Responsive Advertisement 2

மருதமுனை MPL சம்பியன் கிண்ணத்தை B4U WORRIORS அணிக்கு முசாரப் எம்.பி வழங்கி வைத்தார்.

 



(எஸ்.எம்.அறூஸ்)

 

MPL  அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வந்த  மருதமுனை பிறிமியர் லீக்   மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் B4U WORRIORS அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.


 MPL  அமைப்பினால் கடந்த ஐந்து நாட்களாக மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் வெற்றிகரமாக இச்சுற்றுப்போட்டி இடம்பெற்று வந்தது.

 

 மொத்தமாக பத்து அணிகள் கலந்து கொண்ட இச்சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு B4U WORRIORS அணியும் TSUNAMI YOUNGERS அணியும் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

 

இறுதிப் போட்டிகள் நிகழ்வுகள் மருதமுனை பிறிமியர் லீக் சுற்றுப்போட்டிக்குழுத் தலைவர் எம்.நுசையிர் தலைமையில் இடம்பெற்றபோது, திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி வெற்ற TSUNAMI YOUNGERS அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி TSUNAMI YOUNGERS அணி 7 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களைக் இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் பயாஸ் 20 ஓட்டங்களையும்,சிபான் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் B4U WORRIORS அணி சார்பாக சஜாத் 19 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

 

 வெற்றி பெறுவதற்கு 54 ஓட்டங்களைப் பெறத்துடுப்பெடுத்தாடிய B4U WORRIORS அணி 4.2 பந்துவீச்சு ஓவர்களில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன் 2023ம் ஆண்டுக்கான சம்பியனாகவும் தெரிவானது. இதில் நஜாத் 13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும், ஜெசாட் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் TSUNAMI YOUNGERS அணி சார்பாக  16 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினைக் கைப்பற்றினார்.


இப்போட்டியில் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட B4U WORRIORS அணிக்கான வெற்றிக்கிண்ணத்தையும், நாற்பதாயிரம் ருபா பெறுமதியான பணப்பரிசினையும் பிரதம அதிதியான பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் அதன் அணித்தலைவரிடம் வழங்கி வைத்தார்.

 

 ரன்னர்அப்பாக தெரிவான TSUNAMI YOUNGERS அணிக்கான கிண்ணத்தையும் இருபதாயிரம் ரூபா பெறுமதியான பணப்பரிசினையும் சரோ பாம் நிறுவனத்தின் தவிசாளர் தாஜூதீன் அதன் அணித்தலைவரிடம் வழங்கி வைத்தார்.

 

 இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக B4U WORRIORS அணியின் என்.நஜா தெரிவானதுடன் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

 

 இச்சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக TSUNAMI YOUNGERS அணியின் எம்.எம்.பயாஸ் தெரிவானதுடன கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.

 

இச்சுற்றுப்போட்டியின் கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற வீரராக TSUNAMI YOUNGERS அணியின் நுபைல் தெரிவு செய்யப்பட்டார். அதேபோன்று  இச்சுற்றுப்போட்டியின் கூடுதலான விக்கட்டுக்களை கைப்பற்றிய வீரராக  B4U WORRIORS அணியின் சஜாத் தெரிவானார்.

 

 அத்தோடு இச்சுற்றுப்போட்டியின் மூன்றாமிடத்தை VAYAL HEROES அணியும், நான்காமிடத்தை BRIGHT BULLS அணியும் பெற்றுக்கொண்டது.

 

 மிகச்சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் கூடுதலான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் குழுமியிருந்தமை விசேட அம்சமாகும்.

 

இறுதிப் போட்டி நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அமீர்,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரபின் இணைப்பாளர் P.M.M. ஜஃபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

 இங்கு  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரப் உரையாற்றும்போது, மருதமுனையின் முன்னேற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக நான் பார்ப்பது ஆரோக்கியமான போட்டியாகும் என்று தெரிவித்தார். அத்தோடு மருதமுனை 65 மீற்றர் வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளித்துள்ளதாகவும் கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாவும் குறிப்பிட்டார்.


 மருதமுனை எனது இரண்டாவது ஊராகும்.போட்டி நடத்துபவர்கள் தொடக்கம் விளையாடுகின்ற வீரா்கள்,அதிதிகள் எல்லோரும் என்னோடு கல்வி கற்றவர்கள்,எனது ஆசிரியர்களாகும். எமது பிராந்தியத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்த கிராமமாக மருதமுனை திகழ்கின்றது. வாக்குறுதி வழங்குவதைவிட அதனை செயலில் முன்னெடுப்பதையே நான் எப்போதும் விரும்புகின்ற ஒருவன் எனவும் தெரிவித்தார்.


இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் ஏற்பாட்டுக் குழுவினரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.





































































 









 

 

 

மருதமுனை MPL சம்பியன் கிண்ணத்தை B4U WORRIORS அணிக்கு முசாரப் எம்.பி வழங்கி வைத்தார். மருதமுனை MPL சம்பியன் கிண்ணத்தை  B4U WORRIORS அணிக்கு முசாரப் எம்.பி வழங்கி வைத்தார். Reviewed by Admin on May 15, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3