Responsive Advertisement 2

தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடிப் போட்டியில் கிழக்கு மாகாணம் சாதனை






(எஸ்.எம்.அறூஸ்)


49வது தேசிய விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான கடற்கரை கபடிப் போட்டிகள் காலி தடல்ல கடற்கரையில் 15ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இப்போட்டியில் கிழக்கு மாகாணம் ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும். பெண்கள் பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்து முன்னிலை பெற்றுக்கொண்டுள்ளது.

ஆண்கள் பிரிவில் முதலாவது அரையிறுதியில் கிழக்கு மாகாணமும்,சப்ரகமுவ மாகாணமும் போட்யிட்டது. இதில் கிழக்கு மாகாண அணி 45 – 24 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வடமத்திய மாகாணமும், தென் மாகாணமும் போட்டியிட்டது. இதில் 43 – 40 புள்ளிகள் வித்தியாசத்தில் வடமாகாண அணி வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணமும், வடமத்திய மாகாணமும் இறுதிப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இறுதிப்போட்டியில் கிழக்கு மாகாண அணி வடமத்திய மாகாண அணியை 48 – 40 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டனர். வெள்ளிப்பதக்கத்தை வடமத்திய மாகாண அணி பெற்றுக்கொண்டது.

மூன்றாமிடத்திற்கான போட்டியில் தென் மாகாண அணிக்கும்,சப்ரகமுவ மாகாண அணியும் கலந்து கொண்டது.இதில் தென்மாகாண அணி 37 – 34 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தைப் பெற்றனர்.

கடற்கரை கபடிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் மிகச்சிறந்த வீரராக எஸ்.எம்.சபீகான் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு மாகாண கடற்கரை கபடி அணியில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தின் மதீனா விளையாட்டுக்கழக வீரர்கள் இடம்பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

இதேவேளை பெண்கள் பிரிவில் ஊவா மாகாண அணிக்கும்,கிழக்கு மாகாண அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் ஊவா மாகாண அணி 39 – 37 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்தனர். வெள்ளிப்பதக்கத்தை கிழக்கு மாகாண அணி பெற்றுக்கொண்டது. வெண்கலப்பதக்கத்தை சப்ரகமுவ மாகாண அணி பெற்றுக்கொண்டது.

அந்த வகையில் கிழக்கு மாகாணம் ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கத்தையும், பெண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். 

இந்த வெற்றியில் பங்கு கொண்ட வீர,வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.





தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடிப் போட்டியில் கிழக்கு மாகாணம் சாதனை  தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடிப் போட்டியில் கிழக்கு மாகாணம் சாதனை Reviewed by Admin on August 17, 2025 Rating: 5

No comments:

Responsive Advertisement 3