Responsive Advertisement 2

பொத்துவில் கொட்டுக்கல்லில் மீனவ இறங்குதுறை திறந்து வைப்பு

 


(எஸ்.எம்.அறூஸ்)

பொத்துவில் கொட்டுக்கல் மீனவர்களின் நலன் கருதி மாவட்ட மீனவ பேரவை மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முன்னெடுப்பில் புணரமைக்கப்பட்ட மீனவ இறங்குதுறை இன்று திறந்து வைக்கப்பட்டது.

 மாவட்ட மீனவ பேரவையின் இணைப்பாளர் கே.இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசீத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக, பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஜே.மாபீர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார, எச்.ஐ.நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் மஞ்சுல, பிரதேச சபை உறுப்பினர் ஏ.டபிள்யூ.எம்.றில்வான், கடற்றொழில் பரிசோதகர் எம்.டி.எம்.ஜகுபர் உள்ளிட்ட திட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், மீனவ அமைப்பின் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுமார் 13 இலட்சம் ரூபாய் நிதியில் புணரமைக்கப்பட்ட மீனவ இறங்குதுறை மூலம் மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய வந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதுடன், உல்லாசப்பயணத்துறைக்கும் பயன்படும் வகையிலும் இவ் இறங்குதுறை காணப்படுகின்றது.

புணரமைக்கப்பட்ட இறங்குதுறையை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித்  மற்றும்  அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டதுடன் இறங்குறை வளாகத்தில் பயன்தரும் தென்னை மரங்களும் நடப்பட்டமை விசேட அம்சமாகும்.

மீனவர்கள் தங்களது மீன்பிடிப்படகுகளை சரியான முறையில் தரித்து வைப்பதற்கும், அதனைப் பராமரிப்பதற்கும் போதுமான வசதிகள் இன்றி சிரமப்பட்டு வந்த நிலையில் மாவட்ட மீனவ பேரவை மற்றும்   தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்  இதனைக் கவனத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நிதி அமைப்புகளின் ஊடாக நிதியினைப் பெற்று இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

பெரும்பாலான மீனவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகள் பலரும் உரையாற்றினர்.  மாவட்;ட மீனவ பேரவை ஊடாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் மீனவர்களினதும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களினதும் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக பல வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
























பொத்துவில் கொட்டுக்கல்லில் மீனவ இறங்குதுறை திறந்து வைப்பு பொத்துவில் கொட்டுக்கல்லில் மீனவ இறங்குதுறை திறந்து வைப்பு Reviewed by Admin on October 03, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3