Responsive Advertisement 2

டிசம்பர் 12 ல் ஜீ.சீ.ஈ. (சா/த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பயனுள்ள ஆலோசனைகள்



கல்வியின் நோக்கம் பரீட்சைகள் அல்ல. கல்வியை அளவிடவே பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. மாணவர்கள் பரீட்சைகளை வெற்றி கொள்ளவே வேண்டும். இலங்கையின் பொதுக் கல்வி வரலாற்றிலே ஜீ.சீ.ஈ. (சா/த) பரீட்சை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஒரு மாணவனை அடுத்த துறைகளை நோக்கி நகர்த்தும் சக்தி பொதுவாக இப் பரீட்சைக்கே உள்ளது.






பரீட்சைக்குத் தயாராகுதல்







பொதுவாக மாணவர்கள் 11 வருடம் பாடசாலையிலே கற்றுள்ளதாலும், பல வருடங்களாக பரீட்சைகளுக்கு முகங் கொடுத்துள்ள அனுபவம் (experience) உள்ளதாலும் அவர்களுக்கு இந்தப் பொதுப் பரீட்சை பெரியதொரு விடயமாக இருக்காது. ஒரேயொரு வித்தியாசம் அனுமதி அட்டைகள் (Admission Card), அறிமுகமற்ற வேறு மேற்பார்வை அதிகாரிகள் பரீட்சை மண்டபத்திலே இருப்பார்கள். அது பெரிய விடயமல்ல. அவர்களும் வேறு பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களே. என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அவர்களைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை.





விடயங்களில் (Subjects) பூரண அறிவை நாம் பெற்றுக் கொள்வதோடு, இறுதித் தறுவாயில் பரீட்சை நோக்கியதாகவும் (Exam Centered), அதன் கடந்த கால வினாக்களையும் அதிகமாக சந்திக்க வேண்டும், சுயமாக செய்து பார்க்க வேண்டும். ஒரே வினாவுக்கு புள்ளித் திட்டத்திலுள்ள விடை எதுவெனத் தேடிப் பார்க்க வேண்டும். ஒரே வினா பல வருடங்கள் கேட்கப்பட்டாலும், புள்ளித் திட்டத்திலே (Marks Scheme) அதற்கு அளிக்கப்பட்ட விடை வேறு வேறாக இருக்கும் என்ற உண்மையை விளங்க வேண்டும். அடுத்த யாரையுமே நம்பி இருக்காது சுயமாக பயிற்சியில் இறங்க வேண்டும். இலக்கை அடையும் வரை தொடர்ந்து முயற்சியிலும், பயிற்சியிலும் ஈடுபட வேண்டும்.






பரீட்சை நேர அட்டவணை








பரீட்சைக்குரிய நேரசூசி கிடைத்ததும் அதை நன்றாக வாசித்துப் பார்ப்பதோடு, பெரிதாக பிரதி எடுத்து கண்ணில் படக்கூடியதாக ஒட்டி விட வேண்டும். பாடங்கள் முடிவுறும் போது சரி அடையாளமிடுவது நல்லது. தான் விண்ணப்பம் செய்யாத பாடம் நமது நேரசூசியிலே இணைக்கப்பட்டுள்ளதா என்றும், தனக்குரிய பாடம் விடுபட்டுள்ளதா என்றும் பரிசீலித்துப் பார்த்து உரியவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.








பரீட்சைக்கு சமூகமளித்தல்








தினமும் காலை 8.30 க்கு பரீட்சை ஆரம்பிக்கும். 8.00 மணிக்கே மண்டபத்துக்குள் நுளைத்து தமது சுட்டெண் இடப்பட்டுள்ள மேசையை அடையாளம் கண்டு கொள்ளுதல் நல்லது. எல்லா நாட்களும் ஒரே இடத்திலிருக்காது, எமது மேசை மாற்றப்படும். அதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.








பரீட்சை மண்டப ஒழுக்கம்








பரீட்சை மண்டபம் இதுவரை நாம் பாடசாலையிலே எழுதிய அதே போன்றது தான். கதைக்க முடியாது. தனது அனுமதி அட்டையையும், அடையாளத்தை உறுதிப்படுத்தும் அட்டையையும் தம்மோடு கொண்டு செல்ல வேண்டும். எதையும் பார்த்து எழுத முடியாது. ஸ்மாட் மணிக்கூடு, ஸ்மாட் போண், கைபேசி, ஏனைய இலத்திரனியல் கருவிகள் எதுவுமே கொண்டு செல்ல முடியாது.




தேவையான பேனைகளையும், எழுது கருவிகளைத் தான் எடுத்துச் செல்ல முடியும். அனுமதிக்கப் பட்ட தேவையானதைப் பெறவும், கேட்கவும் நமது மேசை மீது மெதுவாகத் தட்ட முடியும். மண்டப ஒழுங்கை மீற முடியாது. சீருடையை அணிந்து செல்வது நல்லது. MCQ விடைகளின் 'தர' அடையாளமிடும் போது உரிய பெட்டியைத் தாண்டாது இட வேண்டும்.






பொதுவான ஆலோசனைகள்








நடைபெற்ற ஒரு பாடத்தைப் பற்றியோ, அதில் ஏற்பட்ட தவறுகளைப் பற்றியோ பரீட்சைக் காலத்துக்குள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. போனதை விட்டு விட்டு வருவதை எதிர் கொள்ளத் தயாராவதே சிறந்தது. பல்தேர்வு வினாக்களில் (MCQ - Multiple Choice Questions) எல்லா வினாவுக்கும் விடையளிக்க வேண்டும். எந்த வினாவையும் செய்யாமல் விட்டுவிடல் கூடாது. விடை தெரியாத வினாவுக்கும் ஏதாவது விடையைத் தெரிந்து பதிலளிப்பதே சிறந்தது. வினாக்களைத் தெளிவாக வாசித்த பின்னரே விடை எழுத ஆரம்பித்தல். வினாவை விளங்காமல் விடை அளிக்கத் தயாராகுதல் கூடாது. விடிய விடிய கண் விழித்திருந்து கற்று வருவதை தவிர்க்கவும்.








புள்ளிகளை அதிகரிக்கும் உத்திகள்








நேர்த்தியான கை எழுத்து, புதிய பேனையைப் பாவிக்காது, எழுத்துப் பழக்கப்பட்ட பேனைகைளப் பாவித்தல். விடைத் தாளைச் சிறப்பாக கசக்காது, மடிக்காது கையாளல், விடை எழுதப்பட்ட வினாக்களுக்கு வட்டமிட்டுக் காட்டுதல். (திருத்துனரின் மனதைக் கவரலாம்), விடைகளைப் புதிய பக்கத்திலே ஆரம்பிக்க வேண்டும். அதிகமாகத் தவறான விடைகளை எழுதுவதைத் தவிர்த்தல் நல்லது. அது திருத்துனர் எம்மீது கோபம் கொள்ளச் செய்யும். விடைகளை எழுதும் போது மிவும் நன்றாகத் தெரிந்த வினாவை முதலிலே செய்து கொள்வதுடன், அதே ஒழுங்கில் ஏனைய வினாக்களையும் அணுகுதல் நல்லதே. தெரியாத வினாவை அதிக நேரம் செலவிட்டுக் கொள்ளாமல் அதை 'டிக்' பண்ணி வைத்துவிட்டுப் பின்னர் செய்தல். நேரத்தை வீண்டிக்கும் கருமங்களில் ஈடுபடாமை.




பரீட்சை என்றதும் மிகவும் நிதானமாக இருத்தல் முக்கியமாகும். தெரிவு செய்யும் விடை ஒன்றாகவும், புள்ளடி இடும் விடை வேறாகவும் இருந்தால் புள்ளிகளைப் பெற முடியாது போகலாம். எனவே அவதானம் தேவை. பரீட்சை பற்றிய பயம் (Exam Phobia) இருக்கப்படாது.


எல்லோருமே வெற்றி பெற வாழ்த்தி விடை பெறுகிறேன்.




ஏ.எல். நௌபீர்




BA, Postgraduate Dip. In Applied Sociology, Dip. In. Eng, Dip. In. Youth in Deve. Work







டிசம்பர் 12 ல் ஜீ.சீ.ஈ. (சா/த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பயனுள்ள ஆலோசனைகள் டிசம்பர் 12 ல் ஜீ.சீ.ஈ. (சா/த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பயனுள்ள ஆலோசனைகள் Reviewed by Admin on December 09, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3