Responsive Advertisement 2

வடக்கைத் தோற்கடித்து கிழக்கின் அலிகார் மத்திய கல்லூரி வெற்றி

 


வடக்கின் யாழ்.மத்திய கல்லூரியை தோற்கடித்து  கிழக்கின் அலிகார் மத்திய கல்லூரி வெற்றி

 

(எஸ்.எம்.அறூஸ் -விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் ) 

 

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பி குழுவில் இடம்பெறும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான நேற்றைய   போட்டியில் அலிகார் மத்திய கல்லூரி 6 -4 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றது.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்ற நேற்றைய போட்டிக்குரிய ஏற்பாடுகளை அலிகார் மத்திய கல்லூரி மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

 

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டத்தில்  வடக்கில் பலமிக்க அணியாகத் திகழும் வடக்கின் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும்கிழக்கின் சிங்கமாக நுளைந்திருக்கும் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியும்  கலந்து கொண்ட இப்போட்டி மிக மிக விருவிருப்பாக அமைந்திருந்தது.

 

பி குழுவில் இடம்பெறும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இது முதலாவது போட்டியாகவும்ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரிக்கு இது இரண்டாவது போட்டியாகவும் இப்போட்டி இருந்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தின் 20 வயதுக்குட்ட முதலாம் பிரிவில்   முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டு போட்டிகளில் பங்குபற்றிய ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரியின் ஐந்து  வீரா்கள் கழக மட்டப்போட்டிகளில் விளையாடி வருகின்றனர்நேற்றைய போட்டியில் இவ்வீரா்களின் திறமைகள் உச்சக்கட்டத்தில் இருந்தமை பார்க்கக்கூடியதாக இருந்தது.

 

இரண்டு அணிகளும்  மிகச்சிறப்பாக விளையாடினர்.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பலமிக்க அணியாகத் திகழ்ந்தபோதும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அலிகார் மத்திய கல்லூரி வீரா்கள் விளையாடியதுடன் சிறந்த பந்து பறிமாற்றத்தைக் கொண்டிருந்தமை ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றிருந்தது.

 

போட்டி ஆரம்பித்து 9 வது நிமிடத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலாவது கோலினை புகுத்தியது. அந்த கோலினை  எஸ்.ஜோன் ஜெகதீஸன் அடித்தார்.  இதன் மூலம்  1 -0 என்ற கோல் அடிப்படையில் யாழ். மத்திய கல்லூரி முன்னிலை பெற்றது.

 

 போட்டியின் 29 வது நிமிடத்தில் அலிகார் வீரா் உதைத்த பந்தை பெனால்டி எல்லைக்குள் வைத்து  யாழ்.மத்திய கல்லூரி வீரா் கையினால் தட்டி விட்டதனால் அலிகார் மத்திய கல்லூரிக்கு பெனால்டி  வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அலிகார் மத்திய கல்லூரி கோல் ஒன்றைப் போட்டதுஇக் கோலினை எம்.எம்.எம்.முன்ஸிப் அடித்தார்.

 

இதன் மூலம் 1 -1 என்ற கோல்கள் அடிப்படையில் இரு அணிகளும் சமனிலை பெற்றது. போட்டியில் உத்வேகம் அடைந்த  அலிகார் மத்திய கல்லூரி 3 6 நிமிடத்தில் எம்.எஸ்.எம்.மஹ்தி மூலம் இன்னுமொரு கோலினையும் போட்டது. 39 வது நிமிடத்தில் அலிகார் வீரா் எஸ்.எம். அஹமட் தனக்குக் கிடைத்த பந்தை தலையால் தட்டி கோலினை போட்டார். போட்டி தலை கீழாக மாறியது. அலிகார் 3 -1 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை பெற்றது. 

போட்டியின் முதல் பாதி முடிவடைய இன்னும் சில வினாடிகள் இருக்கும்போது  யாழ்.மத்திய கல்லூரி வீரா் வீ.அபிசன்  அடித்த பந்து அலிகார் கோல் காப்பாளரை தாண்டி கோல் கம்பத்திற்குள் சென்று கோலாக மாறியது.

போட்டியின் முதலாவது பாதி ஆட்டம் முடிவுக்கு வரும்போது 3 -2 என்ற கோல்கள் அடிப்படையில் அலிகார் மத்திய கல்லூரி முன்னிலையில் இருந்தது.

போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமானபோது யாழ்.மத்திய கல்லூரி அணி வீரா்கள் மிக வேகமாக எதிரணிப்பக்கம் பந்தை நகர்த்துவதில் குறியாக இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் எல்.ஹரீஸ் 56 வது நிமிடத்திலும், வீ.அபிசன் 61 வது நிமிடத்திலும் இரண்டு கோல்களை அடித்து போட்டியின் போக்கினை மாற்றி 4 -3 என்ற கோல்கள் அடிப்படையில் யாழ்.மத்திய கல்லூரி மீண்டும் முன்னிலை பெற்றது.

இப்போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு தமது ஆட்டத்தின் உக்திகளை மாற்றிக்கொண்டு மிக வேகமாக விளையாடிய அலிகார் மத்திய கல்லூரி அணி வீரா்கள் எம்.எம்.எம்.முன்ஸிப் 73வது நிமிடத்திலும், எம்.ரீ.எம்.சஹி 78வது நமிடத்திலும், ஐ.எம்.தில்ஹாம் 89 வது நிமிடத்திலும் கோல்களை அடித்து 6 -4 என்ற கோல்கள் அடிப்படையில் மீண்டும் முன்னிலை பெற்றனர். இதன்போது அலிகார் மத்திய கல்லூரியின் ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தை வௌிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

 போட்டி முடிவில் 6 - 4  கோல்கள் அடிப்படையில் அலிகார் மத்திய கல்லூரி  வெற்றியையும் பெற்றுக் கொண்டது.

ஏறாவுர் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படும் எஸ்.எச்.அஸ்பஹான் ஆசிரியர் மிகுந்த அர்ப்பணிப்போடு இந்த அணியை பயிற்று வருவதுடன் தேசிய மட்டத்தில் விளையாடும் வாய்ப்பினையும் அலிகார் மத்திய கல்லூரிக்கு பெற்றுக்கொடுத்துள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும்.

இப்போட்டிக்கு பிரதான மத்தியஸ்தராக ஜே.சி.நிமலன் கடமையாற்றியதுடன் உதவி மத்தியஸ்தர்களாக  டி.காந்தன், வீ.எம்.எம்.முஹ்சின் ஆகியோரும் கடமையாற்றினர். 

முதலாம் பிரிவு மட்டத்திலுள்ள  அகில இலங்கை ரீதியாக மொத்தமாக 20 பாடசாலைகள் அணிகள் இச்சுற்றுத் தொடரில் பங்கேற்பதுடன் வடக்கிலிருந்து 4 அணிகளும் கிழக்கிலிருந்து  2 அணிகளும் விளையாடுவது பெரும் சாதனையாக பார்க்கப்படுகின்றது.

 

வடக்கும்கிழக்கும் பங்கேற்ற இளம் சிங்கங்களின்  உதைபந்தாட்ட சமரைப் பார்ப்பதற்காக கூடுதலான ரசிகர்களும்பாடசாலை மாணவர்களும் மைதானத்திற்கு வருகை தந்து தமது ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

அகில இலங்கை ரீதியாக மொத்தமாக விளையாடும் 20 பாடசாலை அணிகளில் 13 பாடசாலைகள் தமிழ்முஸ்லிம் பாட்சாலைகள் என்பது விசேட அம்சமாகும்.

 

வடக்கைத் தோற்கடித்து கிழக்கின் அலிகார் மத்திய கல்லூரி வெற்றி  வடக்கைத் தோற்கடித்து  கிழக்கின் அலிகார் மத்திய கல்லூரி வெற்றி Reviewed by Admin on August 23, 2023 Rating: 5

No comments:

Responsive Advertisement 3