Responsive Advertisement 2

தேர்தல் மைய அரசியலில் இருந்து விடுபட்டு தேச மைய அரசியலை உருவாக்க சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் - முஷாரப் MP




கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முசாரப் எம்.பி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை


தேர்தல் மைய அரசியலில் இருந்து விடுபட்டு தேச மைய அரசியலை உருவாக்க சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் - முஷாரப் MP பாராளுமன்றத்தில் அறைகூவல்


(எஸ்.எம்.அறூஸ்)

தேர்தல் மைய அரசியலில் இருந்து விடுபட்டு தேச மைய அரசியலை உருவாக்க சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். தேர்தல் மைய அரசியல் நாட்டில் நல்ல பல திட்டங்கள் வருவதற்கு தடையாக இருக்கின்றது என்பதை எல்லோரும் புரிந்தாக வேண்டும். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம் எம் முஷாரப் பாராளுமன்றத்தில் அறைகூவல் விடுத்தார்.

தேசிய சபை அமைத்தல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் இவ்வாறு அறைகூவல் விடுத்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற ஒரு நிலை நாட்டை உயர்த்துவதற்கு ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் சுதந்திரத்திற்கு பின்னரான அமர்வுகளிலிருந்து எம்மால் அனுமாணிக்க கூடியதாக இருக்கின்றது

ஆளும் கட்சியாக இருந்தால் எப்போதும் ஆதரிப்பதும் எதிர்க்கட்சியாக இருந்தால் எதைக் கொண்டு வந்தாலும் எதிர்ப்பதும்தான் இன்று இந்த நாட்டின் மிகப்பெரும் சாபம் என நான் கருதுகின்றேன்.

அந்த அடிப்படையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற நிலை நாட்டில் எந்த ஒரு நல்ல விடயத்தையும் செய்ய விடாது. நல்ல சட்டமூலங்களை நிறைவேற்ற விடாது, அரசியலமைப்பு ரீதியாக ஒரு தீர்வு நாட்டில் ஏற்படுவதற்கும் ஒருபோதும்  இடம் தராது. அதேபோன்று கேஸ் ஸ்பீச் போன்ற நல்ல சட்டமூலங்களை உருவாக்கவும் பாராளுமன்றம் இடம் தராது.

எனவே, ஒரு சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாக இருந்தால் அதில்  எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற போது முன்மாதிரியான சட்டங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனூடாக முன்மாதிரியான பொருளாதார திட்டங்கள் ஏற்பட்டு நாடு நல்லதொரு நிலைக்கு செல்லும் என்ற ஒரு எதிர்பார்ப்பு எம்மிடம் இருந்தன.

ஆனால் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் பலவும் இடம் பெற்ற போதிலும் கூட  தேர்தலை மையப்படுத்தியதான போக்கு எமது கட்சி பெரியது நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற போக்குகளின் அடிப்படையில் கட்சி  மோதல்கள், எதிர்கால அரசியல் பற்றிய சிறுபிள்ளைத்தனமான சிந்தனைகள் என்பவற்றினால் சர்வ கட்சி  அரசாங்கம் என்ற மிகப் பெரும் வாய்ப்பினை இந்தப் பாராளுமன்றம் இழந்து நிற்கின்றது.


தேசிய சபை என்ற சொல்லாடல் போலவே சர்வ கட்சி அரசாங்கம்,புதிய தொரு தேர்தல் என்ற மூன்று சொல்லாடல்களும் சமகாலத்தில் அதிகமாக பாவிக்கப்படுகின்றன.

இந்த மூன்று சொற்களும் அதிகமாக பேசப்படுவதற்கானஅடிப்படைக் காரணம் நம் எல்லோருக்கும் தெரியும்.  முன் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்குள் நாடு   தள்ளப்பட்டு இதன் பின்னர் ஏற்பட்ட அறகலயே மக்களுடைய போராட்டம் இதன் விளைவாக பாராளுமன்றத்திற்குள் யார் ஆளுங்கட்சி, யார் எதிர்க்கட்சி என்ற குழப்பம்.

 ஒரே ஒரு பாராளுமன்ற ஆசனத்துடன் பாராளுமன்றத்திற்கு வந்த எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராளுமன்ற பெரும்பான்மை ஊடாக ஜனாதிபதியாக வந்த பல சம்பவங்கள் இடம் பெற்றது.

முன் ஒருபோதும் இல்லாத அரசியல் கள நிலை மாற்றம் காரணமாக மீதமாக இருக்கின்ற காலத்திற்குள் என்ன தீர்வு என்று யோசிக்கின்ற போது சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கின்ற விடயம் சொல்லப்பட்டது, தேசிய சபை பற்றி பேசப்பட்டது, அதே போன்று புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும் அதன் மூலமாக புதியவர்கள் தெரிவு செய்யப்பட்டு நாடு மீளவும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று மூன்று விதமான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

இது தொடர்பாக விரிவாக பேச வேண்டும் என்று நினைக்கின்றேன்.உண்மையாக சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று அமையப்பெற்றிருந்தால் இன்று  இருக்கின்ற பிரச்சினைக்கு மிகச்சிறந்ததொரு தீர்வாக அமைந்திருக்கும்.

 இங்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பேசினார்கள் புதிய தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டும் என்றும் அறக்களை ஆர்ப்பாட்டங்களோடு இந்த அரசு மக்களின் பெரும்பான்மை ஆதரவை இழந்துள்ளது.அதனால் மக்களுடைய ஆதரவைப் பெற்ற ஒரு அரசாங்கத்தினால்தான் தீர்வைப் பெற முடியும் என்ற தொனியில் பேசி வருவதை பார்க்கின்றோம். 

ஒரு சிலர் கூட மக்கள் மத்தியில் பேசுகின்ற போது இன்னும் ஆறு மாதங்களில் அல்லது எட்டு மாதங்களில் தேர்தல் வரப் போகின்றது.நாம் ஆட்சிக்கு வரப் போகின்றோம், அமைச்சர்களாக வருவோம். வந்த பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று பேசி வருகின்றனர்.

ஆட்சியில் இருந்தோம், அமைச்சர்களாக இருந்தோம் என்ன பிரச்சினைகளை இந்த நாட்டிலே தீர்த்திருக்கின்றோம் என்பது மிக முக்கியமான கேள்வியாகும். 

இந்தக் கேள்விக்கு பதில் இல்லாத போது இருக்கின்ற காலத்தை எப்படியேனும் இந்த நாடு அழிந்து போனாலும் பரவாயில்லை என்று ஓரத்தில்  உட்கார்ந்து கொண்டு  இன்னும் ஒரு ஆறு மாதங்களில் எட்டு மாதங்களில் ஒரு குமந்திரனை உருவாக்கி ஒரு தேர்தலுக்குச் சென்று வெற்றி பெற்று அமைச்சர்களாகி இந்த நாட்டின் பிரச்சினையை தீர்ப்போம் என்றால் நாட்டில் உள்ள காணிப் பிரச்சினைகள், முக்கியமான பிரச்சினைகள் இருபது முப்பது வருடங்களாக தேங்கி நிற்காது என்பதை மக்களுக்கு எனது பேச்சின் மூலமாக வலியுறுத்த விரும்புகின்றேன்.

ஒரு தேர்தலை நோக்கிய நகர்வானது வெறுமனே அரசியல் ஆதாயத்திற்கான முயற்சியாக இருக்குமே அல்லாமல் நாட்டின் மீது நேசம் கொண்ட சிந்தனையாக இருக்காது.

 இலங்கையின் மிகப்பெரும் அபத்தங்களில் ஒன்று தேர்தல் மைய அரசியலாகும். இங்கு தேச மைய அரசியல் இல்லாமையாகும்.

ஆட்சிக்கு வருவதற்கு முதல் தேர்தலைப் பற்றி சிந்திப்பது, தேர்தல் காலங்களில் எதையாவது பேசி பாராளுமன்றத்திற்கு வருவது, வந்தால் ஆளும் கட்சியாக இருந்தால் அந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு எப்படியாவது இருந்துவிட்டு நாட்டைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பது.
எதிர்க்கட்சியாக  இருந்தால் எப்படியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சிந்திப்பது.

 எப்போதுமே தேர்தலைப் பற்றிய சிந்திப்பதானது தேர்தல் மைய அரசியல் நாட்டில் நல்ல பல திட்டங்கள் வருவதற்கு தடையாக இருக்கின்றது என்பதை எல்லோரும் புரிந்தாக வேண்டும்.

சர்வ கட்சி அரசாங்கம் என்கின்ற விடயம் தோற்றுப் போய்விட்டது.தேர்தலை நோக்கிய நகர்வுகள் என்பது வெறுமனே ஒரு குறுகிய நோக்கம் கொண்டவை என்பது புலனாக இருக்கின்ற ஒரு சூழலில் இப்போது தேசிய சபை என்கின்ற ஒரு விடயம் இந்த பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றது.இது நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றேன்.

இந்த தேசிய சபையின் ஊடாக இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்துக் கட்சி  பிரதிநிதித்துவத்தையும் கொண்டு தேசிய சபை உருவாக்கப்பட்டு நாட்டினுடைய பொருளாதார பிரச்சினைக்கான தீர்வைக் காண வேண்டும் என்ற ஜனாதிபதியின் ஆலோசனையின் பெயரில் இந்த விவகாரம் பாராளுமன்றத்திற்குள் வந்திருக்கின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்கள், கௌரவ பிரதம அமைச்சர் அவர்கள். கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள். அரசாங்கக் கட்சியின் முதற் கோல் ஆசான் அவர்கள்,அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்து  ஒன்பதாவது பாராளுமன்றத்தை  பிரதிநிதித்துவப்படுத்துகின்ற   35 க்கும் மேற்படாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசிய சபை உருவாக்குவதற்கான முயற்சி நடக்கின்றது.

அதனுடைய நோக்கங்களும் கூட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்காக வழிகாட்டுவதுடன் தொடர்புடைய பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரைகளை நிர்ணயித்தல்.

அதேபோன்று பொருளாதார நிலைப்படுத்தலுடன் தொடர்புடைய குறுகிய மற்றும் நடுத்தர கால ஆகக் குறைந்த நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தல்.

அமைச்சரவையின் அமைச்சர்கள்,தேசிய சபை, விசேட குழுக்களின் தலைவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் இளைஞர் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கின்ற விசேட கூட்டங்கள் தொடர்பான பணிகளை ஒழுங்கு செய்தல். துறை சார் மேற்பார்வை குழுக்கள், அரச நிதி பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, அரச தொழில் முயற்சிகள் பற்றிய குழு மற்றும் அரச நிதி நிர்வாகத்தை மேற்கொள்கின்ற யாதேனும் ஒரு குழுவிடம் இருந்து அறிக்கைகளை கோரும் அதிகாரம் உள்ளிட்ட பல நன்னோக்கத்திற்காக தேசிய சபை உருவாக்கப்பட இருக்கின்றது.

 உண்மையில் ஒரு இடர்பாடு மிக்க சூழலில் தேசிய சபை உருவாக்கப்பட்டு அதனூடாக மீண்ட நாடுகளின் வரலாறுகள் உள்ளன.

இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் தேசிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது இவ்வாறானதொரு தேசிய சபையை பாராளுமன்றத்தில் உருவாக்கி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பங்கேற்புடன் நாட்டைக் கட்டியெழுப்பியமைக்கு இந்த இரண்டு  நாடுகளையும் உதாரணமாகச் சொல்வேன்.

அதே போன்று பிஜியில் ஏற்படுத்தப்பட்ட சபையும் ஒரு பொருளாதார தேசிய சபையாக உருவாக்கப்பட்டு அதனூடாக அந்த நாட்டை நல்லதொரு நிலைக்குக் கொண்டு வந்ததையும் நான் இங்கு நினைவு கூறுகின்றேன்.

எனவே இந்த தேசிய சபையினூடாக ஒரு இடர்பாடு மிகுந்திருக்கின்ற நிலையில் ஒரு தீர்வை நோக்கி நகர்கின்ற முயற்சி பாராட்டத்தக்கது. 

ஆனால் இந்த முயற்சியை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும், இந்த பாராளுமன்ற விவாதம் எவ்வாறு  நோக்கப்பட்டிருக்கவேண்டும் என்றால் இந்த தேசிய சபையை எவ்வாறு வினைத்திறனாக பயன்படுத்துவது, இதற்கு எங்களுடைய ஆலோசனைகள் என்ன,இதனை எவ்வாறு பயன்படுத்தக் கூடாது என்கின்ற ரீதியிலே காத்திரமான விவாதங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

எதை எடுத்தாலும் பழைய பஞ்சாங்கங்களை பேசி,பழைய குரோதங்களைப் பேசி, மீண்டும் மீண்டும் ஒரே விடயங்களை ஞாபகப்படுத்தி உப்புச்சப்பில்லாத விவாதங்களாக பலருடைய உரைகள் இங்கு இருப்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

 அவ்வாறல்லாமல் ஒரு தேசிய சபையினூடாக  எவ்வாறான நிலைகளை உருவாக்க முடியும் என்பதைப் பற்றி சிந்திப்பது பொருத்தமான ஒரு விடயமாகும் என்றும் நினைக்கின்றேன்.

ஒரு இடர்பாடு ஏற்படுகின்ற போது அதிலிருந்து மிகச் சிறந்த ஒரு வெற்றியாளராக வெளிவருவது காலத்தின் தேவையாகும்.  வின்ஸ்டன்  சர்ச்சில் என்கின்ற பிரித்தானிய முன்னாள் பிரதமர் சொன்னார், ஒரு இடர்பாடு ஏற்படுகின்ற போது அதனைக் கொண்டு மிகச் சிறந்த நிலையை உருவாக்குங்கள்.அது முக்கியம் என்று சொன்னார்.

அது போன்றுதான் வளர்ச்சி அடைந்த நாடுகளிலே மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த பின்னர்தான் பெரும் பாய்ச்சலுடன் அந்த நாடுகள் முன்னேறி இருக்கின்றது.

ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் தாக்கப்பட்டபோது அடுத்த தலைமுறையும் பாதிக்கப்படும் ஆபத்து வேறு எந்த நாடுகளுக்கும் ஏற்படவில்லை. ஹிரோஷிமா  நாகசாகி போன்ற நகரங்களில் போடப்பட்ட குண்டுகள் அம் மக்களை மட்டும் அல்ல அடுத்து வரும் இரண்டு மூன்று தலைமுறைகளையும் அந்த நோய் தொற்றுகின்ற நிலைமை இருந்த போதும் தமது தவறுகளை ஒத்துக் கொண்டு,நமக்கு அநியாயம் செய்தவர்களை பழி தீர்ப்பதை விடுத்து நாம் எப்படி இந்த நிலையிலிருந்து முன்னேறலாம் என்பது பற்றி சிந்தித்தார்கள்.அதனால்தான் மிக முன்னேறிய நாடாக அவர்கள் மாறி இருக்கின்றார்கள்.

இடர்பாடு நமக்கு இன்று மிக முக்கியமான ஒரு பிரச்சினையாகும்.நாம் சில ஆபத்தான இடர்பாடுகளையும் சந்தித்திருக்கின்றோம். அவற்றினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 உதாரணமாக 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சி இந்த நாட்டில் இருந்தது. அப்போது சிறிமாவோ அம்மையாரினால் உற்பத்திப் பொருளாதாரம் நாட்டில்  கொண்டுவரப்பட்டது.

 சுதந்திரம் அடைந்திருந்த இந்த நாட்டை ஒரு குடியரசு நாடாக மாற்றினார். இப்படியான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்திலும்  இதே போன்றதொரு வரிசையிலும் மக்கள் நின்றார்கள்.

பொருட்களுக்கான தட்டுப்பாடு இருந்தது. அப்போதெல்லாம் சிறிமா அம்மையாரின் நிர்வாகத்தில் பிழை இருக்கின்றது,வேறு பல காரணங்களையும் சொன்னோம். ஆனால் 1973, 1974 காலப்பகுதியில் உலக சந்தையில் பெட்ரோலியத்தின் விலை நான்கு மடங்காக அதிகரித்திருந்தது.

நான்கு மடங்காக அதிகரித்திருந்த நிலையில் உற்பத்திப் பொருளாதாரத்தில் புரட்சிகரமான முன்னேற்றத்தை அந்த அம்மையார் கொண்டு வந்த போதும் அந்த விலை ஏற்றத்தை தடுக்க முடியாமல் பெரும் நெருக்கடிக்குள்ளானார்.

ஆனால் தேர்தல் அரசியலை செய்கின்ற நாங்கள். அன்றிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவின் முயற்சிக்கு ஒரு உந்துதலை கொடுத்து இக்கட்டான நிலையில் இருந்த நாட்டை மீட்பதற்கான ஒரு வழிவகையை  செய்திருந்தால் நாடு நிரந்தரமான உற்பத்திப் பொருளாதாரத்தின் ஊடாக நாடு சிறந்த நிலையை அடைந்திருக்க முடியும்.

அண்மையில் ஜனாதிபதி அவர்கள் தனது அக்கிராசன உரையில், இலங்கையில் கொண்டு வரப்படுகின்ற எண்ணெயை எடுத்துப் பார்த்தால்  அந்த எண்ணெயில் சுமார்   ஆயிரம் மில்லியன் டாலர்கள் மாதாந்த  வருமானம் கிடைப்பதென்றால், கிட்டத்தட்ட 350 மில்லியன் ரூபாய்களை எதற்காக செலவழிக்கின்றோம் என்றால் எண்ணெய் இறக்குமதிக்காக செலவழிக்கின்றோம்.

எரிபொருளிலே 70 வீதம் வாகனங்களுக்காக செலவழிக்கின்றோம்.ஏனைய 21 வீதம் மின்சார உற்பத்திக்கு செலவழிக்கின்றோம்.வெறுமனே தொழில்துறைக்கு நான்கு வீதம் மாத்திரமே செலவழித்துக்கொண்டிருக்கின்றோம்.

எனவே தொழில்துறை அற்ற ஒரு நாடு எவ்வாறு உயர்ச்சி பெறும். உற்பத்திப் பொருளாதாரம் இல்லாத நாடு எவ்வாறு வளர்ச்சி பெறும், இது மிக முக்கியமாக கேள்விக்குட்படுத்த வேண்டிய விடயமாகும்.

இன்று நமக்கு ஏற்பட்டிருக்கின்ற இவ்வாறான ஒரு இடர்பாட்டு நிலைக்கு சுதந்திரத்திற்கு பின்னரான பலரும் காரணம் என்று சொல்லப்படுகின்ற நிலையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.நிச்சயமாக அவர்களது பிழையான தீர்மானங்கள் நாட்டுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதே சமயத்தில் இதற்குப் பின்னரான கால கட்டத்தில் எதிர் நோக்கும் சவால்கள் என்ன என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சாதாரணமான பிரச்சினையை நாம் எதிர்நோக்கப் போவது அல்ல. எரிபொருளுக்கான விலை அதிகரிப்பு, அதே போன்று மின்சாரக் கட்டணத்திற்கான அதிகரிப்பு இந்த நாட்டிலே நெருக்கடியை அதிகரித்திருக்கின்றது. 

மக்கள் அவதிப்படுகிறார்கள் உண்மை.நாங்கள் ஒரு விடயத்தை புரிந்தாக  வேண்டும். கடந்த வாரம் செக் குடியரசு தலைநகரத்தில் சுமார் எழுபதாயிரம் பேர் கூடி எரிசக்தியின் விலை அதிகரிப்புக்கு எதிராக போராடியிருக்கின்றார்கள்.

இன்றைய உலகத்தை நாம் உற்று நோக்க வேண்டும்.   உக்ரயனுடைய யுத்தத்துக்குப் பின்னர் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. 

சீன நாடு எதைச் செய்த போதும் முன்னேறிக்கொண்டிருந்த நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். பொருளாதார ரீதியில் முன்னொரு போதும் இல்லாத வகையில் சீனா பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது என்பதை  புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றது.

அதேபோன்று ஐரோப்பிய யூனியனுக்கு கொடுக்கின்ற எரிசக்தியை நிறுத்தப் போவதான எச்சரிக்கையை ரஷ்யா விடுத்துக் கொண்டிருக்கின்றது.

எனவே உலகத்தில் பொருளாதாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும்,பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கும் இப்போது காலம் கனிந்திருக்கின்றது.

 இன்று கோதுமை மாவுக்குரிய பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்ற நிலையில் எதிர்காலம் மிக ஆபத்தானதாக உள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலையை விட    மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஆகஸ்ட் மாதமளவில் ஏற்படும் என்றும் ஐ எம் எஃப்  உடைய நிறுவுனர் இப்போது தெரிவித்துள்ளார்.


எனவே இந்தக் கதைகளை வைத்து நாம் பார்க்கின்ற போது  உலகம் மிகப்பெரும் ஆபத்தை சந்திக்கவுள்ளது.குறிப்பாக இலங்கையும் சந்திக்க உள்ளது.இந்த ஆபத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கு, இந்தத் துயரத்தில் இருந்து மீட்சி பெறுவதற்கு வழி என்ன என்று  சிந்திக்கின்றபோது இந்தத் தேசிய சபை ஒன்றே நமக்கு முன்னால் உள்ள தீர்வாகும்.

இந்தத் தேசிய சபையூடாக எத்தகைய பங்களிப்புகளை இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்க வேண்டும்,கட்சித் தலைமைகள் எவ்வாறு பொறுப்புத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற தெளிவு இருக்க வேண்டும்.

அண்மையில் பார்த்தேன் ஒரு கட்சியினுடைய தலைவர் ஒலுவில் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது தேர்தல் முறையை மாற்ற ஜனாதிபதி முயற்சி செய்கிறார்.இதற்கு ஒரு போதும் விடமாட்டோம். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக சொல்கிறார்.இது ஒரு சர்வாதிகாரம் என்ற தொனியில் பேசி அங்குள்ள மக்களை முட்டாள்கள் என்று நினைத்து  பேசினாரோ தெரியவில்லை.

சர்வஜன வாக்கெடுப்பு என்பதே ஒரு ஜனநாயகத்தின் முக்கிய குறிகாட்டியாகும்.மக்களிடம் ஆணையை கோருகின்ற ஒரு விடயமாகும்.

தேர்தல் முறையில்  நல்லதொரு முடிவுக்கு வாருங்கள்,கட்சிகள் சேர்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வர முடியாவிட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்கு போவோம் என்று ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார்.எனவே அது நல்ல விடயம். தேர்தல் முறை மாற்றத்திற்கு எதிராக கோஷமிடும் அந்தத் தலைவர்களின் பேச்சைக் கேட்கின்ற போது எனக்கு சிரிப்புத்தான் வந்தது.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் வந்த போதும் அதற்கு ஆதரவாக கையை உயர்த்தினோம். அதே போன்று மாகாண சபை திருத்தச் சட்டம் வந்தபோதும் கையை உயர்த்தினோம் .மாகாண சபை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டால் முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவம் குறையும். ஏனைய சிறுபான்மையினத்தவர்களின்  பிரதிநிதித்துவமும் குறையும் என இருந்த போதிலும், எச்சரிக்கப்பட்ட போதிலும் கூட கையை உயர்த்தினார்கள்.

மாகாணங்ளுக்கென்று இருந்த ஒரே அதிகாரம் மாகாண சபையாகும், சமஸ்டி வரை கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு ஒரு ஆறுதல் தான் மாகாண சபை ஆகும்.

மகாண சபை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கையை உயர்த்திவிட்டு இப்போது புதிய தேர்தல் சட்டத்தை எதிர்ப்போம் என்பதான இந்தப் பொய் கோஷங்களைப் பேசாமல் நாட்டுக்கு நல்லதைச் செய்ய வாருங்கள்.

தேசிய சபையிலும் நீங்கள் வருகின்ற போது எல்லோரும் தவறிழைத்திருக்கிறோம். இனிமேலாவது அந்தத் தவறிவிருந்து விடுபடுங்கள். 

உள்ளூராட்சி சபை புதிய தேர்தல் முறை எல்லோருக்கும் புதிதாக இருந்தது தேர்தல் நடைபெற்று ஆட்சியை கொண்டு நடத்துகின்ற போதுதான் இந்த முறைமை எவ்வளவு பிழையானது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.இதில் இவ்வளவு சிக்கல்கள் இருப்பதை இந்தப் பாராளுமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

எனவே நாம் எடுத்த தீர்மானங்கள் பிழையாக இருக்கலாம். -அந்தத் தவறுகளை ஒத்துக் கொண்டு தேசிய சபையினூடாக நல்ல பல சட்டங்களைக் கொண்டு வாருங்கள். பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டு வாருங்கள்.சரியான வரி விதிப்பு இல்லை இறுக்கமான நல்ல சட்டமூலங்களை கொண்டு வந்து  இந்த நாடு தேசிய சபையினூடாக  கட்டமைக்கப்பட வேண்டும் என பிரார்த்தித்து விடைபெறுகின்றேன் என்றார்.









தேர்தல் மைய அரசியலில் இருந்து விடுபட்டு தேச மைய அரசியலை உருவாக்க சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் - முஷாரப் MP தேர்தல் மைய அரசியலில் இருந்து விடுபட்டு தேச மைய அரசியலை உருவாக்க சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் - முஷாரப் MP Reviewed by Admin on October 14, 2024 Rating: 5

No comments:

Responsive Advertisement 3