Responsive Advertisement 2

பெண்களை மையமாக்கி நடக்கும் அலங்கோலங்கள் வடக்கில்!!



வடக்கு, கிழக்கிலுள்ள வறிய மக்கள் நுண்கடன் சுமையிலிருந்து எங்களைச் காப்பாற்றுங்கள் என கதறியழும் நிலை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது என இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர் .ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார்.


தெரிவு செய்யப்பட்ட தன்னார்வ அமைப்புக்களின் சமூக மட்டப் பிரதிநிதிகளுக்கு நுண்கடன் நிதிவழங்கலின்போது ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள், நிதிசார் முகாமைத்துவம் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் பற்றிய விழிப்புணர்வுக் கலந்துரையாடல் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கக் கட்டிடத்தில் இன்று இடம்பெற்றது.


குறித்த கலந்துரையாடலில் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,


சமீபத்தில் மத்திய வங்கி ஆளுநர் வடபகுதிக்குச் சென்றபோது அங்கு நுண்கடன் சுமையால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மத்திய வங்கி ஆளுநரைச் சூழ்ந்து கொண்டு நுண்கடன் சுமையிலிருந்து எங்களைக் காப்பாற்றி வாழ்வளியுங்கள் என மன்றாட்டமாகக் கேட்டு கதறியழுதுள்ளார்கள்.


இது ஒரு பரிதாபகரமானதும் அதேவேளை சீர் திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலமையுமாகும்.


வடக்கு. கிழக்கு மாகாணங்களிலேதான் இந்த வறுமை, நுண்கடன் தொல்லை, பாலியல் துஷ்பிரயோகம், போலி நாணயத் தாள்களின் புழக்கம் என்பன உண்டு.


பெண்களை மையமாகக் கொண்டுதான் இத்தகைய சமூக விரோதச் செயல்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக இத்தகைய நிலைமைகளினால் மிக மோசமாக மீள முடியாதளவு பாதிக்கப்படுபவர்கள் பெண்களாவே உள்ளார்கள் என்பது கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.


ஒரு பெண் நிதி வழங்கும் 7 நிறுவனங்களிடமிருந்து 45 ஆயிரம் ரூபா நுண்கடன் பணம் பெற்றிருக்கின்றார். ஓலைக் கொட்டிலில் வாழும் அந்தக் குடும்பப் பெண் நிதி அறவீட்டு நிறுவனத்திடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிணற்றுக்குள் இறங்கி பல மணி நேரம் இறுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தவிர்த்திருக்கப்பட வேண்டியது.


இரண்டு பிள்ளைகளைக் கொண்ட அந்தத் தாய் கடன் பெற்றதில் அந்தக் குடும்பம் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணவில்லை.


கடைசியாக கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்பது துரதிஷ்டமானது. தொடர்ச்சியாக இதுபோன்ற சமூக அழிவுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.


நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய 4 மாவட்டங்கள் முதல் நான்கு இடங்களைப் பெற்று மிகக் கொடிய வறுமையான மாவட்டங்களாக உள்ளன.


‪கூடுதலான சீர்கேடுகளும் பின்னடைவுகளும் வடக்கு, கிழக்கிலே உள்ள மாவட்டங்களிலேதான் நடக்கின்றன.


கடன்கள் மீளச் செலுத்தவில்லை என்ற காரணத்தினால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என்ற விபரமும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பபெற்றுள்ளது.


அதன்பின்னர் எந்தவொரு வங்கியாளரும் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று கடன் அறவீடுகளில் ஈடுபடக் கூடாது என மத்திய வங்கி அறிவித்தல் வெளியிட்டது.


இவ்வாறு எத்தகைய பாதிப்புக்கள் இடம்பெற்றாலும் அதற்கு முழுமுதற் காரணமாக நாம்தான் இருக்கின்றோம். எனவே, குறிப்பாக வறிய மக்கள் அழிவுகளைத் தவிர்த்து தமது அபிவிருத்தி தொடர்பாக விழிப்படைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.




பெண்களை மையமாக்கி நடக்கும் அலங்கோலங்கள் வடக்கில்!! பெண்களை மையமாக்கி நடக்கும் அலங்கோலங்கள் வடக்கில்!! Reviewed by Admin on October 19, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3