Responsive Advertisement 2

பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு பிரதமர் அறிவுரை



இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு கடந்த காலங்களில் இருந்த அங்கீகாரம் தற்சமயம் குறைந்திருப்பதாகவும் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பித்து சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது பல்கலைக்கழக உபவேந்தர்களின் பொறுப்பாகும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


பல்கலைக்கழங்களில் காணப்படும் நெருக்கடிகள் மற்றும் எதிர்கால உயர்கல்வி திட்டமிடல்கள் தொடர்பில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் இலங்கை பல்கலைக்கழங்களை சர்வதேச மட்டத்தில் பிரபலப்படுத்த மூலோபாய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் பல்கலைக்கழங்களில் கட்டங்களை நிர்மாணிப்பதற்கு முக்கியத்துவம் வழங்குவதை விட உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் உபவேந்தர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.


மேலும் பகிடிவதைகளை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் தேவை ஏற்படுமாயின் புதிய ஊழியர்களை இணைத்தாவது பகிடிவதைக்கு உள்ளாகாத வகையில் மாணவர்களுக்கு கல்வி கற்கக்கூடிய சூழலை உருவாக்குமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களை பகிஷ்கரிப்பதை கைவிட்டு கல்வி மீது கவனம் செலுத்துவது அவசியம் எனவும் பட்டப் பின்படிப்பு, ஆய்வு நடவடிக்கைகள் என்பனவற்றை விரிவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கூட்டு கற்கை பாடநெறிகளை நடைமுறைப்படுத்துமாறும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.


குறித்த கலந்துரையாடலில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக உபவேந்தர்கள், திறைசேரியின் அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு பிரதமர் அறிவுரை பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு பிரதமர் அறிவுரை Reviewed by Admin on December 15, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3