வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு இன்று மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) மத்திய குழு உறுப்பினர் க.அருந்தவராசா, முன்னாள் நகரசபை உறுப்பினர் சிவகுமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பரமேஸ்வரன், தர்மலிங்கம், மாவட்ட பிரஜைகள் குழுவின் ஸ்தாபகத் தலைவர் தேவராசா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது ஈபிஆர்எல்எப் மத்திய குழு உறுப்பினர் க.அருந்தவராசா கருத்து தெரிவித்த போது,
தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைக்களுக்காக கடந்த 70 வருடங்களாக ஜனநாயக மற்றும் அகிம்சை ரீதியிலும் பின்னர் ஆயுத ரீதியிலும் போராடி கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் ஜனநாயக ரீதியாக எங்களுடைய உரிமைகளுக்காக போராடி வருகின்றோம். எங்களுடைய அடிப்படை உரிமைகள் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்திய தேர்தல் விஞ்ஞாபனத்தின் கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படாத காரணத்தினால் அவற்றை நிறைவேற்ற வேண்டியும், தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க வேண்டியும், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். சமஸ்டி முறையிலான சுயாட்சி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அதிகார பகரிர்வின் மூலம் எங்களுடைய ஆட்சி முறையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாங்கள் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வருகின்றோம். அதன் அங்கமாக இருக்கக் கூடிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி வவுனியாவில் இருக்கக் கூடிய உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
எங்களுடைய மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாம் தொடர்ந்து போராடுவோம் என்பதுடன் உதசூரியன் சின்னத்தில் நாம் போட்டியிடுகின்றோம். இதுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கால சின்னமாக விளங்கியது என்பதுடன் தமிழ் மக்களுக்கான ஒரு மாற்றத்திற்காக நாம் இதில் போட்டியிடுகின்றோம். மக்கள் அதனை வென்றெடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது
Reviewed by Admin
on
December 16, 2017
Rating:
No comments: