிரான தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய நிரோஷன் டிக்வெல்ல 216 ஓட்டங்களை பெற்றிருந்தார். அத்துடன், இந்திய A அணிக்கு எதிரான தொடரில் 2 சதங்களுடன் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 320 ஓட்டங்களை பெற்ற ஷெஹான் ஜயசூரியவும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுழல் பந்துவீச்சினை பலப்படுத்தும் வகையில் லக்ஷான் சந்தகன், அகில தனன்ஜய மற்றும் அமில அபோன்சோ ஆகியோரும் இந்த குழாத்தில் இடம் பிடித்துள்ளனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 28 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில்  அடுத்த இரண்டு போட்டிகளும் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு போட்டிகளாக நடைபெறவுள்ளது.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்ன, தனுஷ்க குணதிலக்க, லஹிரு மதுஷங்க, ஷெஹான் ஜயசூரிய, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய, வனிது ஹசரங்க, லக்ஷான் சந்தகன், அமில அபோன்சோ, தசுன் சானக, திசர பெரேரா, இசுரு உதான, லசித் மாலிங்க,  கசுன் ராஜித, லஹிரு குமார, நுவான் பிரதீப்

தடுமாற்றம் காண்பிக்கும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெறும் முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நிறைவில், தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி அதன் சிறந்த பந்துவீச்சு காரணமாக வலுப்பெற்றுள்ளது.

தென்னாபிரிக்கா சென்றுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகள் கொண்ட முக்கோண தொடரில் விளையாடிய பின்னர் தற்போது 2 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது.

அந்தவகையில் நான்கு நாட்கள் கொண்ட இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நேற்று (19) போச்சேப்ட்ஸ்ரூம் நகரில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, போட்டியின் முதல் நாள் நிறைவில் மெத்திவ் ப்ரிட்ஸ்கே (114) பெற்றுக்கொண்ட அபார சதத்தோடு முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டத்திற்காக அதன் தலைவர் றய்னாட் வான் டொன்டர் 67 ஓட்டங்களுடனும், சிபோனெலோ மக்கன்யா 7 ஓட்டங்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் நின்றனர்.

இதன் பின்னர் இன்று (19) போட்டியின் இரண்டாம் நாளில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

எனினும், தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி தமது துடுப்பாட்டத்தில் தொடர்ந்தும் தடுமாறியது. தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் மத்தியவரிசை வீரர்கள் தமது விக்கெட்டுக்களை குறைவான ஓட்டங்களுக்குள் பறிகொடுத்தனர்.

இதனால், தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி 99.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 382 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் றய்னாட் வன் டொன்டர் 117 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 69 ஓட்டங்களை குவித்துக் கொண்டார்.

இதேநேரம், இலங்கை வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சு சார்பில் இடதுகை சுழல் வீரரான லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுக்களையும், அசித்த பெர்னாந்து, மொஹமட் சிராஸ் மற்றும் நிஷான் பீரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை வளர்ந்துவரும் அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றம் காண்பித்தது.

இலங்கை வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த மினோத் பானுக்க ஓட்டம் எதனையும் பெறாமல் ஏமாற்றினார். இதேநேரம் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பெதும் நிஸ்ஸ்ங்கவும் வெறும் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும், ஹசித போயகொட மற்றும் அணித்தலைவர் சரித் அசலன்க ஆகியோர் பொறுப்பான ஆட்டம் மூலம் இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு ஆறுதல் தந்தனர். இதில், ஹசித போயகொட 40 ஓட்டங்கள் பெற்றதோடு, சரித் அசலன்க அரைச்சதம் ஒன்றுடன் 56 ஓட்டங்களை குவித்திருந்தார்.

எனினும், இந்த இரு வீரர்களின் விக்கெட்டுக்களை அடுத்து இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மீண்டும் தடுமாற்றத்தை காண்பித்தது.

இதனால், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் போது இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி  57 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

இலங்கை வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்டத்தில் நிஷான் பீரிஸ் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்று நம்பிக்கை தர, மொஹமட் சிராஸ் 7 ஓட்டங்களுடன் களத்தில் நிற்கின்றார்.

இலங்கை வளர்ந்துவரும் அணியினை நெருக்கடிக்கு உள்ளாக்கிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில், கைல் சிம்மோன்ட்ஸ் 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு, நன்ட்ரே பர்கர் மற்றும் மார்கோ ஜான்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

ஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் உட்பட அனைத்து பயிற்சியாளர்களையும் பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் பின்னர் தத்தமது பதவிகளில் இருந்து விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பிலான விசேட கடிதமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர்ஹரீன் பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு நேற்று (17) அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பிறகு அவர்களது ஒப்பந்தஉடன்படிக்கை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர்அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டு கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கனவை சுமந்தவாறு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன்உலகக் கிண்ண தொடரில் பங்கேற்ற திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கைஅணி, ஏமாற்றத்துடன் உலகக் கிண்ண தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறியது.

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இம்முறை உலகக் கிண்ண தொடரில் பங்கேற்றஇலங்கை அணி, 3 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் 2 கைவிடப்பட்ட போட்டிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி 6ஆவது இடத்தைப் பெற்று ஆறுதல்அடைந்தது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளாத நிலையில், உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அணி முதல்தடவையாக லீக் சுற்றுடன் வெளியேறிய முதல் சந்தர்ப்பமாக இது பதிவாகியது.

இதன்படி, இலங்கை அணி உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியதையடுத்து, பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், சந்திக்க ஹத்துருசிங்கவின் பதவிக்காலம் நீடிப்பது கடினம் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், இலங்கை அணிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஒருவரையும், துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்களையும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

எனினும், உலகக் கிண்ண தோல்வியைத் தொடர்ந்து நாடு திரும்பிய இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க, தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 16 மாதங்கள் இருப்பதாகவும் அதுவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, சந்திக்க ஹத்துருசிங்க பதவி விலகாவிட்டால், அவரை இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமித்துவிட்டு அவருடைய இடத்துக்கு வேறு ஒரு பயிற்சியாளரை நியமிக்க தான் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் பின்னணியில் தான் இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான போட்டிக்குரிய அனுமதிச் சீட்டுக்கள் விபரம்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பங்களாதேஸ் அணி இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. மூன்று போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான அனுமதிச்சீட்டுக்கள் தொடர்பான விபரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது

Match ticket sale for the Bangladesh Tour of Sri Lanka commences
Media Release 17th July, 2019 The match tickets for the ‘Bangladesh tour of Sri Lanka’ is now available online and can be purchased by visiting www.srilankacricket.lk

Whilst the tickets will also be sold via the ticket counters at the SLC Headquarters and the RPICS, Colombo, as follows.

  • SLC Headquarters – Ticket sale opens on the 19th July, 2019.
  • Premadasa Intl. Cricket Stadium – Ticket sale opens on the 23rd July, 2019

Ticket Price for the Bangladesh Tour of Sri Lanka is as below.

Ticket Type Price ( LKR) Per Ticket
C & D Lower Stands 500
C & D Upper Stands 1000
A & B Lower Stands 1500
A & B Upper Stands 3000
Grand Stand 4000
Corporate Box 5000 (Has to purchase the entire box which consist 16 seats)

மாகாண மட்ட ஆரம்ப போட்டிகளில் கொழும்பு, கண்டிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 19 வயதுக்கு உட்பட்ட சுப்பர் ப்ரொவின்ஷியல் கிரிக்கெட் தொடர் இன்று (16) ஆரம்பமானது. இதன் ஆரம்ப போட்டிகளில் தம்புள்ளைக்கு எதிராக கொழும்பு அணி இலகு வெற்றியீட்டியதோடு காலி அணியை கண்டி அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கொழும்பு எதிர் தம்புள்ளை

ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கமில் மிஷார தலைமையிலான கொழும்பு அணி துடுப்பாட்டம், பந்துவீச்சி என சகல துறைகளிலும் சோபித்த நிலையில் தம்புள்ளை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கொழும்பு அணிக்கு மத்திய வரிசையில் கொழும்பு, றோயல் கல்லூரியின் அஷான் விக்கிரமசிங்க சிறப்பாக ஆடி 73 பந்துகளில் 8பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றார்.

முதல் வரிசையில் வந்த ஜொஹான் டி சில்வா அரைச் சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டதோடு முதல் வரிசையில் வந்த கொழும்பு, ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் ஷமாஸ் 59 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய தம்புள்ளை அணி ஓட்டம் பெறும் முன்னரே முதல் இரண்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தடுமாறியதோடு தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 36.3 ஓவர்களில் 136 ஒட்டங்களுக்கே சுருண்டது. மத்திய வரிசையில் ரவிந்து ரசன்த பெற்ற 34ஓட்டங்களுமே அதிகமாகும்.

இந்தப் போட்டியில் தம்புள்ளை அணிக்காக யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த் விளையாடியபோதும் அவர் 4 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் இன்றி 22ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததோடு துடுப்பாட்டத்தில் ஒட்டமின்றி ஆட்டமிழந்தார்.

கொழும்பு அணிக்காக அபாரமாக பந்துவீசிய பிரவீன் நிமேஷ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு – 283/8 (50) – அஷான் விக்ரமசிங்க 78*, ஜொஹன் டி சில்வா 49, மொஹமட் ஷமாஸ் 40, சமிந்து விஜேசிங்க 28, தசிக்க நிர்மால் 28, யசிரு ரொட்ரிகோ 2/39, சதீர திலகரத்ன 2/47, லக்ஷான் கமகே 2/56

தம்புள்ளை – 136 (36.3) – ரவிந்து ரசன்த 34, சுதீர திலகரத்ன 27, பிரவீன் நிமேஷ் 4/29, டில்மின் ரத்னாயக்க 2/22

முடிவு – கொழும்பு 147 ஓட்டங்களால் வெற்றி

கண்டி எதிர் காலி

கவிந்து விக்ரமசிங்கவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் காலியுடனான போட்டியில் கண்டி அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட கண்டி அணிக்கு ஆரம்ப வீரராக களமிறங்கிய கண்டி, புனித அந்தோனியார் கல்லூரியின் கவிந்து விக்ரமசிங்க ஒருமுனையில் நின்றுபிடித்து ஆடினார்.

எனினும் மறுமுனை விக்கெட்டுகள் மளமளவென்று பறிபோக கண்டி அணி 78ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் விக்ரமசிங்க ஐந்தாவது விக்கெட்டுக்கு அவிஷ்க தரிந்துவுடன் இணைந்து 109 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.

இதன்போது இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணி வீரரான   விக்ரமசிங்க 98பந்துகளுக்கு முகம்கொடுத்து 15 பௌண்டரிகளுடன் 97 ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டார். அதேபோன்று தரிந்து 71 பந்துகளில் 74 ஓட்டங்களை பெற்றார்.

இறுதியில் கண்டி அணி 47.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252ஓட்டங்களை பெற்றது. இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட வீரரான சதுன் மெண்டிஸ் காலி அணிக்காக 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

எட்ட முடியுமான இலக்குடன் பதிலெடுத்தாடிய காலி ஓட்டம் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் மத்திய வரிசையிலும் எந்த வீரரும் சோபிக்கவில்லை. துலித் வெல்லாலகே நிதானமாக 44 ஓட்டங்களை பெற்றபோதும் அது எதிரணிக்கு நெருக்கடியாக அமையவில்லை.

இதனால் காலி அணி 44.5 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. துடுப்பாட்டத்தில் சோபித்த விக்ரமசிங்க பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

கண்டி – 252 (47.1) – கவிந்து விக்ரமசிங்க 97, அவிஷ்க தரிந்து 74, ரொஹான் சஞ்சய 22, சந்துன் மெண்டிஸ் 4/48, அம்ஷி டி சில்வா 3/32, ஜிதேஷ் வாசல 2/17

காலி – 219 (44.5) – துனித் வெல்லாலகே 44, அம்ஷி டி சில்வா 38, சேதக்க நிலந்துவ 33, ரவீன் டி சில்வா 27*, சுபானு ராஜபக்ஷ 2/30, கவிந்து விக்ரமசிங்க 2/34, ருவின் பீரிஸ் 2/39, ரொஹான் சஞ்சய 2/49

முடிவு – கண்டி 33 ஓட்டங்களால் வெற்றி

தென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக ஒலுவிலைச் சேர்ந்த எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களினால் இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறை போதனாசிரியராக கடந்த ஆறு வருடங்களாகக் கடமையாற்றி வரும் எஸ்.எம்.பீ.ஆஸாத் சீனாவின் ஹெனான் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறை முதுமானிப்பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பாரை மாவட்டத்தில் விளையாட்டு உத்தியோகத்தராகவும், மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகவும் எஸ்.எம்.பீ.ஆஸாத் கடமையாற்றியாற்றியுள்ளார்.

வலைப்பந்து மற்றும் கராத்தே விளையாட்டில் மாவட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் மாகாணம் மற்றும் தேசிய மட்டப்போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றிருக்கின்றார்.

ஒலுவில் கெஸ்டோ விளையாட்டுக் கழகத்தின் தலைவரான எஸ்.எம்.பீ.ஆஸாத் இளை மறை காயாக உள்ள பல விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சியளித்து தேசிய மட்டத்தில் பிரகாசிக்கச் செய்துள்ளார்.

ஒலுவில் பிரதேசத்தின் ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் புஹாரி அவர்களின் புதல்வரான எஸ்.எம்.பீ.ஆஸாத் ஆர்ப்பாட்டமில்லாத, பக்குவமான விளையாட்டுத்துறை பொறுப்பாளராவார்.

உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள எஸ்.எம்.பீ.ஆஸாத் அவர்களுக்கு எமது லக்கி விளையாட்டுக் கழகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

போராட்டத்தின் மத்தியில் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (14) நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி சுப்பர் ஓவரின் மூலமாக கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 241 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியும் 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் போட்டி சமநிலையாகியது. இதன் பின்னர் நடைபெற்ற சுப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் 15 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள,  ஐ.சி.சி விதிமுறையின்படி இன்னிங்ஸில் அதிக பௌண்டரிகளை பெற்ற இங்கிலாந்து அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் கப்டிலை (19) இழந்த போதும், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை  வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தனர்.
நியூசிலாந்து  அணி தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றும் வகையில் முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் துடுப்பாட்டத்தை தொடர்ந்தது. இரண்டாவது விக்கெட்டுக்காக வில்லியம்சன் மற்றும் நிக்கோல்ஸ் ஆகிய இருவரும் 74 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், கேன் வில்லியம்சனின் (30) விக்கெட்டினை ப்ளென்கெட் கைப்பற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரொஸ் டெய்லர் 15 ஓட்டங்களுடன் மார்க் வூட்டின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி தடுமாற்றத்தை எதிர்கொள்ள தொடங்கியது.

எனினும் முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டமிழப்பின் பின்னர், கடந்த போட்டிகளில் சிறந்த முறையில் பிரகாசிக்க தவறியிருந்த வீரர்கள் அணியின் ஓட்டக்குவிப்பை பலப்படுத்தினர். ஹென்ரி நிக்கோல்ஸ் மற்றும்  டொம் லேத்தம் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை பெற, ஹென்ரி நிக்கோல்ஸ் தனது 9ஆவது ஒருநாள் அரைச் சதத்தையும், இந்த உலகக் கிண்ணத்தில் தன்னுடைய முதல் அரைச் சதத்தையும் பெற்று 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவருக்கு அடுத்தபடியாக டொம் லேத்தம் இறுதிக்கட்டம் வரை போராடி 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க மறுமுனையில் ஜேம்ஸ் நீஷம் (19) மற்றும் கொலின் டி கிரெண்டோம் (16) ஆகியோர் துடுப்பாட்டத்தில் ஓரளவு பங்கை வழங்க நியூசிலாந்து அணி 40 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் க்ரிஸ் வோர்க்ஸ் மற்றும் லியம் பிளங்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தற்போதைய ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை நியூசிலாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கு மிகப் பெரிய வெற்றி இலக்கு இல்லாவிட்டாலுமு், உலகக் கிண்ணம் போன்ற மிக முக்கியமான மற்றும் அழுத்தத்திற்கு மத்தியிலான இறுதிப் போட்டியொன்றில் இந்த வெற்றியிலக்கு சவால் மிக்கதாகவே இருக்கும்.

அப்படியான வெற்றியிலக்கினை நோக்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் தடுமாறிய போதும், பென் ஸ்டோக்ஸின் இறுதிவரையான போராட்டம் மற்றும் ஜொஸ் பட்லரின் அரைச்சதத்தின் ஊடாக வெற்றியிலக்கை நெருங்கிய போதும், இறுதியில் 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் போட்டி சமநிலையாகியதுடன், சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது. குறித்த சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிவடைய அதிக பௌண்டரிகளை விளாசியிருந்த இங்கிலாந்து அணி வெற்றியை தக்கவைத்தது.

நியூசிலாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி மதிக்கத்தக்க ஆரம்பத்தை பெற்ற போதும், ஜேசன் ரோயின் (17) ஆட்டமிழப்பின் பின்னர் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
எதிரணியின் ஓட்ட வேகத்தை கட்டுப்படுத்திய நியூசிலாந்து அணி, சீரான இடைவெளிகளில் முக்கியமான துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது. முறையே ஜோ ரூட் (7), ஜொனி பெயார்ஸ்டோவ் (36) மற்றும் அணித் தலைவர் இயன் மோர்கன் (9) ஆகியோர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க, 86 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து அணி முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களையும் இழந்தது.

ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இங்கிலாந்து அணியின் முன்னணி சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ஜொஸ் பட்லர் ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டமொன்றின் ஊடாக நியூசிலாந்து அணிக்கு சவால் கொடுத்தனர். இவர்களின் இணைப்பாட்டம் இங்கிலாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல, அரைச்சதம் கடந்திருந்த ஜொஸ் பட்லர் 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியதுடன் பென் ஸ்டோக்ஸ் (84*) இங்கிலாந்து அணியை இறுதிக்கட்டம் வரை அழைத்துச் சென்றார். குறிப்பாக அடுத்து வருகைதந்த ப்ளன்கெட் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணிக்கு இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

ட்ரென்ட் போல்ட் வீசிய இந்த இறுதி ஓவரில் முதல் இரண்டு பந்துகளுக்கு ஓட்டங்கள் பெறப்படாத நிலையில், 3ஆவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் சிக்ஸர் ஒன்றை விளாசினார். இதனையடுத்த பந்தை பௌண்டரி எல்லைக்கு அருகில் அடித்த பென் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்களை பெற முற்பட்ட போது, களத்தடுப்பில் விடப்பட்ட தவறினால், விக்கெட் காப்பாளருக்கு வீசப்பட்ட பந்து பௌண்டரியை அடைய, இங்கிலாந்து அணிக்கு 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. பின்னர், இரண்டு பந்துகளில் மூன்று ஓட்டங்கள் என்ற நிலையில், குறித்த இரண்டு பந்துகளுக்கும் 2 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்ததுடன், ரன்-அவுட் மூலமாக 2 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டது.

இதன் மூலம் இரண்டு அணிகளும் 50 ஓவர்கள் நிறைவில் 241 ஓட்டங்களை பெற்று சமநிலை பெற, உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் முதன்முறையாக  சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது. குறித்த சுப்பர் ஓவரில் (ட்ரென்ட் போல்ட் வீசிய) முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் உதவியுடன் 15 ஓட்டங்களை பெற்றுக்காள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியும் 15 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனினும், ஐ.சி.சி விதிமுறைப்படி இன்னிங்ஸில் அதிக பௌண்டரிகளை பெற்ற இங்கிலாந்து அணிக்கு போட்டியின் வெற்றி வழங்கப்பட்டது.
இவ்வாறு 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இங்கிலாந்து அணி தங்களுடைய கன்னி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.