(ஏ.அர்சாத்)
அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சுமார் 25,000 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளதால் அந்தக்கட்சிக்கு ஆசனம் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சியின்சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் சுமார் 15,000 வாக்குகளை மக்கள் காங்கிரஸ் கட்சி இழப்பதுடன் சம்மாந்துறை மற்றும் நிந்தவுர், பொத்துவில் பிரதேசங்களில் பெரும் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.
அதேபோன்று மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து வருகின்றனர்.
கல்முனையின் சிரேஸ்ட அரசியல் முக்கியஸ்தராகப் பார்க்கப்படும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் இம்முறை போட்டியிடுவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் கட்சியின் முரண்பாடு காரணமாக மாவட்ட தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்தோடு கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன் தெளிவான கொள்கையில்லாமல் கட்சியை வியாபார ஸ்தாபனமாகக் கொண்டு செல்லும் செயற்பாட்டினாலும் ஆதரவாளர்கள் பலரும் அக்கட்சியிலிருந்து தூரமாகுவதைப் பார்க்கின்றோம்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் தலைமையில் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் இணைந்து வருவதும் அக்கட்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி எக்காரணம் கொண்டும் கிடைக்காது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
இத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் கட்சியும். அதன் தலைவர் ரிசாட்டும் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்தாலும் அது பெரும் நஸ்டமாக மாறவுள்ளது. இதன் காரணமாக மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

No comments: