Responsive Advertisement 2

அட்டாளைச்சேனை புறத்தோட்டம் வாய்க்கால் கட்டு வீதி திறந்து வைக்கப்பட்டது.

 



கிறிசலிஸ் நிறுவனத்தின் உதவியுடன் அட்டாளைச்சேனை புறத்தோட்டம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதை புணரமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

புறத்தோட்டம் சனசமூக நிலையத்தின் தலைவர் யூ.எல்.சிப்லியா அறூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி, அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முசாபிர், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ்,கிறிசலிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலிசா குணசேன, தொடர்பாடல் முகாமையாளர் தேசமன், கிழக்கு மாகாண நிழ்ச்சித்திட்ட முகாமையாளர் யூ.எல்.சம்சுதீன், தொழிநுட்ப ஆலோசகர் விமன்சா சொய்சா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வருகை தந்த திட்டப்பணிப்பாளருக்கும் அதிதிகளுக்கும் சனசமூக நிலையத்தின் தலைவர் யூ.எல்.சிப்லியா அறூஸ் தலைமையில் கிராம மக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாதை புணரமைப்பிற்கான பதாதையினை அதிதிகள் திரை நீக்கம் செய்ததுடன் அதன் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் அதிதிகள் பலரும் உரையாற்றினர். இறுதியாக இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலில் கிறிசலிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலிசா குணசேன ஈடுபட்டார்.
இங்கு புறத்தோட்டம் சனசமூக நிலைய நிர்வாக சபை உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்ததுடன் சனசமூக நிலையத்தின் அபிவிருத்திக்காக உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.
அத்தோடு,சமூக,அரசியல்,கல்வி,கலாசார நடவடிக்கைகளில் பெண்களின் ஈடுபாடு தொடர்பில் கருத்துக்கள் கேட்டறிந்து கொள்ளப்பட்டதுடன் பெண் தலைமைதாங்கும் ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதற்கான வழி வகைகள் குறித்தும் இங்கு கருத்துக்கள் பறிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்போடு உள்ளுர் ஆளுகையில் பெண்களின் வகிபாகம் எனும் மூன்று வருட செயற்திட்டத்தை கிறிசலிஸ் நிறுவனம் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது.
கிறிசலிஸ் நிறுவனம் செயற்படுத்தி வருகின்ற ஆளுமை விருத்தி செயலமர்வுகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக பல விடயங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக தாம் மாறியுள்ளதாகவும் இங்கு பெண்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
புறத்தோட்டம் சனசமூக நிலையத்தின் காரியாலயத்தை புணரமைத்துத் தருமாறும், இன நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான செயற்திட்டத்தை கிறிசலிஸ் நிறுவனம் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் சனசமூக நிலையத்தின் பொருளாளரும்,சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.
மக்கள் பங்கேற்புடனான நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட வாய்க்கால்கட்டு பாாதைக்கான புணரமைப்பு வேலைத்திட்டத்தை புறத்தோட்டம் சனசமூக நிலையம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின்மேற்பார்வையில் மேற்கொண்டிருந்தது.
இப்பாதை வேலைத்திட்டத்திற்காக சுமார் 16 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டிருந்தது.
கிறிசலிஸ் நிறுவனத்தின் செயற்திட்டத்தில் அம்பாரை மாவட்டத்தில் மூன்று பிரதேச சபை பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு 15 சனசமூக நிலையங்கள் ஊடாக இவ்வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






























அட்டாளைச்சேனை புறத்தோட்டம் வாய்க்கால் கட்டு வீதி திறந்து வைக்கப்பட்டது. அட்டாளைச்சேனை புறத்தோட்டம் வாய்க்கால் கட்டு வீதி திறந்து வைக்கப்பட்டது. Reviewed by Admin on October 23, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3