Responsive Advertisement 2

அடுத்த ஆண்டு முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்

 


இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடந்த 4 வருடங்களாக இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க முடியவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டிருப்பதால் தற்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும், அதனால் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

“செழிப்பான எதிர்காலத்திற்கான பயணம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் ஒருபோதும் மறக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நிதிப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் இவ்வருடம் நிதி ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசிரியர் சேவையில் புதியவர்களை இணைத்துக் கொள்வதற்கு அடுத்த வருடம் மேலதிக நிதியை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுயதொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு நிவாரணத்துடன் கூடிய கடன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் இணைந்து இளைஞர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இளைஞர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு சாதகமான பதில்களை வழங்கிய ஜனாதிபதி தகவல்களை கேட்டறிந்துகொண்டதோடு சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இளைஞரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்தில் அனுபவத்தைப் பொருட்படுத்தாமல் தனியார் துறை தொழில் வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யுமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அடுத்த ஆண்டு முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் அடுத்த ஆண்டு முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் Reviewed by Admin on August 04, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3