Responsive Advertisement 2

சிந்துஜா மரணம் தொடர்பில் வைத்தியர் பணியிடை நீக்கம்

 


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான  இளம் குடும்ப பெண் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வைத்தியர் பணியிடை நீக்கம்  செய்யப் பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.

அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண் அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர் அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏலவே நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு பணியிடை நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த  வைத்தியர்  சுகயீன விடுமுறையில் சென்றுள்ளார்.

குறித்த வைத்தியருக்கான பணியிடை நீக்கம் தொடர்பாக கடிதம் நேற்றைய தினம் புதன்கிழமை (21) தனக்கு கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் சுகயீன விடுமுறையில் சென்றுள்ளமையினால் அவருக்கான பணியிடை நீக்கம் தொடர்பான கடிதம் அவரிடம் சமர்ப்பிக்கவில்லை.

எனினும் குறித்த கடிதம் அவருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, இதன் பிரதி பதிவுத் தபால் மூலம் குறித்த வைத்தியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா மேலும் தெரிவித்தார்.



-மன்னார் நிருபர் லெம்பட்-

சிந்துஜா மரணம் தொடர்பில் வைத்தியர் பணியிடை நீக்கம் சிந்துஜா மரணம் தொடர்பில் வைத்தியர் பணியிடை நீக்கம் Reviewed by Admin on August 22, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3