(எஸ்.எம்.அறூஸ்)
கிராம மட்டத்தில் முக்கிய அமைப்பாகக் காணப்படும் சனசமூக நிலையங்களின் வெற்றிகரமான எதிர்கால செயற்பாட்டினை ஒழங்குபடுத்துவதற்காக புதிய துணைவிதியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் அண்மையில் அம்பாரையில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்காக நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கு அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதான வளவாளராக திருகோணமலை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏஸ் .பார்த்தீபன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிரிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.
கடந்த 1977ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சனசமூக நிலையங்களின் யாப்பு துணைவிதிகள் இன்றுவரை மாற்றப்படாமல் இருப்பதால் கிராம மட்டத்தில் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளையும், உதவி ஒத்துழைப்புகளையும் சரியான முறையில் செய்ய முடியாத நிலைக்கு சனசமூக நிலையங்களும், அதனுடன் தொடர்பான உத்தியோகத்தர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்த வகையில் பல்வேறு தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கி புதிய யாப்பினை உருவாக்குவதற்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களம் கிறிசலிஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: