அட்டாளைச்சேனை இளைஞர் கழக விளையாட்டு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும்

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியும், பரிசளிப்பு விழாவும் , எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத் தலைமையிலும் இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசிர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கெளரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதான அமைப்பாளருமான அல்ஹாஜ் யூ.கே. ஆதம்லெவ்வை, அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் எச்.யூ. சுசந்த, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான ஏ.முபாரக் அலி, ஏ.எச்.உமர்லெப்பை மற்றும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான சுற்றுத் தொடர்

19 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான அணிகளை அறிமுகப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) யில் இடம்பெற்றது.

இத்தொடரில் பங்கேற்கும் நான்கு அணிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அத்தோடு 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ஹசான் திலகரத்னவும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தார்.

நான்கு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் அணி ஒன்றுக்கு தலா 15 வீரர்கள் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று சகலதுறை வீரர்கள் தம்புள்ளை குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, கொழும்பு இளையோர் அணியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் ஷமாஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை 16 தொடக்கம் 23 ஆம் திகதி வரை கண்டி மற்றும் தம்புள்ளையில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடைபெறவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டி மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தொடர்களுக்காக தமது திறமையை காண்பிப்பதற்கு இந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பாக இந்தத் தொடர் அமையவுள்ளது.

லீக் போட்டியில் ஒரு அணி மற்றைய அணியுடன் ஒரு தடவை மோதவிருப்பதோடு முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னர் மூன்றாம் இடத்திற்காக போட்டியிடவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் பகல் ஆட்டமாகவே நடைபெறவுள்ளன.
இந்த தொடருக்கு முன்னர் மாவட்ட மட்ட அணிகளை தேர்வு செய்வதற்கான தொடர் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

சந்தூஷ் குணதிலக்க தலைமையிலான மேல் மாகாண மத்திய அணி கடந்த ஆண்டு தொடரை வென்றது. இந்த ஆண்டு கொழும்பு, கண்டி, தம்புள்ளை மற்றும் காலி அணிகள் விளையாடவுள்ளன.

லகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கைக்குத் தோல்வி

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நேற்று ஆரம்பித்துள்ள வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டிருந்த இலங்கை அணி 79 – 49 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது.

லிவர்பூல் நகரின் எம்&எஸ் வங்கி அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியானது ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக அமைந்திருந்தது.  உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் 18வது இடத்திலிருக்கும் இலங்கை அணி 13வது இடத்திலிருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பத்தில் சமபலமான போட்டியை கொடுத்தது.

எனினும், முதற்தர வீராங்கனைகளை உள்ளடக்கிய ஜிம்பாப்வே அணி முதற்பாதியில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியிருந்தது. முதல் 5 புள்ளிகள் சமனிலையில் பகிரப்பட்ட போதும், அதன் பின்னர் ஜிம்பாப்வே அணி முன்னேறி, முதல் கால் பகுதியை 19 – 14 என தங்கள் வசப்படுத்தியது.
அதன் பின்னர் ஆரம்பித்த இரண்டாவது காற்பகுதியில் ஜிம்பாப்வே அணிக்கு நெருக்கடியை கொடுக்கத் தொடங்கிய இலங்கை அணி சற்று புள்ளிகளில் முன்னேற்றங்களை கண்டு, 21-22 என்ற நிலையை நெருங்கியது. ஆனாலும், இரண்டாவது காற்பகுதியின் பிற்பகுதியில் சிறப்பாக ஆடிய ஜிம்பாப்வே அணி முன்னிலையை 38ஆக அதிகரித்துக்கொள்ள, இலங்கை அணி 29 புள்ளிகளுடன் முதல் பாதியை நிறைவுசெய்துக்கொண்டது.

இதில் முதல் பாதி முழுவதும் கோல் ஷூட்டராக இருந்த தர்ஜினி சிவலிங்கம் மாத்திரமே புள்ளிகளை பெற்றுக்கொடுத்திருந்த நிலையில், குறித்த திட்டத்தை மாற்றியமைத்த இலங்கை அணி, இரண்டாவது பாதியில் கோல் அட்டேக் வீராங்கனையான துலங்கி வன்னித்திலக்கவையும் கோல் பெறும் முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்த திட்டம் இலங்கை அணியின் புள்ளிக்குவிப்புக்கு ஏதுவாக அமைய, மூன்றாவது காற்பகுதியில் இலங்கை அணி முதல் இரண்டு காற்பகுதிகளையும் விட சிறப்பாக ஆடியது. இந்த காற்பகுதியில் இலங்கை அணி சவால் கொடுத்த போதும், துரதிஷ்டவசமாக ஜிம்பாப்வே அணி 15-13 என மூன்றாவது காற்பகுதி நிறைவில் முன்னிலைப்பெற்று 53-42 என ஆதிக்கம் செலுத்தியது.

குறித்த மூன்று காற்பகுதிகளிலும் சற்று சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி நான்காவது காற்பகுதியில் முழுமையான பின்னடைவை சந்தித்தது. இந்த காற்பகுதியில் அபாரமாக ஆடிய ஜிம்பாப்வே அணி 26 புள்ளிகளை பெற்றுக்கொள்ள, மறுமுனையில் இலங்கை அணியால் வெறும் 7 புள்ளிகளை மாத்திரமே பெறமுடிந்தது.

இதன் அடிப்படையில், முதல் காற்பகுதியில் 19-14, இரண்டாவது காற்பகுதியில் 19-15, மூன்றாவது காற்பகுதியில் 15-13 மற்றும் நான்காவது காற்பகுதியில் 26-07 என 79-49 என்ற புள்ளிகள் கணக்கில் ஜிம்பாப்வே அணி வெற்றிக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக தர்ஜினி சிவலிங்கம் தனக்கு கிடைத்த 45 வாய்ப்புகளில் 44 புள்ளிகளை பெற்றுக்கொடுத்ததுடன், ஜிம்பாப்வே அணியின் ஜொய்ஸ் தகைட்ஷா தனக்கு கிடைத்த 62 வாய்ப்புகளில் 59 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.

இதேவேளை, இலங்கை அணி தங்களுடைய அடுத்தப் போட்டியில் வடக்கு அயர்லாந்து அணியை நாளை (13) எதிர்கொள்ளவுள்ளது.

நேற்று (12) நடைபெற்ற ஏனைய போட்டிகளின் முடிவுகள்

மலாவி எதிர் நியூசிலாந்து – நியூசிலாந்து அணி 64-45 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
பார்படோஸ் எதிர் சிங்கபூர் – பார்படோஸ் அணி 69-34 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
அவுஸ்திரேலியா எதிர் வடக்கு அயர்லாந்து – அவுஸ்திரேலிய அணி 88-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
ஜமைக்கா எதிர் பீஜி – ஜமைக்கா அணி 71-18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
தென்னாபிரிக்கா எதிர் ட்ரினிடெட் & டொபேகோ – தென்னாபிரிக்க அணி 40-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி

27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (11) பேர்மிங்கம் எட்ஜ்பெர்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 27 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த அவுஸ்திரேலிய அணி தடுமாற்றத்துக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய போதும், ஸ்டீவ் ஸ்மித்தின் போராட்டமான துடுப்பாட்டத்தால் 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றிபெற்றது.

நேற்று நடைபெற்ற உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியிருந்த நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. இதன்படி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணியை தெரிவுசெய்யும் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை எதிர்கொண்டு விளையாடியது. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் 3 விக்கெட்டுகளையும் ஆரம்பத்தில் இழந்தது போன்று, அவுஸ்திரேலிய அணியும் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆரோன் பின்ச் (0), டேவிட் வோர்னர் (9) மற்றும் பீட்டர் ஹென்ட்ஸ்கொம் (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இவ்வாறு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அவுஸ்திரேலிய அணிக்கு தனது அனுபவத்தால் ஸ்டீவ் ஸ்மித் ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் அலெக்ஸ் கெரியும் தன்னுடைய பங்கினை வழங்கினார். இதில், ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பௌண்சர் பந்தில் தாடைப்பகுதியில் காயத்துக்குள்ளாகியிருந்த அலெக்ஸ் கெரி காயத்துடன் அணிக்காக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கெரி ஆகியோர் 4வது விக்கெட்டுக்காக 103 ஓட்டங்களை பகிர்ந்தனர். இருவரும் தங்களுடைய அரைச்சதத்தை நெருங்கிய சந்தர்ப்பத்தில் ஆதில் ரஷீட்டின் பந்துவீச்சில் 46 ஓட்டங்களை பெற்றிருந்த அலெக்ஸ் கெரி ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து வருகைத்தந்த துடுப்பாட்ட வீரர்களில் கிளென் மெக்ஸ்வெல் (22) மற்றும் மிச்சல் ஸ்டார்க் (29) ஆகியோர் மாத்திரம் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றியிருந்தனர்.

இதில், இறுதிக்கட்டம் வரை பேராடியிருந்த ஸ்டீவ் ஸ்மித் தனது 23வது ஒருநாள் அரைச்சதத்தை பெற்றிருந்த போதும், துரதிஷ்டவசமாக சதம் பெற முடியாமல் 85 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இவரின் இந்த ஓட்டக்குவிப்பின் உதவியுடன் அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் க்ரிஸ் வோர்க்ஸ் மற்றும் ஆதில் ரஷீட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஜேசன் ரோய் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவின் சிறந்த துடுப்பாட்டத்தின் ஊடாக வெற்றியிலக்கை நெருங்க, இயன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 224 என்ற வெற்றியிலக்கினை நோக்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களை இலகுவாக எதிர்கொண்ட ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோர் சிறப்பாக ஓட்டங்களை குவித்தனர். எதிரணியின் பந்துவீச்சாளர்களை தடுமாற்றத்துக்குள்ளாக்கிய இவர்கள் முதல் விக்கெட்டுக்காக சத இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.

இவ்வாறு சிறப்பாக இங்கிலாந்து அணி ஓட்டக்குவிப்பில் ஈடுபட்ட போதும், மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்காக  அழைக்கப்பட்ட மிச்சல் ஸ்டார்க், 38 ஓட்டங்களை பெற்றிருந்த ஜொனி பெயார்ஸ்டோவை LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதனையடுத்து வேகமாக ஓட்டங்களை பெற முற்பட்ட ஜேசன் ரோய், துரதிஷ்டவசமாக 85 ஓட்டங்களை பெற்றிருந்த போது, பெட் கம்மின்ஸின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரின் ஆட்டமிழப்பின் பின்னர் ஜோடி சேர்ந்த அனுபவ துடுப்பாட்ட வீரர்களான ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இணைப்பாட்டத்தை பகிர, இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது. இதில், இயன் மோர்கன் 45* ஓட்டங்களையும்,  ஜோ ரூட் 49* ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

இதன் அடிப்படையில் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு 1992ம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அணி தகுதிபெற்றுள்ளது. அதேநேரம், மூன்றாவது தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள இங்கிலாந்து அணி, எதிர்வரும் 14ம் திகதி எம்.சி.சி. மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு

19 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான குழாம்களை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்டுள்ளது. நான்கு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் அணி ஒன்றுக்கு தலா 15 வீரர்கள் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று சகலதுறை வீரர்கள் தம்புள்ளை குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, கொழும்பு இளையோர் அணியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் ஷமாஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியின் விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியின் தெய்வேந்திரன் தினோசன் இருவரும் தம்புள்ளை அணியின் 15 பேர் கொண்ட குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோன்று யாழ். மத்திய கல்லூரியின் மற்றொரு வீரரான கமலராசா இயளரசன் தம்புள்ளை அணியின் பதில் வீரராக சோர்க்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூலை 16 தொடக்கம் 23 ஆம் திகதி வரை கண்டி மற்றும் தம்புள்ளையில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடைபெறவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டி மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தொடர்களுக்காக தமது திறமையை காண்பிப்பதற்கு இந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பாக இந்தத் தொடர் அமையவுள்ளது.

லீக் போட்டியில் ஒரு அணி மற்றைய அணியுடன் ஒரு தடவை மோதவிருப்பதோடு முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னர் மூன்றாம் இடத்திற்காக போட்டியிடவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் பகல் ஆட்டமாகவே நடைபெறவுள்ளன.

இந்த தொடருக்கு முன்னர் மாவட்ட மட்ட அணிகளை தேர்வு செய்வதற்கான தொடர் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

சந்தூஷ் குணதிலக்க தலைமையிலான மேல் மாகாண மத்திய அணி கடந்த ஆண்டு தொடரை வென்றது. இந்த ஆண்டு கொழும்பு, கண்டி, தம்புள்ளை மற்றும் காலி அணிகள் விளையாடவுள்ளன.

இதில் தேர்வு செய்யப்பட்ட போட்டிகள் Dialog TV, ThePapare.com மற்றும் MyTV இல் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன.

கொழும்பு அணி

கமில் மிஷார – தலைவர் (றோயல் கல்லூரி, கொழும்பு)
மொஹமட் ஷமாஸ் (ஸாஹிரா கல்லூரி, கொழும்பு)
சொனால் தனூஷ கமகே (மஹாநாம கல்லூரி, கொழும்பு)
அஹன் விக்ரமனாயக்க (றோயல் கல்லூரி, கொழும்பு)
ஜொஹான் டி சில்வா (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு)
சமிந்த விஜேசிங்க (நாலந்த கல்லூரி, கொழும்பு)
சந்தருவன் சிந்தக்க (கலஹிட்டியாவ மத்திய கல்லூரி)
அவிஷ்க லக்ஷான் (களுத்தரை வித்தியாலயம்)
டில்மின் ரத்னாயக்க (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை)
பிரவீன் டி சில்வா (குருகுல கல்லூரி, களனி)
லஹிரு மதுஷங்க (றோயல் கல்லூரி, கொழும்பு)
கவிந்து பத்திரண (றோயல் கல்லூரி, கொழும்பு)
ஷெவோன் டேனியல் (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு)
கவீஷ துலான்ஜன (புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை)
தஷிக்க நிர்மால் (லும்பினி கல்லூரி)
பதில் வீரர்கள்

தினெத் சமரவீர (நாலந்த கல்லூரி, கொழும்பு)
கிஷான் முனசிங்க (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை)
சுகித்த பிரசன்ன (புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ)
ஷெஹான் பெர்னாண்டோ (புனித பெனடிக்ட் கல்லூரி, கொட்டஹேன)
பவந்த வீரசிங்க (மஹாநாம கல்லூரி, கொழும்பு)

காலி அணி

தவீஷ அபிஷேக் – தலைவர் (ரிச்மண்ட் கல்லூரி, காலி)
நவோத் பரணவிதான (மஹிந்த கல்லூரி, காலி)
பவன் ரத்னாயக்க (மஹாநாம கல்லூரி, கொழும்பு)
சேத்தக தெனுவன் (புனித செர்வஷியஸ் கல்லூரி, கொழும்பு)
முதித்த லக்ஷான் (டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு)
அஷேன் டில்ஹார (புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை)
சதுன் மெண்டிஸ் (ரிச்மண்ட் கல்லூரி, காலி)
துனித் வெல்லாலகே (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு)
ரவீன் டி சில்வா (நாலந்த கல்லூரி, கொழும்பு)
அம்ஷி டி சில்வா (ரிச்மண்ட் கல்லூரி, காலி)
ஜேதேஷ் வாசல (நாலந்த கல்லூரி, கொழும்பு)
கவிந்த டில்ஹார (ரெவன்த கல்லூரி, பலப்பிட்டிய)
தெவின் அமரசிங்க (புனித தோமியர் கல்லூரி, பண்டாரவலை)
சமித் இசுரு (கரன்தெனிய மத்திய கல்லூரி)
சிஹான் கலிந்து (புனித செர்வஷியஸ் கல்லூரி, மாத்தறை)
பதில் வீரர்கள்

ஹசித்த ராஜபக்ஷ (தர்மாசோக்க கல்லூரி, அம்பலாங்கொடை)
பாக்ய எதிரிவீர (ராஹுல கல்லூரி, மாத்தறை)
கேஷர நுவந்த (புனித செர்வஷியஸ் கல்லூரி, மாத்தறை)
ஜீவக்க சஷீன் (தேவபத்திரன கல்லூரி, இரத்தினபுரி)
லேஷான் கனுல (டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு)
கண்டி அணி

ருவன் பீரிஸ் – தலைவர் (திரித்துவக் கல்லூரி, கண்டி)
கமிந்து விக்ரமசிங்க (புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி)
அவிஷ்க பெரேரா (நாலந்த கல்லூரி, கொழும்பு)
உமயங்க சுவாரிஸ் (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை)
ரவிந்து ரத்னாயக்க (இசிபத்தன கல்லூரி, கொழும்பு)
சமோத் சந்தரு (பிலியந்தல மத்திய கல்லூரி)
அவிஷ்க தரிந்து (புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை)
கவிந்து நதீஷன் (தர்மாசோக்க கல்லூரி, அம்பலாங்கொடை)
ரொஷான் சஞ்சய (திஸ்ஸ மத்திய கல்லூரி)
சுபானு ராஜபக்ஷ (மஹிந்த கல்லூரி, காலி)
மதீஷ பத்திரண (ரன்பிம றோயல் கல்லூரி, கண்டி)
சசித்த ஹிருனிக்க (புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி)
அபிசேக் ஆனந்தகுமார் (திரித்துவக் கல்லூரி, கண்டி)
லொஹான் ஆரோஷ (தர்மாசோக்க கல்லூரி, அம்பலாங்கொடை)
துனித் ஜயதுங்க (புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ)

பதில் வீரர்கள்

கவிஷ்க டில்ஹார (வித்தியார்த்த கல்லூரி, கண்டி)
ரனுக்க சமரரத்ன (திரித்துவக் கல்லூரி, கண்டி)
கல்பன ஆதித்ய (டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, அம்பாறை)
எஸ். சகிர்தன்
பசிந்து டில்ஹார (திருகோணமலை சிங்கள பாடசாலை)
தம்புள்ளை அணி

நிபுன் தனஞ்சய – தலைவர் (புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ)
ரவிந்து ரசன்த (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை)
முதித பிரேமதாச (மலியதேவ கல்லூரி, குருநாகல்)
தினெத் ஜயக்கொடி (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு)
லேஷான் அமரசிங்க (இசிபத்தன கல்லூரி, கொழும்பு)
லக்ஷான் கமகே (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு)
திலும் சுதீர (ரிச்மண்ட் கல்லூரி, காலி)
அஷேன் டானியல் (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு)
விஜயகாந்த் வியாஸ்காந்த் (யாழ். மத்திய கல்லூரி)
நவீன் பெர்னாண்டோ (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு)
யசிரு ரொட்ரிகோ (புனித தோமியர் கல்லூரி, கல்கிசை)
தெய்வேந்திரன் தினோசன் (புனித ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்)
சுபுன் சுமனரத்ன (மலியதேவ கல்லூரி, குருநாகல்)
நிம்னக்க ஜயதிலக்க (புனித அந்தோனியார் கல்லூரி, கட்டுகஸ்தொட்ட)
சுதீர வீரரத்ன (தேவபத்திராஜா கல்லூரி, ரத்கம)
பதில் வீரர்கள்

கமலராசா இயளரசன் (யாழ். மத்திய கல்லூரி)
அஷ்மிக்க இந்தமல்கொட (அநுராதபுர சென்ட்ரல்)
டிலான் இஷார
பசிந்து சாமிக்க (ஸ்ரீ சுபுத்தி தேசிய பாடசாலை, கோட்டே)
ஹசித்த கௌஷான்

இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மென்செஸ்டர் – ஓல்ட் ட்ரெபோர்ட் மைதானத்தில் இன்று (10) நிறைவுபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற  நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கிண்ண இறுதி மோதலுக்கு முன்னேறியுள்ளது.

நேற்று (09) ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய அந்த அணி நேற்றைய தினம் 211 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இந்த நிலையில், இன்று தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில் 50 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 239/8  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த சற்று சவாலான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் முதல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திரசிங் டோனி ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்தின் ஊடாக வெற்றியிலக்கை நெருங்கியது. எனினும், இறுதியில் அபாரமான பந்துவீச்சு மற்றும் மார்ட்டின் கப்டிலினால் மேற்கொள்ளப்பட்ட மகேந்திர சிங் டோனியின் ரன்-அவுட் மூலமான ஆட்டமிழப்பின் ஊடாக இந்திய அணி 221 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை இந்த தொடர் முழுவதும் ஏமாற்றத்தை வழங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட் ஒரு ஓட்டத்துக்கு வீழ்ந்தது. இதன் பின்னர் நிதானமான இணைப்பாட்டமொன்றை அணித் தலைவர் கேன் வில்லியம்சனுடன் இணைந்து கட்டியெழுப்பிய ஹென்ரி நிக்கோல்ஸ் 28 ஓட்டங்களுடன் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

எனினும், நியூசிலாந்து அணியின் அரையிறுதி பயணத்துக்கு முக்கிய காரணமாக இருந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் மீண்டும் ஒரு நிதானமானதும், வலுவானதுமான இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். ஓட்ட வேகம் குறைவாக இருந்த போதும், விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் இருவரும் துடுப்பெடுத்தாடினர்.

நிதான துடுப்பாட்டத்துக்கு ஏற்ப கேன் வில்லியம்சன் தனது 39 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை கடந்தார் ஆனால், ஓட்ட வேகத்தை அதிகரிக்க முற்பட்ட இவர் 67 ஓட்டங்களுடன் யுஷ்வேந்திர சஹாலின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜிம்மி நீஷம் மற்றும் கொலின் டி கிரெண்டோம் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னரும், அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய ரொஸ் டெய்லர் தனது 50 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, போட்டியில் மழை குறுக்கிட்டது. போட்டியை மீண்டும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், தொடர்ந்து மழை குறுக்கிட்டு வந்ததால் போட்டி இடைநிறுத்தப்படுவதாகவும், இன்றைய (10) தினம் போட்டியின் தொடர்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில் மீதமிருந்த 23 பந்துகளுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக ரொஸ் டெய்லர் 74 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்த போதும், மகேந்திரசிங் டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் 116 என்ற சிறந்த இணைப்பாட்டத்தின் ஊடாக வெற்றியிலக்கினை நெருங்கியது. எனினும், துரதிஷ்டவசமாக கடைசி நேரங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி தங்களுடைய முன்னணி துடுப்பாட்ட வீரர்களை வெறும் 6 ஓட்டங்களுக்கு இழந்தது. ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி மற்றும் கே.எல். ராஹுல் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றை பொருத்தவரை முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாக மாறியது.

இதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமான இணைப்பாட்டத்தை வழங்கினர். எனினும் 47 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றவேளை, பந்துவீச வருகைத்தந்த மிச்சல் சென்ட்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டுகளை குறுகிய நேரத்தில் கைப்பற்றி நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

ஆனால், இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த மகேந்திர சிங் டோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல தொடங்கினர். ஒருபக்கம் நிதானமான முறையில் டோனி துடுப்பெடுத்தாட, மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா வேகமாக ஓட்டங்களை குவித்தார். இருவரும் 7வது விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் (116) ஒன்றை பகிர்ந்து இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முற்பட்டனர். இந்த உலகக் கிண்ணத்தில் தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய ஜடேஜா அபாரமாக துடுப்பெடுத்தாடி 77 ஓட்டங்களை பெற்ற போதும், முக்கியமான தருணத்தில் அவரின் (ஜடேஜா) விக்கெட்டினை ட்ரென்ட் போல்ட் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து டோனி இந்திய அணியை வெற்றியை நோக்கி தனியாளாக அழைத்துச் செல்வார் என்ற நிலை இருந்த போதும், மார்ட்டின் கப்டிலின் அபாரமான களத்தடுப்பின் மூலமாக டோனி 50 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது. டோனியின் ஆட்டமிழப்பின் பின்னர், அடுத்த இரண்டு விக்கெட்டுகளும் தொடர்ச்சியான ஓவர்களில் வீழ்த்தப்பட இந்திய அணி 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
இதன்படி, இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி 2015ம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற போதும், அவுஸ்திரேலிய அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவிஷ்க மற்றும் மாலிங்கவால் இலங்கைக்கு த்ரில் வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில், நேற்று (01) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோவின் கன்னி சதம் மற்றும் மாலிங்கவின் சிறந்த பந்துவீச்சு என்பவற்றுடன் இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை அணி நிர்ணயித்திருந்த 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்தில் நிக்கோலஸ் பூரனின் வேகமான ஓட்டக்குவிப்பு மற்றும் பெபியன் எலனின் வேகமான அரைச்சதம் என்பவற்றின் ஊடாக ஓட்டங்களை குவித்திருந்தாலும் இறுதியில் 315  ஓட்டங்களை பெற்று, 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

டர்ஹாம் – ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி அவிஷ்க பெர்னாண்டோவின் சதம் மற்றும் குசல் பெரேரா, லஹிரு திரிமான்ன ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களின் உதவியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு சவாலான வெற்றி இலக்கினை நிர்ணயித்தது.
இன்றைய போட்டியை பொருத்தவரை இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுரங்க லக்மாலுக்கு பதிலாக கசுன் ராஜிதவும், ஜீவன் மெண்டிஸிற்கு பதிலாக ஜெப்ரி வெண்டர்சே மற்றும் திசர பெரேராவுக்கு பதிலாக லஹிரு திரிமான்ன ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, லஹிரு திரிமான்ன, ஜெப்ரி வெண்டர்சே, இசுரு உதான, லசித் மாலிங்க, கசுன் ராஜித

மேற்கிந்திய தீவுகள் அணி

கிரிஸ் கெயில், சுனில் அம்பிரிஸ், ஷேய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரொன்ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர் (தலைவர்), கார்லோஸ் ப்ராத்வைட், பெபியன் எலன், ஒசானே தோமஸ், ஷெல்டொன் கொட்ரெல், ஷெனொன் கேப்ரியல்

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இருவரும் 93 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது, திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா தனது 14 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை கடக்க, இளம் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார். ஒருபக்கம் அவிஷ்க பெர்னாண்டோ சிறப்பாக துடுப்பெடுத்தாட மறுமுனையில் குசல் பெரேரா 64 ஓட்டங்களை பெற்று, துரதிஷ்டவசமாக ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

குசல் பெரேராவின் ஆட்டமிழப்பின் பின்னரும் அவிஷ்க பெர்னாண்டோ சிறந்த துடுப்பாட்ட யுத்திகளுடன் ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்று தங்களுடைய பங்கிற்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால், இளம் வீரராக இருந்தாலும் தனது இன்னிங்ஸை அற்புதமாக நகர்த்திய அவிஷ்க பெர்னாண்டோ தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவுசெய்ததுடன், இலங்கை அணி சார்பாக இந்த உலகக் கிண்ணத்திலும் முதல் சதத்தையும் கடந்தார்.

அதுமாத்திரமின்றி, உலகக் கிண்ண வரலாற்றில் இளம் வயதில் (21 வருடம் 87 நாட்கள்) சதம் கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை அவிஷ்க பெர்னாண்டோ படைத்தார். இதற்கு முதல் இடங்களை முறையே அயர்லாந்து அணியின் போல் ஸ்ட்ரெலிங் (20 வருடம் 132 நாட்கள்) மற்றும் அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொன்டிங் (21 வருடம் 74 நாட்கள்) ஆகியோர் பிடித்துள்ளனர்.
இவ்வாறு, அவிஷ்க பெர்னாண்டோவின் சாதனை சதம் (104 ஓட்டங்கள்) மற்றும் மத்திய வரிசையில் களமிறங்கிய லஹிரு திரிமான்னவின் 45 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 338 ஓட்டங்களை பெற்றக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின்னர் சவாலான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிக்கோலஸ் பூரன் மற்றும் இறுதியாக வருகைதந்த பெபியன் எலன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களின் ஊடாக வெற்றி இலக்கை நெருங்கிய போதும், 315 ஓட்டங்களை பெற்று, 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

எதிரணிக்கு சவால் மிக்க வெற்றி இலக்கை நிர்ணயித்த இலங்கை அணி ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீசியது. குறிப்பாக லசித் மாலிங்க மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் அம்ப்ரிஸ் மற்றும் ஷேய் ஹோப் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்ய மேற்கிந்திய தீவுகள் அணி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷிம்ரொன் ஹெட்மையர் மற்றும் கிரிஸ் கெயில் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர். ஆனாலும், தனது கன்னி உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய கசுன் ராஜித, கிரிஸ் கெயிலின் விக்கெட்டினை கைப்பற்ற, குறுகிய இடைவெளியில் தனன்ஜய டி சில்வா அற்புதமான களத்தடுப்பின் மூலம் ஷிம்ரொன் ஹெட்மையரை ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்கச்செய்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் மற்றுமொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்ப தொடங்கினர். இவர்கள் இருவரும் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, ஹோல்டர்,  ஜெப்ரி வெண்டர்சேவின் சுழலில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும் தொடர்ந்தும் இணைப்பாட்டங்கள் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன. 6 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் கார்லோஸ் ப்ராத்ரவைட் ஆகியோர் மற்றுமொரு சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.  இந்த இணைப்பாட்டத்தில் நிக்கோலஸ் பூரன் அரைச்சதம் கடக்க, இலங்கை அணி நெருக்கடிக்கு முகங்கொடுத்தது.

நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அணி பந்துவீச்சில் மாற்றங்களை ஏற்படுத்த, இசுரு உதானவின் பந்துவீச்சில் ரன்-அவுட் முறையில் ப்ராத்வைட் ஆட்டமிழந்தார். ஆனாலும் அடுத்து வந்த பெபியன் எலன், நிக்கோலஸ் பூரனுடன் இணைந்து மற்றுமொரு சிறந்த இணைப்பாட்டத்தை பகிர, இவர்கள் இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லத் தொடங்கினர். துரதிஷ்டவசமாக அரைச்சதம் கடந்த எலன் 51 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க வெற்றி இலங்கை அணியின் பக்கம் திரும்பியது.

நிக்கோலஸ் பூரன் (118 ஓட்டங்கள்) தனது கன்னி சதத்தை கடந்து தனியாளாக போராடிய நிலையில், அஞ்செலோ மெதிவ்ஸின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழக்க, இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறிப்பாக அஞ்செலோ மெதிவ்ஸ் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர், முதன்முறையாக சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் பந்துவீசி முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றியை இலகுவாக்கியிருந்தார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தாலும், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் இந்திய அணியை எதிர்வரும் 6 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் 4 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

தனது அனுபவமே நிக்கோலஸ் பூரணை வீழ்த்த காரணம் என்கிறார் மெதிவ்ஸ்

எட்டு மாதங்களாக எந்தவொரு வலைப் பயிற்சியிலும் பந்து வீசாமல் முதல் தடவையாக மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் பந்து வீசி இலங்கை அணிக்குத் தேவையாக இருந்த நிக்கோலஸ் பூரனின் விக்கெட்டை வீழ்த்த முடிந்தமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோ சதம் கடந்து கைகொடுக்க இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் 48ஆவது ஓவருக்காக பந்துவீசிய அஞ்செலோ மெதிவ்ஸ், முதல் பந்திலேயே இலங்கை அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த நிக்கோலஸ் பூரணை ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். இது இலங்கை அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதில் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்தடவையாக சர்வதேசப் போட்டியொன்றில் மெதிவ்ஸ் பந்துவீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அஞ்செலோ மெதிவ்ஸ் தான் பந்துவீச அழைக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிடுகையில்,

“இந்தப் போட்டியின் இறுதிவரை நிக்கோலஸ் பூரன் மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுத்திருந்தார். இதனால் நானும், திமுத்தும் இரண்டு ஓவர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்க வேண்டும் என கலந்துரையாடினோம். அதிலும் 40 ஓவர்களுக்குப் பிறகு சுழல் பந்துவீச்சளர் ஒருவரைப் பயன்படுத்துவதற்கு எமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏனெனில் நிக்கொலஸ் பூரண் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். அவருடைய விக்கெட் தான் போட்டியின் திருப்புமுனை என்பதை அறிந்தோம். எனவே, அந்த நேரத்தில் யாரையாவது பந்துவீச அழைப்பதற்கு திமுத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த 2 ஓவர்களையும் நான் பந்துவீசுகிறேன் என திமுத்திடம் கூறினேன்.

உண்மையில் கடந்த 8 மாதங்களாக நான் பந்து வீசவில்லை. குறிப்பாக பந்தை கையில் எடுத்து பயிற்சிகள் எடுக்கவில்லை. ஆனால், எனக்கு அனுபவம் உள்ளதால் நான் பந்துவீசுகிறேன் என அவரிடம் தெரிவித்தேன். நாங்கள் முடியுமான வரை லசித் மாலிங்க அல்லது இசுரு உதானவைக் கொண்டு அவருடைய (நிக்கொலஸ் பூரண்) விக்கெட்டை எடுப்பதற்கு முயற்சி செய்வோம். அவ்வாறு முடியாது போனால் 48ஆவது மற்றும் 50ஆவது ஓவர்களில் நான் பந்து வீசுகிறேன் என தெரிவித்தேன்.

எனவே, நான் பந்துவீசியது திமுத்துக்கும் மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்தது. ஆனாலும், நானும் சற்று பயத்துடன் பந்து வீசினேன். ஏனெனில் கடந்த எட்டு மாதங்களாக ஒரு பந்துகூட வீசியது கிடையாது. குறிப்பாக வலைப் பயிற்சிகளிலும் பந்தை கையால்கூட தொட்டு பந்து வீசவில்லை. எனினும், எனது அனுபவம் அந்த இடத்தில் கைகொடுத்தது. எனக்கு எந்த இடத்தில் பந்துவீசினால் பூரணின் விக்கெட்டை வீழ்த்த முடியும் என்ற திட்டம் இருந்தது. இறுதியில் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினேன்” என தெரிவித்தார்.

உபாதை காரணமாக கடந்த ஒன்றை வருடங்களாக எந்தவொரு போட்டியிலும் பந்துவீசாத மெதிவ்ஸ், இறுதியாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பந்து வீசியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தனது உபாதை குறித்து மெதிவ்ஸ் இதன்போது கருத்து வெளியிடுகையில்,

”துரதிஷ்டவசமாக, உபாதைக்குப் பிறகு பந்து வீசுவதற்கான உடல் தகுதி எனக்கு இருக்கவில்லை. அதாவது, பந்துவீச்சைத் தொடங்குவதற்கும் அதைக் கட்டியெழுப்புவதற்கும் எனக்கு சிறிது நேரம் தேவை. ஏனெனில் உடலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும், எனவே இதற்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.

அதேபோல, ஓரிரண்டு ஓவர்கள் பந்துவீசி அணிக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனால் முடிந்தவரை விரைவாக பந்துவீச்சைத் தொடங்க நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்” என குறிப்பிட்டார்.

இதேநேரம், இலங்கை அணி தென்னாபிரிக்காவுடனான தீர்மானமிக்க போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில் அரையிறுதிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.

எனவே, இந்தப் போட்டியில் எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் விளையாடிய காரணத்தால் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடிந்ததா எனவும், அவிஷ்க பெர்னாண்டோவின் துடுப்பாட்டம் குறித்தும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மெதிவ்ஸ் கருத்து வெளியிடுகையில்,

”உண்மையில் இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் எமக்குத் தேவையான நேரத்தில் துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் இருந்தது. கடந்த போட்டியில் சற்று மந்தமான ஆடுகளமாக இருந்தது. உறுதியான எந்தவொரு பிரயோகங்களையும் அந்த ஆடுகளத்தில் மேற்கொள்ள முடியாமல் போனது.

ஆனால், இந்தப் போட்டியில் மிகவும் நன்றாக பந்து துடுப்பு மட்டைக்கு வந்தது. அதேபோல, நாங்கள் பெற்றுக்கொண்ட ஆரம்பமும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அதிலும் அவிஷ்க பெர்னாண்டோ மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் விரல் விட்டு எண்னுகின்ற ஓருசில போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தாலும், அனுபவமிக்க ஒரு சிரேஷ்ட வீரர் ஒருவரைப் போல துடுப்பெடுத்தாடியிருந்தார். அவரைச் சுற்றி குசல் ஜனித், குசல் மெண்டிஸ் மற்றும் திரிமான்ன ஆகியோருக்கு ஓட்டங்களைக் குவிக்க முடிந்தது.

அதேபோல, கடந்த இரண்டு போட்டிகளில் அவரால் 30 அல்லது 40 ஓட்டங்களைத் தான் குவிக்க முடிந்தது. ஆனால் இன்று அவர் விளையாடிய விதம் பாராட்டத்தக்கது.

எனவே இந்தப் போட்டியில் 330 ஓட்டங்களுக்கு மேல் குவித்தால் நிச்சயம் எமது பந்து வீச்சாளர்கள் போட்டியை வென்று கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. எமது பந்து வீச்சாளர்கள் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியிருந்தனர்” என குறிப்பிட்டார்.

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ணத்தில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்த மெதிவ்ஸ், எஞ்சியுள்ள போட்டிகளை வெற்றியுடன் முடிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

”உண்மையில் இம்முறை உலகக் கிண்ணத்தில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனததையிட்டு நாங்கள் ஏமாற்றமடைகிறோம். இந்தத் தொடர் முழுவதும் எமக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டாலும் மத்திய வரிசையில் நாங்கள மோசமாக விளையாடினோம்.

அதேபோல, தென்னாபிரிக்காவுடனான போட்டியில் நாங்கள் சிறப்பாக துடுப்பாடவில்லை. இதனால் அரையிறுதிக்கான வாய்ப்பையும் தவறவிட்டோம். எனினும், எஞ்சியுள்ள போட்டியை வெற்றியுடன் முடிப்பது நல்ல விடயம்” என தெரிவித்தார்.

வெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு

இலங்கை தேசிய கால்பந்து அணியில் இணைந்துகொள்ளுமாறு வெளிநாட்டை தளமாகக் கொண்டு விளையாடும் வீரர்களுக்கு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா அழைப்பு விடுத்துள்ளார். 

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வெளிநாட்டை தளமாகக் கொண்ட வீரர்கள்உள்ளடக்கப்படுவதில்லை என்பது நீண்ட காலமாக எழும் குற்றச்சாட்டாக இருந்துவருகின்றது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்சந்திப்பொன்றின்போதே அநுர டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

ஜெர்மனியில் இலங்கை பெற்றொருக்கு பிறந்து தற்போது ஜெர்மனியின் நான்காம் பிரிவுஅணியான Rot-Weiß Erfurt   அணிக்காக  ஆடும் 24 வயதுடைய மத்திய கள வீரர் வசீம் ராசிக்உட்பட பலர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியுடையவர்களாக உள்ளனர். வீரர்கள் பரிமாற்ற சந்தையில் வசீம் 175,00 யூரோக்கள் பெறுமதி கொண்டவராகஉள்ளதோடு இரட்டை பிரஜா உரிமையை பெறுவதற்காக செயற்பட்டு வருகிறார்.

அவரது இரு சகோதரர்களான மொஹமட் ராசிக் (22 வயது) மற்றும் முஷாகிர் ராசிக் (20 வயது) ஆகியோர் முறையே BFC Dynamo II மற்றும் Turkiyemspor Berlin அணிகளுக்காகஆடுகின்றனர். இந்த இருவரும் கூட இலங்கை தேசிய அணிக்கு ஆடுவதற்கு தகுதிகொண்டவர்களாவர்.

இலங்கைக்காக ஆடும் திறன் படைத்த மற்றொருவராக நிக்கி அஹமட் (28) உள்ளார். அவர் 2010 சம்பியன்ஸ் லீக்கிற்காக செல்சி கால்பந்து கழக குழாத்தில்இடம்பெற்றிருந்தார். தற்போது அவர் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் அணிக்காகஆடுகிறார்.

அண்மையில் தேசிய அணியில் இணைக்கப்பட்ட மார்வின் ஹமில்டன் (30) அண்மைக்காலத்தில் இலங்கை பிரதிநிதித்துவப் படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் இரட்டைப்பிரஜா உரிமையை பெற பணியாற்றி வருகிறார்.

இவ்வாறான ஒரு நிலையில், குறித்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அநுர டிசில்வா, நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புபவர்களை வரவேற்றார்.

“மார்வின் ஹமில்டன் மற்றும் எம்மிடையே சிறந்த தொடர்பாடல் உள்ளது. காட்டாரில்பயிற்சிக் குழாத்திற்கு இணையும்படி அவரை நாம் கேட்டோம். அவர் பிரிட்டனில் இருந்துவந்தார். தற்போது அவர் இரட்டை பிரஜையை உரிமையைப் பெற செயற்பட்டு வருகிறார். தேசிய அணிக்கு விளையாடுவதற்கு அவர் விருப்பமுடன் உள்ளார். அவர் இலங்கைஅணியில் ஆடுவதற்கு சாத்தியம் உள்ளது. அவருடன் செயற்படுவது குறித்து நாம்மகிழ்ச்சி அடைகிறோம்.   

வசீம் ராசிக்கும் இரட்டை பிரஜா உரிமையை பெற பணியாற்றி வருகிறார். அவர்விண்ணப்பித்திருக்கிறார், நாம் எதிர்பார்த்திருக்கிறோம். இங்கு ஆடுவதற்கு அவரின்சகோதரர்களும் கூட இரட்டை பிரஜா உரிமையை பெற விரும்புகின்றனர். அவர்கள்தேர்வுகளுக்காக மீண்டும் வரவேண்டும். ஏனைய வீரர்களுடன் தொடர்பாடலில்ஈடுபடுவது மற்றும் முன்னேற்ற, செயல்திறன் பற்றி நாம் அவதானிப்போம். 

செல்சி கால்பந்து கழகத்தின் நிக்கி அஹமட் இங்கு வர விரும்பம் காட்டவில்லை. அவர்இலங்கைக்காக விளையாட தயார் இல்லை” என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இலங்கை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நிசாம் பக்கீர் அலியும் இது பற்றி கருத்து தெரிவித்தார். வெளிநாட்டை தளமாகக் கொண்ட வீரர்களின்ஈடுபாடு பற்றி அவர் அவதானம் செலுத்தியுள்ளார்.

“ஹமில்டன் தனது கடவுச்சிட்டு விவகாரத்திற்காக வந்தார். வந்து பயிற்சி அமர்வில்பங்கேற்று பயிற்சி பெற முடியுமா என்று கேட்டார். இது தான் அவரது அர்ப்பணிப்பு.  

அதேபோன்று, SAFF இற்கு முன்னர் பயிற்சிக்காக வசீம் ராசிக்கும் வந்தார். அணிமுகாமையாளருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். தேசிய அணிக்குவிளையாடுவது பற்றி வாய் மூலம் உறுதி அளித்தார். எம்முடன் பல பயிற்சிமுகாம்களில் பங்கேற்றார் ” என்று குறிப்பிட்டார்.

இலங்கை முன்கள வீரர்களை உருவாக்காதது குறித்து விமர்சனம் வெளியிட்ட பக்கீர் அலி, உள்ளூர் முன்கள வீரர்கள் மற்றும் இளம் வீரர்களை வளர்த்தெடுப்பது குறித்தும்வலியுறுத்தினார்.

இலங்கையில் போதுமான முன்கள வீரர்கள் இல்லை. கடந்த காலத்தில் எமக்குசிறப்பான முன்கள வீரர்கள் இருந்தார்கள். எம்மிடம் உள்ளூர் முன்கள வீரர்கள் இல்லை. நாம் முன்னணி உள்ளூர் கழக அணிகளை பார்த்தோம் என்றால் பெரும்பாலானவர்கள்வெளிநாட்டு முன்கள வீரர்களாக உள்ளனர்.

நாம் அவர்களிடம் தங்கியிருக்கும்போது வீரர்களை எவ்வாறு கட்டியெழுப்புவது? நாம்வெளிநாட்டு வீரர்களில் தங்கி இருப்பதா? உள்ளூர் வீரர்களை வளர்த்தெடுக்க வேண்டும். அதேபோன்று யாராவது இணைய விரும்பினால் நிச்சயம் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும்.

இது (இலங்கை தேசிய அணி) ஒரு இளம் அணி. எதிர்காலத்திற்காக அணி கட்டிஎழுப்பப்படும்போது முழு அணியும் எம்முடன் இருக்க வேண்டும்.

சம்பியன்ஸ் லீக் குழாம்களின் 18-20 வயதுடைய வீரர்களை அறிமுகம் செய்யும்இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முடிவு சிறந்ததாகும். அங்கிருந்து நாம் தேசியகுழாத்திற்காக சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்” என்றும் கூறினார்.

32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர்

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் தொடரின் 33வது லீக் போட்டியில் பாபர் அசாம் சதம் விளாச, பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கிண்ணம் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெல்லும் அணி ஈரப்பதம் காரணமாக பந்து வீச்சை தெரிவு செய்யும் என்று எதிர்பார்க்கையில்,
நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டம் தெரிவு செய்தார்.
அதன்படி மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
கப்தில் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முகமது அமிர் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அமிர் உடன் இணைந்து பந்து வீசிய ஷாஹீன் அப்ரிடி துல்லியமாக பந்து வீச கொலின் முன்றோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லாதம் (1) அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் 46 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறியது.
5-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை நிலைநிறுத்த போராடியது.
ஆனால் அணியின் ஸ்கோர் 83 ஓட்டங்கள் என இருக்கும்போது கேன் வில்லியம்சன் 41 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
6-வது விக்கெட்டுக்கு நீஷம் உடன் கொலின் டி கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.
இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து 47.4 ஓவரில் 215 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது கிராண்ட்ஹோம் 71 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 132 ஓட்டங்கள் குவித்தது. நீஷம் கடைசி வரை நின்று போராட, நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் சேர்த்தது.
நீஷம் 112 பந்தில் 97 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும் அமிர் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 238 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் களம் இறங்க ஆட்டம் வெற்றி பாதையை நோக்கி பயணித்தது.
ஆனால் ஆட்டத்தின் 2.6 வது ஓவரில் பெர்குசன் வீசிய பந்தில் பஹார் ஜமான் 9 (10) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதனையடுத்து பாபர் அசாம் களம் இறங்க ஆட்டம் சூடுபிடித்தது. இதனிடையே ஆட்டத்தின் 10.2வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இமாம் உல்-ஹக் 19 (29) ஓட்டங்களில் வெளியேறினார்.
3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது ஹபீஸ் 50 பந்துகளை சந்தித்து 32 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வில்லியம்சன் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.
ஆட்டத்தின் 26.2 வது ஓவரில் பாபர் அசாம் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அடுத்த களம் இறங்கிய ஹாரிஸ் சோகைல், பாபர் அசாமிற்கு துணையாக நின்று ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினர்.
ஆட்டத்தின் 41.5 வது ஓவரில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து பாகிஸ்தான் 200 ஓட்டங்களை கடந்தது.

 

 

ஆட்டத்தின் 44.3 வது ஓவரில் சோகைல் அரை சதத்தை கடந்தனர். இருவரின் ஜோடியை பிரிக்க எண்ணிய நியூசிலாந்து அணி வீரர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
இதனிடையே ஆட்டத்தின் 47.3 வது ஓவரில் பாபர் அசாம் தனது சதத்தை பதிவு செய்தார். ஹாரிஸ் சோகைல் 68(76) ஓட்டங்கள் கடந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன் மூலம் ஆட்டத்தின் 49.1 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 241 ஓட்டங்கள் சேர்த்தது. முடிவில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி தரப்பில் அதிக பட்சமாக பாபர் அசாம் 101 (127), முகமது ஹபீஸ் 32 (50), ஹாரிஸ் சோகைல் 68 (76) ஓட்டங்களை குவித்தனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், பெர்குசன், வில்லியம்சன் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.
இப்போட்டியில் சதம் அடித்து அசத்திய பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், உலகக்கிண்ணம் அரங்கில், சுமார் 32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தான் வீரர என்ற பெருமை பெற்றார்.

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்க வீரர்களை 49 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

லண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (23) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தெரிவு செய்தது.

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் அரையிறுதி சுற்றுக்கான அணிகளை தெரிவு செய்யும் தீர்க்கமான ஆட்டங்களாகவே இப்போதைய உலகக் கிண்ண லீக் போட்டிகள் அமைவதால், இப்போட்டியும் மிக முக்கியத்துவம் கொண்டதாக அமைந்திருந்தது.

இந்நிலையில் தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் இந்தியாவுடன் தோல்வியினை தழுவி, 3 புள்ளிகளுடன் காணப்படும் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றியினை எதிர்பார்த்து இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

அந்தவகையில் இந்திய அணியுடனான போட்டியில் விளையாடிய அனுபவ சகலதுறை வீரர் சொஹைப் மலிக், வேகப்பந்துவீச்சாளர் ஹஸன் அலி ஆகியோருக்கு பதிலாக பாகிஸ்தான் அணி இப்போட்டியில் சஹீன் அப்ரிடி மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

பாகிஸ்தான் அணி – இமாம்-உல்-ஹக், பக்கார் சமான், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், ஹரிஸ் சொஹைல், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), இமாத் வஸீம், சதாப் கான், வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமீர், சஹீன் அப்ரிடி

மறுமுனையில் தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியினை தழுவி, 3 புள்ளிகளுடன் காணப்படும் தென்னாபிரிக்க அணி இப்போட்டியில் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் மாற்றங்கள் எதுவுமின்றி களமிறங்கியது.

தென்னாபிரிக்க அணி – ஹஷிம் அம்லா, குயின்டன் டி கொக், எய்டன் மார்க்ரம், பாப் டு பிளேசிஸ் (அணித்தலைவர்), ரஸ்ஸி வன்டர் டஸ்ஸேன், டேவிட் மில்லர், அன்டைல் பெஹ்லுக்வேயோ, கிறிஸ் மொர்ரிஸ், ககிஸோ றபாடா, லுங்கி ன்கிடி, இம்ரான் தாஹிர்

பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வழமை போன்று இமாம்-உல்-ஹக் மற்றும் பக்கார் சமான் ஆகியோர் களம் வந்தனர்.

இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் பாகிஸ்தான் அணிக்கு சிறந்த ஆரம்பத்தை கொடுத்தனர். இதில் இம்ரான் தாஹிரின் சுழலில் பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த பக்கார் சமான் 50 பந்துகளில் 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 44 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதேநேரம் மீண்டும் தாஹிரின் சுழலில் பாகிஸ்தான் அணியின் இரண்டாம் விக்கெட்டாக மாறிய இமாம்-உல்-ஹக் 44 ஓட்டங்களை பெற்று தனது தரப்பிற்கு வலுச்சேர்த்திருந்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை அடுத்து பாபர் அசாம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெற்றுக் கொண்ட 2ஆவது அரைச்சதத்துடன் பாகிஸ்தான் அணியை வலுப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து பெஹ்லுக்வேயோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் 14ஆவது அரைச்சதத்துடன் 80 பந்துகளில் 7 பெளண்டரிகள் உடன் 69 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இவரினை அடுத்து மத்திய வரிசையில் துடுப்பாடிய ஹாரிஸ் சொஹைல் பெற்ற அதிரடி அரைச்சதத்துடன் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹாரிஸ் சொஹைல் அவரின் 11ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 59 பந்துகளில் 89 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக லுங்கி ன்கிடி 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர். அத்தோடு, இம்ரான் தாஹிர் இப்போட்டி மூலம் தென்னாபிரிக்க அணிக்காக உலகக் கிண்ணத் தொடர்களில் அதிக விக்கெட்டுக்களை (39) சாய்த்த வீரராகவும் மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 308 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய தென்னாபிரிக்க அணி பதிலுக்கு துடுப்பாடியது.

தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த ஹஷிம் அம்லா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். எனினும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குயின்டன் டி கொக், அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் உடன் இணைந்து தென்னாபிரிக்க அணியின் ஓட்டங்களை உயர்த்த உதவினார்.

தொடர்ந்து குயின்டன் டி கொக் தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்தார். டி கொக் 60 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் உடன் 47 ஓட்டங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

குயின்டன் டி கொக்கினை அடுத்து தென்னாபிரிக்க அணியில் அதன் தலைவர் பாப் டு பிளேசிஸ் மற்றும் அன்டைல் பெஹ்லுக்வேயோ ஆகியோர் மாத்திரமே எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

இதேநேரம் ஏனைய தென்னாபிரிக்க வீரர்கள் பிரகாசிக்கத் தவற தென்னாபிரிக்க அணி போட்டியில் 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவியது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றிக்காக முயற்சி செய்திருந்த பாப் டு பிளேசிஸ் அவரின் 34ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 79 பந்துகளில் 5 பெளண்டரிகள் உடன் 63 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம் பெஹ்லுக்வேயோ 32 பந்துகளில் 46 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் அதன் வெற்றியினை வஹாப் ரியாஸ் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணிக்காக அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஹாரிஸ் சொஹைல் தெரிவாகினார்.

இப்போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால் தென்னாபிரிக்க அணி இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறுகின்றது. தென்னாபிரிக்க அணி 2003ஆம் ஆண்டிற்கு பின்னர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் நொக்-அவுட் சுற்று ஒன்றுக்கு தெரிவாகாமல் வெளியேறுவது இதுவே முதல் தடவையாகும்.

இதேநேரம் இப்போட்டியின் வெற்றியுடன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் 5 புள்ளிகளுடன் முன்னேறும் பாகிஸ்தான் அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் நியூசிலாந்து அணியினை எதிர்வரும் புதன்கிழமை (26) பர்மிங்ஹமில் வைத்து சந்திக்கின்றது.

இதேநேரம் தென்னாபிரிக்க அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இலங்கை வீரர்களை செஸ்டர்-லீ-ரீட் மைதானத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (28) சந்திக்கின்றது.

இலங்கை அணி அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் லீட்ஸ் – ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் மாலிங்க மற்றும் ஏனைய பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 232 ஓட்டங்களை மாத்திரமே வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்த போதிலும், மாலிங்க உட்பட அனைத்து பந்துவீச்சாளர்களும் பலமான இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு சவால் கொடுத்து இலங்கை அணிக்கு இந்த உலகக் கிண்ணத்தில் இரண்டாவது வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளம் என்ற போதும், இலங்கை அணி வீரர்களின் கவனயீனமான துடுப்பாட்டத்தால் இங்கிலாந்து அணி ஆரம்பம் முதல் நெருக்கடியை கொடுத்தது.

குறிப்பாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த ஆரம்பத்தையும், ஓட்டங்களையும் குவித்திருந்த திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் க்ரிஸ் வோக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் வேகத்தில் சிக்கி ஆட்டமிழக்க, இலங்கை அணி 3 ஓட்டங்களுக்கு தங்களுடைய ஆரம்ப வீரர்கள் இருவரையும் இழந்தது.

எனினும், உலகக் கிண்ணத் தொடரின் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடிய அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர். இதில், அவிஷ்க பெர்னாண்டோ இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு பௌண்டரி மற்றும் சிக்ஸர்களை பெற்றார். அவிஷ்க பெர்னாண்டோ  வேகமாக துடுப்பெடுத்தாட மறுமுனையில் குசல் மெண்டிஸ் நிதானமாக ஓட்டங்களை சேர்த்தார்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவிஷ்க பெர்னாண்டோ அரைச்சதத்தை நெருங்கிய நிலையில், துரதிஷ்டவசமாக 49 ஓட்டங்களில் விக்கெட்டினை பறிகொடுத்து, அவரது முதல் உலகக் கிண்ண அரைச்சதத்தை தவறவிட்டார். இதன் பின்னர், கட்டாயமாக ஓட்டங்களை சேர்க்கவேண்டிய நிலையில் களமிறங்கிய அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸுடன் இணைப்பாட்டம் ஒன்றினை வழங்கினார்.

ஆனால், இவர்களது இணைப்பாட்டமானது மிக குறைந்த ஓட்டவேகத்துடன் சென்றது. இந்த நிலையில் குசல் மெண்டிஸ் ஓட்ட வேகத்தினை அதிகரிக்க முற்பட்டார். இதன்போது, 46 ஓட்டங்களை பெற்றிருந்த மெண்டிஸ், ஆதில் ரஷீடின் பந்தில் இயன் மோர்கனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜீவன் மெண்டிஸ் தனது முதல் பந்திலேயே ஆட்டமிழக்க இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து மேலும் நெருக்கடியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள், இலங்கை அணியின் துடுப்பாட்ட வேகத்தைக் கட்டுப்படுத்த, இலங்கை அணியின் ஓட்ட வேகம் மேலும் குறைவடைந்தது. எனினும், நிதானமாக துடுப்பெடுத்தாடிய அஞ்செலோ மெதிவ்ஸ் தனது அரைச்சதத்தை பதிவுசெய்தார்.

அஞ்செலோ மெதிவ்ஸ் அரைச்சதம் கடந்த போதும், அவரால் ஓட்டங்களை வேகமாக குவிக்க முடியாமல் தடுமாற்றம் அடைந்தார். மறுமுனையில் தனன்ஜய டி சில்வா ஓரளவு ஓட்டங்களுடனும், திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக அஞ்செலோ மெதிவ்ஸ் 85 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இங்கிலாந்து அணியின் சார்பில் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வூட்  ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷீட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர், இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக முதல் ஓவரில் லசித் மாலிங்க, இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயார்ஸ்டோவின் விக்கெட்டினை கைப்பற்றினார். தொடர்ந்து, சிறிய இணைப்பாட்டம் ஒன்று பகிரப்பட்ட போதும், ஜேம்ஸ் வின்ஸை ஆட்டமிழக்கச் செய்து மாலிங்க தன்னுடைய இரண்டாவது விக்கெட்டினை கைப்பற்றினார்.

ஆனாலும், அடுத்து ஜோடி சேர்ந்த இயன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய இணைப்பாட்டம் ஒன்றினை பகிர்ந்தனர். இவர்கள் 47 ஓட்டங்களை பகிர்ந்திருந்த நிலையில், இசுரு உதான தனது பந்துவீச்சில் மிகச்சிறந்த பிடியெடுப்பு ஒன்றின் மூலமாக இயன் மோர்கனை ஆட்டமிழக்கச் செய்தார்.

இவ்வாறு இங்கிலாந்து அணித்தலைவர் ஆட்டமிழந்திருந்த போதும், நிதானமான இணைப்பாட்டமொன்றினை பகிர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சவாலை கொடுத்து ஓட்டங்களை குவித்தனர். எனினும், மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்ட லசித் மாலிங்க, ஜோ ரூட்டின் விக்கெட்டினை வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

ஆனால், இதனையடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் இலங்கை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு வேகமாக ஓட்டங்களை குவிக்க முற்பட்டார். இருப்பினும், மீண்டும் பந்துவீச வருகைதந்த மாலிங்க தனக்கே உரித்தான யோர்க்கர் பந்துவீச்சால் பட்லரின் விக்கெட்டினை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு தடுமாற்றத்தை கொடுத்தார்.

இங்கிலாந்து அணி பக்கம் முழுமையான அழுத்தம் இருந்த போதும், பென் ஸ்டோக்ஸ் தனது துடுப்பாட்டத்தால் அணியை முன்னோக்கி அழைத்துச் சென்றார். அவருடன் இணைந்த மொயீன் அலி நிதானமாக துடுப்பெடுத்தாடிய போதும், தனன்ஜய டி சில்வாவின் சுழல் பந்தில் சிக்ஸர் ஒன்றை பெற்றுக்கொள்ள முற்பட்டு இசுரு உதானவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய க்ரிஸ் வோக்ஸ் மற்றும் ஆதில் ரஷீட் ஆகியோரை தனன்ஜய டி சில்வா தன்னுடைய ஒரே ஓவரில் வெளியேற்ற இங்கிலாந்து அணி போட்டியில் முழுமையான அழுத்தத்தை உணர்ந்தது.

வோக்ஸின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களம் நுழைந்த ஜொப்ரா ஆர்ச்சர் நிதானமாக களத்தில் நின்று துடுப்பெடுத்தாட முற்பட்ட போதும், இசுரு உதான மிதவேகமான பந்துவீச்சின் மூலம் பிடியெடுப்பு வாய்ப்பொன்றினை ஏற்படுத்த, திரச பெரேரா பிடியெடுத்து ஆர்ச்சரை வெளியேற்றினார்.

ஆனாலும், இறுதி விக்கெட்டுக்காக களமிறங்கிய மார்க் வூட் அவரது விக்கெட்டை பாதுகாத்து ஸ்டோக்ஸிற்கு வாய்ப்பினை வழங்கினார். அதனை பயன்படுத்திக்கொண்ட ஸ்டோக்ஸ் தனியாளாக ஓட்டங்களை குவித்த போதும், நுவன் பிரதீப் மார்க் வூட்டின் விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியிடம் தொடர்ச்சியாக 4 உலகக் கிண்ணங்களில் தோல்வியடையாத அணி என்ற சாதனையை பெற்றுக்கொண்ட இலங்கை அணி, உலகக் கிண்ணத்தில் தங்களுடைய இரண்டாவது மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தியும் உள்ளது. இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 228 ஓட்டங்களை கட்டுப்படுத்தியிருந்த இலங்கை அணி, தற்போது 232 ஓட்டங்களை கட்டுப்படுத்தியுள்ளது.

இதேவேளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 6 புள்ளிகளை பெற்றுக்கொண்ட இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், தங்களுடைய அரையிறுதி கனவையும் தக்கவைத்துள்ளது. இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற அடுத்துவரும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயமும் எழுந்துள்ளது. இதேநேரம், இலங்கை அணி தங்களுடைய அடுத்தப் போட்டியில் 28 ஆம் திகதி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், இங்கிலாந்து அணி எதிர்வரும் 25 ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இன்றைய உலகக் கிண்ணப் போட்டியில் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் ஏமாற்றமளிக்க இலங்கை அணி 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்திருந்த 335 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட போதும், மத்தியவரிசை மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பின்மையால் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ நேரிட்டது.

லண்டன் – கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரின் 20 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வுசெய்த நிலையில், அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆஸி. அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்து அணிக்கு மிகச் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணிக்கு தடுமாற்றம் கொடுத்த இவர்களது ஆரம்பத்தை தனன்ஜய டி சில்வா, டேவிட் வோர்னரின் விக்கெட்டினை கைப்பற்றி தகர்த்தார். 80 ஓட்டங்களுக்கு ஆஸி. அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா வலுவளிக்கக்கூடிய இணைப்பாட்டத்தை பகிர முற்பட்ட போதும், மீண்டும் தனன்ஜய டி சில்வா தனது சுழலின் மூலம் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தி இலங்கை அணிக்கு மேலும் பலத்தை கொடுத்தார்.

ஆனால், ஆரோன் பின்ச் அரைச் சதம் கடக்க, உஸ்மான் கவாஜாவின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ஆஸி. அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கினர்.  இதில், தனன்ஜய டி சில்வாவின் ஒரே ஓவரில் ஆரோன் பின்ச் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியை விளாசி தனது ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டார். தொடர்ந்து இவர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதுடன், ஆரோன் பின்ச் தனது சதத்தை பதிவுசெய்ய, இலங்கை அணி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியது.

ஒரு பக்கம் ஆரோன் பின்ச் சதம் கடக்க, மறுபக்கம் ஸ்டீவ் ஸ்மித் அரைச்சதம் கடந்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தடுமாற்றத்தை கொடுத்தார். இருவரும், இலங்கை அணியின் பந்துவீச்சை சோதித்து, 150 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை தொட்டதுடன், ஆரோன் பின்ச் இந்த வருடத்தில் தன்னுடைய 2 ஆவது 150 ஓட்டங்களை கடந்தார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் ஆட்டமிழக்காமல் 153 ஓட்டங்களை பெற்றிருந்த இவர், இந்தப் போட்டியில் 153 ஓட்டங்களை பெற்று, இசுரு உதானவின் பந்துவீச்சில் திமுத் கருணாரத்னவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டமிழப்பின் போது, ஆஸி. அணி 273 ஓட்டங்களை தொட்டிருந்தது. எனினும், அதற்கு அடுத்த ஓவரில் லசித் மாலிங்க, ஸ்டீவ் ஸ்மித்தை (73) போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்ய ஆஸி. அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தங்களுடைய இரண்டு வீரர்களையும் இழந்தது.

ஆனால், அடுத்து வருகைத்தந்த கிளேன் மெக்ஸ்வேல் அதிரடியாக ஓட்டங்களை குவித்து ஆஸி. அணியை 300 ஓட்டங்களை கடக்க செய்தார். இறுதியில், இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்தினாலும், மெக்ஸ்வேல் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஆஸி. அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் இசுரு உதான மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை நோக்கி தங்களுடைய துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, மிக வேகமாக ஓட்டங்களை குவிக்க தொடங்கியது. திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் ஆஸி. அணியின் பந்துவீச்சை சோதித்தனர். இருவரும் இணைந்து முதல் 10 ஓவர்களுக்கு 87 ஓட்டங்களை விளாசினர். இந்த ஓட்ட எண்ணிக்கையானது, இந்த உலகக் கிண்ணத்தில் முதல் 10 ஓவர்களில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது.

தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடி இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் அரைச் சதம் கடந்த போதிலும் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் குசல் பெரேரா போல்ட் முறையில் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை ஆரம்பித்த லஹிரு திரிமான்னவும் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும், அணிக்காக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் நிதானமாக ஓட்டங்களை பெற முற்பட்டனர். இதற்கிடையில், ஆஸி. அணியின் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்தி நெருக்கடி கொடுத்தனர். இதில், 97 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்த திமுத் கருணாரத்ன கேன் ரிச்சட்சனின் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழக்க இலங்கை அணி மேலும் அழுத்தத்திற்கு முகங்கொடுத்தது.

தொடர்ச்சியாக ஆஸி. அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் இலங்கை அணிக்கு சவால் கொடுக்க, அஞ்செலோ மெதிவ்ஸ், பெட் கம்மின்ஸின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர். மிச்சல் ஸ்டார்க் தனது வேகத்தால் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் கொடுக்க திசர பெரேரா, மிலிந்த சிறிவர்தன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து இலங்கை அணிக்கு முற்று முழுதாக ஏமாற்றத்தை வழங்கியதுடன்,  அணியை பின்னடையச் செய்தனர்.

மொத்தமாக இலங்கை அணியின் மத்தியவரிசை மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கு ஏமாற்றத்தை வழங்கியதில், ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கியிருந்த இலங்கை அணி 247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

குறிப்பாக 30 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களை பெற்றிருந்த போதும், அடுத்த 10 ஓவர்களில் 60 ஓட்டங்களுக்கு தங்களுடைய 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தமை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஆஸி. அணி சார்பில் அபாரமாக பந்துவீசியிருந்த மிச்சல் ஸ்டார்க் 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இலங்கை அணி 4 புள்ளிகளுடன் அதே 5 ஆவது இடத்தில் தொடர்கிறது. இந்த நிலையில், இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், ஆஸி. அணி, எதிர்வரும் 20 ஆம் திகதி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.

உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு இழைக்கப்படும் அநீதிகள்?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு வழங்கப்படும் ஆடுகளங்களில் அநீதி இழைக்கப்படுவது தொடர்பில் ஐசிசியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவரும், அணி முகாமையாளருமான அசந்த டி மெல் ”த டெய்லி நியூஸ்” ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை கார்டிப் மைதானத்தில் எதிர்கொண்டிருந்தது. இந்த மைதானத்தின் ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான புற்கள் நிறைந்த (Green Pitch) ஆடுகளமாக அமைக்கப்பட்டிருந்தது.

எனினும், இலங்கை – ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பின்னர், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இதே கார்டிப் மைதான ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக புற்கள் அகற்றப்பட்ட, (flat) ஆடுகளமாக வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் 200 ஓட்டங்கள் பெறுவதற்கு கடினமாக இருந்த போதும், இங்கிலாந்து அணி 386 ஓட்டங்களையும், பங்களாதேஷ் அணி 280 ஓட்டங்களையும் குவித்திருந்தது.

இந்த நிலையில், நாளை (15) இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக அமைக்கப்பட்டுள்ளதாக அசந்த டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னர் இந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆடுகளம் புற்கள் அற்ற ஆடுகளமாக அமைக்கப்பட்டிருந்ததுடன், துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக  அமைந்திருந்தது. குறித்த போட்டியில் இரண்டு அணிகளும் தலா 300 ஓட்டங்களை கடந்திருந்தன.

இவ்வாறு இருக்கையில், நாளைய போட்டிக்கான ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதை பார்க்கும் போது, ஐசிசி ஒருதலைப்பட்சமாக செயற்படுவது போன்று உள்ளது என அசந்த டி மெல் குற்றம் சுமத்தியுள்ளார்.

“ஓவல் மைதானத்தில் நாளைய போட்டிக்காக புற்கள் நிறைந்த (green pitch) ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது.  ஒரு பகுதி அணிகளுக்கு ஒருவிதமான ஆடுகளத்தையும், மற்றைய பகுதி அணிகளுக்கு வித்தியாசமான ஆடுகளங்களையும் ஐசிசி வழங்குவது நியாயமற்ற விடயமாகும்.”

இதேவேளை, இலங்கை அணிக்கு வழங்கப்படும் ஆடுகளங்களில் மட்டுமில்லாமல் ஏனைய சில வசதிகளிலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, போக்குவரத்துக்கு வழங்கப்படும் பஸ், வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹோட்டல் மற்றும் கார்டிப் மைதானத்தில் வழங்கப்பட்ட பயிற்சிக்கான வசதிகளிலும் குறைப்பாடு இருப்பதாகவும், குறித்த விடயங்கள் தொடர்பில் ஐசிசியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அசந்த டி மெல் குறிப்பிட்டுள்ளார்.

“நாம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் மற்றும் வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக ஐசிசியிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால், அவற்றுக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. ஆனாலும், எமக்கு பதில் கிடைக்கும் வரை நாம் எமது முறைப்பாடுகளை தெரிவிப்போம்” என்றார்.

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளைய 5வது போட்டியில், அவுஸ்திரேலிய அணியை கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் படி இலங்கை அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் இரண்டு கைவிடப்பட்ட போட்டி முடிவுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

மழையால் தொடர்ந்து ரத்தாகும் உலகக்கோப்பை போட்டிகள் வேறு நாளில் நடத்தப்படுமா?

உலக கோப்பை கிரிக்கெட்டில் மழையால் பாதிக்கும் ஆட்டங்களுக்கும் மாற்று நாள் ஒதுக்குவது முடியாத காரியம் என ஐசிசி அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இலங்கை–பாகிஸ்தான், இலங்கை–வங்காளதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானது.

தென்ஆப்பிரிக்கா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 7.3 ஓவர்களில் மழையால் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக அதிக ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது நடப்பு உலக கோப்பை போட்டியில் தான்.

மழையால் ரத்து செய்யப்படும் லீக் ஆட்டங்களுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) எதுவும் கிடையாது. அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்று நாள் உண்டு.

லீக் சுற்று ஆட்டங்களுக்கும் மாற்று நாள் அளிக்க வேண்டும் என்று வங்காளதேச அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் உள்பட பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் உலக கோப்பை போட்டியில் லீக் ஆட்டங்களுக்கு மாற்று நாள் ஒதுக்குவது என்பது இயலாத காரியம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. மாற்றுநாள் என்றால் போட்டியின் கால அளவு கணிசமாக அதிகரித்து விடும்.

இதனை நடைமுறைபடுத்துவது என்பது மிகவும் சிக்கலானதாகும். கூடுதல் ஆட்கள் தேவைப்படும். மாற்று நாளில் மழை பெய்யாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது என ஐசிசி தெரிவித்துள்ளது.