Responsive Advertisement 2

கிழக்கு ஆளுநரின் செயற்பாடு தொடர்பில் மக்கள் அதிருப்தி

 


கிழக்கு ஆளுநரின் செயற்பாடு தொடர்பில் மக்கள் அதிருப்தி


(எஸ்.எம்.அறூஸ்)

அரச நிதி மோசடி, ஊழல், அதிகார துஸ்பிரயோகம் செய்த பிரதேச சபைகளின் செயலாளர்களை இடமாற்றம் செய்து விசாரணை மேற்கொள்ள கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

குறிப்பாக அம்பாரை மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் செயலாளர்களை இடமாற்றும் விடயம் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருவதாகவும், ஆளுநர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் நழுவல் போக்கில் செற்படுவதே இதற்குக் காரணம் என்றும் மாகாண உயர் அதிகாரி ஒருவர் இன்று காலை என்னிடம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட போதிலும் அம்பாரை மாவட்டத்தில் அவ்இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் தொடரந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதிலும் குறிப்பாக அரச நிதி மோசடி, ஊழல், அதிகார துஸ்பிரயோகம் செய்த பிரதேச சபைகளின் செயலாளர்களை இடமாற்றம் செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு பல அமைப்புகளும், மக்கள் பிரதிநிதிகளும் பல தடவைகள் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதுடன் மாகாண நிர்வாகத்தின் மீது முழுமையான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர்.

தமிழ் மொழி பேசக்கூடிய ஆளுநர் கிழக்கு மாகாணத்திற்குக் கிடைத்திருப்பதால் தமது பிரச்சினைகளை கதைத்து இலகுவில்  தீர்த்துக் கொள்ளலாம் என பலரும் நம்பியிருந்த நிலையில் எதுவித முன்னேற்றமும் இதுவரை கிடைக்கவில்லை.

கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியகச் செயலாளரின் சில நடவடிக்கைகள் எமக்கு திருப்தியாக இருந்தாலும் மாகாண உயர் அதிகாரிகள் ஆளுநரின் கடிதங்களுக்கு காத்திரமான நடவடிக்கை எடுக்காமல் அசட்டையாக இருந்து வருகின்றனர்.

இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன், மக்களின் காத்திரமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்ட வடமாகாண ஆளுநர் அவர்கள் அதிரடி நடவடிக்கையினை எடுத்து வடமாகாண உள்ளுராட்சி திணைக்கள உயர் அதிகாரிகள் பலரையும் உடனடியாக இடமாற்றியிருந்தார். இவ்விடயம் ஊடகங்களில் கொட்டை எழுத்துக்கள் வந்திருந்ததையும் ஞாபகப்படுத்துகிறேன்.

எவருடைய அரசியல் பின்புலத்தையும், செல்வாக்கையும் கவனத்தில் கொள்ளாது அதிரடி நடவடிக்கை எடுத்த வடமாகாண ஆளுநரைப் போன்று கிழக்கு மாகாண ஆளுநரும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த காலங்களைப் போன்று ஊழல் மோசடியில்லாத மிகவும் நேர்மையான ஆளுநராக தற்போதை ஆளுநர் இருந்தாலும் நிர்வாக செயற்பாடுகளில் பெரும் குறைபாடுகள் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டுவதுடன் எதிர்காலத்தில் இதனை அவர் நிவர்த்தி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றனர்.
கிழக்கு ஆளுநரின் செயற்பாடு தொடர்பில் மக்கள் அதிருப்தி  கிழக்கு ஆளுநரின் செயற்பாடு தொடர்பில் மக்கள் அதிருப்தி Reviewed by Admin on August 04, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3