Responsive Advertisement 2

தூய காங்கிரசினர் மக்கள் காங்கிரசிடம் தஞ்சம்



தூய காங்கிரசினர் மக்கள் காங்கிரசிடம் தஞ்சம்: கூட்டமைப்பு என்பது வெறும் கண்துடைப்பு





முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பாக அண்மைக்காலமாக பரவலாக பேசப்பட்டதனை யாவரும் அறிவோம். மேற்படிகூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேறிய தூய காங்கிரசினரே கடும்பிரயத்தனங்களை மேற்கொண்டனர் என்பதும் வெளிப்படையான உண்மையாகும். 





முஸ்லிம் கூட்டமைப்பு என்கின்றபோது முஸ்லிம் தலைவர்களைக் கொண்ட அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கியதாகவே அது அமைய வேண்டு மென்பது  பலரதும் எதிர்பார்ப்பாகும்.





ஆனால் கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்டியடித்துக்கொண்டு களத்தில் இறங்கியவர்கள் மு.காவைபுறந்தள்ளிவிட்டு ஏனைய முஸ்லிம் கட்சிகளை உள்ளடக்கியதொரு கூட்டமைப்பை உருவாக்குவதற்கு கங்கனம்கட்டினர். தூய காங்கிரசினரின் நோக்கம் எதிர்வருகின்ற தேர்தல்களில் எப்படியாவது ஹக்கீமை வீழ்த்தவேண்டுமென்பதாகவே இருந்தது.





மு.காவில் இருந்து அதிருப்தியுற்ற தூய காங்கிரசினர் ஹக்கீமை பழிவாங்குவதற்காக ஏனைய கட்சிகளைபகடக்காய்களாக பயன்படுத்துவதற்கு முற்பட்டனரே தவிர முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் உரிமைவிடயத்தில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. இருந்தும் அவர்கள் மு.கா தவிர்ந்த ஏனைய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.





இவர்கள் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி, நல்லாட்சிக்கான தேசியமுன்னணி ஆகிய கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இதில் சிலர் முஸ்லிம் கூட்டமைப்புஎன்கின்ற போது அதில் மு.காவும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கருத்தில் இருந்தாலும், சிலர் கிழக்குமாகாணத்தை சேர்ந்தவர்களை மாத்திரம் உள்ளடக்கியதாக கூட்டமைப்பு அமைய வேண்டும் என்கின்ற விடயத்தில்மிகவும் கவனமாக இருந்தனர்.





மேற்படி கருத்தில் உடன்படாத தூய காங்கிரசினர் மு.காவுக்கு எதிரான கட்சிகளை மாத்திரம் உள்ளடக்கிகூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களுடைய நிலைப்பாடு கிழக்குமாகாணத்திலிருந்து ஹக்கீமை விரட்ட வேண்டும் என்பதாகவே இருந்தது. இந்தவிடயத்தில் திருடனைவிரட்டுவதற்கு திருட்டுத்தனமான கூட்டு ஒருபோதும் சரிப்பட்டுவராது என அதாஉல்லா திட்டவட்டமாககூறிவிட்டார். கிழக்கிலுள்ளவர்களை ஒன்றினைத்து நல்லதொரு கூட்டமைப்பை ஏற்படுத்துங்கள் எனவும் அவர்அறுதியும், இறுதியுமாகவும் சொல்லிவிட்டார்.





அத்துடன் ஏனைய கட்சிகளும் கூட்டமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. இதனால் இறுதி நேரத்தில்முஸ்லிம் கூட்டமைப்பு கனவு தவிடுபொடியாகியது. இதனால் செய்வதறியாது தடுமாறிய தூய காங்கிரசினர். ஐக்கியசமாதான கூட்டமைப்பு எனும் கட்சியினை கொள்வனவு செய்தனர். பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரசோடு இவர்கள் சங்கமிக்க வேண்டியேற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்படி இரு கட்சியினரும் இணைந்து உடன்படிக்கைகளையும் செய்துகொண்டு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எனவும் பிரகடனம் செய்தனர்.





இதனால் கூட்டமைப்பு எனும் போர்வையில் தூய காங்கிரசினர் அமைச்சர் ரிசாட்டினது கட்சியில் இணைந்துள்ளனரே தவிர வேறொன்றுமில்லை என்கின்றனர் அம்பாரை மாவட்ட மக்கள். அதனை இப்போது கூட்டமைப்பாக அவர்கள் சித்தரிக்க முற்பட்டாலும் அது மக்கள் மத்தியில் திருட்டுத்தனமான இணைவு என்பதனையே எடுத்துக்காட்டியுள்ளது. இந்த கூட்டினால் அம்பாரை மாவட்ட தூய காங்கிரசின் ஆதரவாலர்கள் பலரும் அதிருப்தியுற்றுள்ளனர்.





குறிப்பாக தூய காங்கிரசினர் அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து அம்பாரை மாவட்டத்தில் எதனையும் சாதிக்க முடியாது என்பது வெளிப்படையான உண்மையாகும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அமைச்சர் ரிஷாட் தலைமையிலான மயில் கட்சிக்கு விழுந்த வாக்கினை வைத்து யாரும் இப்போது கணக்குப்போடவும் முடியாது.அம்பாரை மாவட்டத்தில் மு.காவுக்கு எதிரான வாக்குகள் ஏராளம் உள்ளன. அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தனியானதொரு செல்வாக்கும் அங்கு உள்ளது. இப்படியான தனியானதொரு செல்வாக்கு மக்கள் காங்கிரசுக்கு அம்பாரையில் இல்லை என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.





சென்ற ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் அமைச்சர் அதாஉல்லா மஹிந்தவை ஆதரித்ததனால் எப்படியாவது அங்கு வாக்கு வேட்டையாடலாம் எனக்கருதிய அமைச்சர் ரிஷாட் தனது கட்சியினூடாக அம்பாரை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டார். அந்த சமயத்தில் அவர் அம்பாரை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் வழங்குவதாகவும், கரையோர மாவட்டம் அமைப்பேன் என்றும், கைத்தொழில் பேட்டைகளை அமைத்து பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவேன் என்றும் வாக்குறுதிகளை வழங்கினார். அந்த நேரம் களம் அமைச்சர் ரிஷாட்டுக்கு சாதகமாக இருந்தது. இருந்தாலும் அப்போது அம்பாரை மக்கள் அவரை நம்பி சுமார் 33ஆயிரம் வாக்குகளை மயில் கட்சிக்கு வழங்கினர்.





மீண்டும் தேர்தலின் பின்னர் அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ரிஷாட் பதியுதீன் கரையயோர மாவட்டம் அறிவிக்கப்படாதவிடத்து அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கமாட்டேன் என சூழுரைத்தார். அத்துடன் அம்பாரையில் உள்ள மூன்று முஸ்லிம் தொகுதிகளிலும் தனது பனிமணையினை அமைத்து மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்றார். கடையிசில் அவரினால் ஒன்றுமே செய்யப்படவில்லை. அவைகள் யாவும் போலி வாக்குறுதிகளாகவே கிடப்பில் போடப்பட்டன.





இறுதியில் நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே பரிசாக வழங்கப்பட்டது. அமைச்சரினால் பகிரங்கமாகஅளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டன. அமைச்சரை நம்பியிருந்த மக்கள் கடைசியில் ஏமாந்து போனார்கள்.இவைகளை சீர் செய்யுமுகமாகவே அமைச்சர் ரிஷாட் அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த சிலருக்கு தனது அமைச்சின் ஊடாக சில திணைக்கள உயர் பதவிகளை வழங்கினார். அதனூடாக உயர் பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சந்தோசமாக தலைநகரிலே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கட்சி ஆதரவாலர்கள் தங்களது அரசியல் இருப்பை தொலைத்துவிட்டு  கொழும்பென்றும் தாரா புரம் என்றும் அலைந்து திறிகின்றார்கள்.





இவ்வாறு அம்பாரை மாவட்ட மக்களை ஏமாற்றிய கட்சி ஒன்றுடன் தூய காங்கிரசினர் இணைந்திருப்பதனால்கூட்டமைப்பை ஆவலாக எதிர்பார்த்திருந்த மக்கள் இன்று தூய காங்கிரசினரின் செயற்பாடுகளை விமர்சித்து வருகின்றனர். இந்த இரு கட்சியினரின் இணைவால் எதனையும் அம்பாரை மாவட்டத்தில் சாதிக்க முடியாது என்கிறார் மூத்த அரசியல்வாதி ஒருவர். அகில இலங்கை மக்கள் காங்கிரசிக்கு சம்மாந்துறை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் அதிகமான வாக்குகள் இருப்பதாக சிலர் கதை சொல்லுகின்றனர். அப்போதைய நிலைமைகளை இப்போது சொல்லி மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சியாகவே இக்கதைகளை நோக்கவேண்டியுள்ளது.





தூய காங்கிரசினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசினரும் இணைந்து அம்பாரை மாவட்டத்தில் பல உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றப் போவதாகவும் சில நகைச்சுவையான அறிக்கைகளையும் வெளியிடுகின்றனர்.இவர்களினால் எந்தவொரு சபைகளையும் கைப்பற்ற முடியாது என்கிறார் மூத்த ஊடகவியலாளர் ஒருவர். அம்பாரை மாவட்டத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இழந்துவிட்டது. கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் வழங்கப்பட்ட சகல வாக்குறுதிகளும் மீறப்பட்டமையே அதற்கு பிரதான காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.





இவ்வாறு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து காணப்படும் கட்சி ஒன்றுடன் தூய காங்கிரஸ் இணைந்தமையினால்தூய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் வேறு கட்சிகளில் இணைந்துள்ளனர். இவர்கள் மு.கா தலைவருடைய பாசறையை ஒத்த ஒரு தலைவருடனே இணைந்துள்ளனர் எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.





கண்டி சென்று ஏமாந்த கூட்டம் இப்போது வன்னி செல்வது ஆபத்தானது! கண்டியும் வேண்டாம் வன்னியும் வேண்டாம்!! கிழக்கிலே தலைமை வேண்டும் கிழக்கு மக்கள்!!!





எம்.ஜே.எம்.சஜீத்






தூய காங்கிரசினர் மக்கள் காங்கிரசிடம் தஞ்சம் தூய காங்கிரசினர் மக்கள் காங்கிரசிடம் தஞ்சம் Reviewed by Admin on December 17, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3