ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை உருவாக்கக் கூடிய இந்நகர்வுக்கு எதிராக பலஸ்தீனர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அரபு நாடுகள், பிரான்ஸ் உட்பட சர்வதேச நாடுகள் இந்நகர்வுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் ட்ரம்ப் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அரபு லீக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜெருசலத்தை இஸ்ரேலுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை எதிர்த்து பலஸ்தீனத்தில் மூன்று நாள் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்துக்கு மாற்றுவதன் மூலம் அங்கு பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்து பலஸ்தீனர்களை முழுமையாக வெளியேற்றும் பின்னணியுடன் இஸ்ரேலின் தலை நகராக ஜெரூசலத்தை அங்கீகரித்துள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்கா இதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், இதன் அடிப்படையில் இரு தரப்பினரும் உடன்பட்டால் இரு தேச அடிப்படையிலான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா உதவும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை டெல் அவிவிலிருந்து அமெரிக்காவின் தூதரகமும் ஜெரூசலத்துக்கு மாற்றப்படுவதோடு ஏனைய நாடுகளையும் அமெரிக்கா ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்துள்ள அமெரிக்காவின் முடிவுக்கு சவூதி அரேபியா உத்தியோகபூர்வ கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
முன்னராக ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடிய மன்னர் சல்மான் இவ்வாறான ஒரு முடிவை பல முறை மீள் பரிசீலனைக்குட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், அமெரிக்காவின் திட்டப்படி அதற்கான அறிவிப்பு நேற்றைய முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை நேரடியாக வரவேற்காது விடினும் தமது அடையாளம் உலக அரங்கில் நிரூபிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெருமிதமடைந்துள்ளார்.
ஜெருசலத்தை இஸ்ரேலின் தலை நகராக அறிவித்திருக்கும் டொனால்ட் ட்ரம்பின் முடிவு தொடர்பில் அமெரிக்க தூதரகம் ஊடாக அதிருப்தி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில். இந்நிலையில் இவ்வாறு கடிதம் ஒன்றை அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், இம் முடிவு பலஸ்தீனத்தில் பாரிய பின் விளைவுகளை உருவாக்கும் என எடுத்துக் கூறி அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் ட்ரம்பினால் மத்திய கிழக்கில் உருவாகியுள்ள புதிய சர்ச்சையினால் 50க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் காயமுற்றுள்ளனர்.
இஸ்ரேலின் தலை நகராக ஜெருசலத்தை அங்கீகரித்துள்ளதன் மூலம் பிராந்தியத்தில் புதிய சிக்கலை உருவாக்கியுள்ள டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை இஸ்ரேல் வரவேற்றுள்ளதுடன் ஏனைய நாடுகளும் ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை, ட்ரம்ப் யுத்த பிரகடனம் செய்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளதுடன் காஸாவில் பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். இஸ்ரேலிய சிப்பாய்களின் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் குண்டுத் தாக்குதல்களிலேயே இவ்வாறு பலஸ்தீனர்கள் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்பினால் உருவாக்கப்பட்டுள்ள ஜெரூசலம் விவகாரம் தொடர்பில் அவசரமாக கூடி ஆராய்ந்துள்ளது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில். சுவீடன் உட்பட பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவின் தனிப்பட்ட பிரகடனத்தை மறுதலித்துள்ளதுடன் கண்டனமும் வெளியிட்டுள்ளன. எனினும், தாம் சரியான முடிவையே அறிவித்துள்ளதாக அமெரிக்க சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மூன்றாவது நாளாகவும் பலஸ்தீன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் ஜெரூசலத்தை இஸ்ரேலுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதன் மூலம் பலஸ்தீன மக்களின் உரிமைகளை அமெரிக்கா பறித்துவிட்டதாக பலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய வரைபடங்களில் மத்தியதரைக் கடலுக்கும் ஜோர்டான் ஆற்றுக்கும் இடையில் காணப்படும் காஸா, இஸ்ரேல், மேற்குக்கரை என்கிற மூன்று பகுதிகளும் ஒரு காலத்தில் ‘பலஸ்தீன்’ என்கிற ஒரே பகுதியாக அறியப்பட்டன.
மனித வரலாற்றில் அநேகமான நபிமார்களைத் தந்த பெருமை பலஸ்தீனுக்கே உரித்தானது. அது முஹம்மத்(ஸல்) அவர்கள் இஸ்ரா மேற்கொண்ட மகோன்னத பூமி; ஈஸா(அலை) பிறந்த பூமி; முதல் கிப்லா, மூன்றாவது புனிதஸ்தலம். பலஸ்தீன் பூமி வெறும் ஒரு நிலமல்ல. அது கொள்கை வளர்ந்த பூமி. நபிமார்கள் பலரின் போராட்ட நிலம். முஸ்லிம்களது முதலாவது கிப்லா போலவே மூன்றாவது புனித பூமியும் கூட. அந்த புனித பூமி மிஃராஜ் நிகழ்வின் போது அல்லாஹ்வினால் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உமர் (ரழி) காலத்தில் அது முஸ்லிம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தொடர்ந்து கிறிஸ்தவர்கள் அந்த புனித பூமியை கைப்பற்றினார்கள். ஆனால் முஸ்லிம்கள் அதற்காக போராடி ஸலாஹுத்தீன் அய்யூபியின் தலைமையில் அதனை மீட்டெடுத்தார்கள்.
அல்லாஹ்வால் இறைதூர் (ஸல்) அவர்களுக்கு கையளிக்கப்பட்ட அந்த உயர்ந்த புனித பூமியை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். அதனை மீட்டெடுப்பது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைக் கடமை. இந்தப் பின்ணயில்தான் பலஸ்தீன் போராட்டம் நடைபெறுகின்றது. எனவே இப்போரட்டம் பலஸ்தீனிய மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. அது முழு சர்வதேச முஸ்லிம்களினதும் போராட்டம். அது வெறும் மண்ணுக்கான போரட்டமல்ல. அது எமது கொள்கையின் இருப்புக்கான போராட்டம்.
கி.மு நூற்றாண்டுகளில் இங்கு வாழ்ந்த யூதர்கள் பெரிய அளவில் புலம் பெயர்ந்து சென்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்தனர். யூத வெறுப்பு அரசியல் (Anti Semitism) ஒன்று எழுந்ததை ஒட்டி 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் தமது பூர்வ நிலமான பலஸ்தீனத்திற்குப் புலம் பெயர்வது என முடிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக இங்கு வந்து, அங்கு பல நூறாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த பலஸ்தீனியர்கள் மத்தியில் குடியேறத் தொடங்கினர். தமது வேத வசனங்களைச் சான்று காட்டி, இறைவனால் தங்களுக்கு “வாக்களிக்கப்பட்ட நிலம்” இது என உரிமை கோரினர்.
1882ல் பலஸ்தீனத்திற்குள் இப்படி முதல் யூதக் குடியிருப்பு உருவானது. 1884ல் இதை நியாயப்படுத்தும் நோக்கில் ‘ஸியோனிச’ கோட்பாட்டையும் உருவாக்கினர். இதற்கு முன் பலஸ்தீனத்திற்குள் வாழ்ந்த யூதர்கள் வெறும் 4 சதம் மட்டுமே. (முஸ்லிம்கள் 86 சதம், கிறிஸ்தவர்கள் 9 சதத்திற்கும் மேல்.) தொடர்ந்து இரண்டாம் உலகப் போர், ஹிட்லரின் யூதப் படுகொலைகள் ஆகியவற்றை ஒட்டி பெரிய அளவில் அகதிகளான யூதர்களை ஸியோனிஸ்டுகள் ஐரோப்பாவிற்குள் இடம் பெயராமல், பலஸ்தீனத்திற்குச் செல்ல வற்புறுத்தி அனுப்பி வைத்தனர். முதல் உலகப் போருக்குப் பின் பலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.
முதலில் இக் குடியேற்றத்தை பலஸ்தீனியர்கள் பெரிதாக எடுத்துக் கொள்லாவிட்டாலும் தமக்கென ஒரு நாடு அமைக்கும் நோக்கத்துடன் மேலும் மேலும் யூதக் குடியிருப்புகள் உருவானபோது முரண்பாடுகளும் மோதல்களும், வன்முறைகளும் வெடித்தன.
1947ல் ஐ.நா அவை இதில் தலையிட முடிவு செய்தது. அப்போது அங்கு குடியிருப்பை அமைத்திருந்த யூதர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30 சதம்; அவர்கள் வசமிருந்த நிலம் 7 சதம். எனினும் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த பலஸ்தீனின் 55 சதப் பகுதியில் யூதர்களுக்கென இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க ஐ.நா பரிந்துரைத்தது. மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட யூதர்கள் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டுக் காலம் முடியும்போது சுதந்திர இஸ்ரேலைப் பிரகடனம் செய்தனர். பலஸ்தீனியர்கள் அதை எதிர்த்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை இப்பிரச்சினைக்கு இருநாட்டுத் தீர்வுத் திட்டத்தை (Two Country Solution) முன்வைத்ததுடன் ஜெரூசலம் மூன்று மதத்தவர்களின் புனிதஸ்தலமாக காணப்படுவதால் அதை ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டிலே வைத்துக்கொள்வதற்கும் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான பிரேரணை ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பின்னர் 33 நாடுகள் அதற்கு ஆதரவாகவும் 13 நாடுகள் அதற்கு எதிராகவும் வாக்களித்தன. 10 நாடுகள் இவ்விடயத்தில் மௌனம் காத்தன. இத்தீர்வை யூதர்கள் ஏற்றுக்கொண்டாலும் பலஸ்தீன் உட்பட அரபு நாடுகள் இதனை நிராகரித்தன. எவ்வாறாயினும் 1948ஆம் ஆண்டு யூதர்களுக்காக பலஸ்தீனில் இஸ்ரேல் தேசம் உருவாக்கப்பட்டது. இஸ்ரேலின் முதல் பிரதமராக பென்குரியன் பதவியேற்றார்.
பொறுமை இழந்த அரபு நாடுகள் அனைத்தும் சேர்ந்து 1948ஆம் ஆண்டு இஸ்ரேலை தாக்கின.ஆனால் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. மாறாக பலஸ்தீனின் இன்னும் சில பகுதிகள் இஸ்ரேலுக்குச் சொந்தமாகின. இதற்கு பின்னர் 1952ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் அதிபர் கமால் அப்துன் நஸார் சுயஸ்கால்வாய் பிரச்சினையை மையமாக வைத்து இஸ்ரேலின் மீது போர் தொடுத்தார். இப்போரின் பயனாக காஸா நிலப்பகுதியும் சினாய் பாலைவனமும் இஸ்ரேலின் வசமானது இஸ்ரேல் ஊடகங்கள் சிறு சிறு விடயங்களையும் பூதாகரமாக காட்டி சர்வதேசத்தின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்தது.
1964ல் பல்வேறு பலஸ்தீனிய போராட்டக் குழுக்கள் இணைந்து பலஸ்தீனிய விடுதலை அமைப்பு (PLO) உருவானது. ஜோர்டான், லெபனான் முதலான அரபு நாடுகளைத் தளமாகக் கொண்டு அது இயங்க வேண்டி இருந்தது
யாசிர் அரபாத்தின் தலைமையில் இயங்கிய பலஸ்தீனிய விடுதலை அமைப்பிற்கு காசா, மேற்குக்கரை உள்ளிட்ட பலஸ்தீனியப் பகுதிகளுக்கான முழு அதிகாரத்தையும் வழங்குவதாக அரபு நாடுகளின் குழுமம் (Arab League) 1974ல் அறிவித்தது. ஐ.நா. அவையில் பார்வையாளர் நிலையும் அதற்கு வழங்கப்பட்டது.
லெபனான் மீதான ஆறு மாதப் படையெடுப்புக்குப் பின் பலஸ்தீனிய விடுதலை அமைப்பு (PLO) லெபனானிலிருந்து வெளியேறி துனீசியாவிலிருந்து இயங்கியது. 1988 ல் அது அல்ஜீரியாவிலிருந்து, ஜெருசலேத்தைத் தலைநகராகக் கொண்ட பலஸ்தீனிய நாட்டிற்கான சுதந்திரப் பிரகடனத்தைச் செய்தது
1988 களில் தொடர்ந்த 03 காலகட்ட பலஸ்தீனிய இன்திபாழா எழுச்சி போராட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
1967ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் நடைபெற்ற போரில் மேற்குக் கரை, ஜெரூசலம்,காசாவின் இன்னுமொரு பகுதி இஸ்ரேலின் வசமாகின. ஜெரூசலத்தை இஸ்ரேல் கைப்பற்றிய பிற்பாடு 1970ஆம் ஆண்டிலிருந்து ஜெரூசலத்தில் காணப்படும் முஸ்லிம்களின் புனிதஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு முஸ்லிம்கள் செல்ல இஸ்ரேல் அரசாங்கம் தடை விதித்தது.
ஜெரூசலம் இஸ்ரேல் வசமாகிய பின் மஸ்ஜிதுல் அக்ஸாவை மையப்படுத்தி சாலமன் தேவாயலம் தொடர்பான ஆராய்ச்சிகளை இஸ்ரேல் அரசாங்கம் முன்னெடுக்கின்றது. 1990ஆம் ஆண்டு ஜெரூசலத்தில் சலமன் தேவாலயத்தை கட்டியே தீருவோம் என்ற கோஷம் யூதர்களால் முன்வைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சிகளில் சலமன் தேவாலயம் ஜெரூசலத்தில் காணப்பட்டதற்கான எந்த தொல்பொருள் ஆதாரங்களும் இதுவரை கண்டுபிடிககப்படவில்லை.
1981ஆம் ஆண்டு மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து செல்லும் ஒரு சுரங்கப் பாதை மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. புதைபொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் மஸ்ஜிதுல் அக்ஸாவை சுற்றி இஸ்ரேலிய அரசாங்கம் செய்து வருகின்ற தோண்டல் நடவடிக்கையினால் மஸ்ஜிதுல் அக்ஸா இடிந்துவிலும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1993 ல் ஆஸ்லோவில் முதன்முதலாக பலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினர். காஸா, மேற்குக்கரை இரண்டையும் பாதை (corridor) ஒன்றின் மூலம் இணைத்து நிர்வகிப்பதற்கான “பலஸ்தீனிய தேசிய ஆணையத்திற்கு” (PNA) இஸ்ரேல் ஒப்புதல் அளித்தது. காசா, மேற்குக்கரை ஆகிய பகுதிகளிலிருந்து படைகளை வெளியேற்றிக் கொள்ளவும் உடன்பாடு ஏற்பட்டது. எனினும் இரு பகுதிகளும் இரு பலஸ்தீனிய அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வந்தன. ஹமாசின் கட்டுப்பாட்டில் காஸாவும் ஃபடா வின் கட்டுப்பாட்டில் மேற்குக் கரையும் தற்போது உள்ளன.
அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் பலஸ்தீனியப் பகுதிகளில் குடியேற்றங்களைத் தொடர்ந்து செய்து வந்தது. செய்தும் வருகிறது . அதன். ஒரு பகுதியாய் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றான குத்ஸ் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அங்கு அமெரிக்க தூதரகத்தை இடம்மாற்றுவதற்கான தனது தீர்மானத்தை பிரகடனம் செய்துள்ளார்.
பலஸ்தீன் : உலக முஸ்லிம்களின் ஈமானிய தேசம்
Reviewed by Admin
on
December 09, 2017
Rating:
Reviewed by Admin
on
December 09, 2017
Rating:

No comments: